இத்திட்டம் பற்றி நான் புரிந்து கொண்டது:
**தினமும் மூன்று மணி நேரம் மட்டுமே கல்வி.
**மீதி நேரம் அப்பா/குடும்பத்தினர்
செய்யும் தொழிலை கற்றுக் கொள்ளலாம், இல்லையேல் கட்டாயமில்லை, வேறு தொழிலும் பழகலாம்.
இது குறித்து வெளியாகியுள்ள பல பதிவுகளும்(இத்திட்டத்திற்கு ஆதரவானவர்கள் எழுதியதும், எதிர்ப்பவர்கள் எழுதியதும்), என் புரிதல் சரி என்பதையே உறுதி செய்கிறது.
ஆனால் திரு.ஜீவி அவர்கள் தன் மறக்கமுடியாத மதுரை நினைவுகள் -2 பதிவில்,
பள்ளிகளில் வழக்கத்தில் இருந்த கைத்தொழில்/குடியுரிமைப் பயிற்சி வகுப்புகளே, "குலக்கல்வித் திட்டம்" என்று தெரிவித்துள்ளார்.
**வாரத்தில் இரண்டு வகுப்புகள்(பீரியட்) மட்டுமே இந்த வகுப்புகள் இருக்கும்.
**இதற்கான பயிற்சி பள்ளியில் வழங்கப் படும்.
(நான் படித்த போது எங்கள்பள்ளியில் [6 முதல் 10வரை படித்த அரசு உயர்நிலைப்பள்ளியில்] விவசாய வகுப்புகளும், நீதிபோதனை வகுப்புகளும் இருந்தது. என் தம்பி படித்த நடுநிலைப் பள்ளியில் தச்சுக்கலை(க்ராப்ட்) மற்றும் நெசவு வகுப்புகள் இருந்தன. நான் 10வகுப்பு முடித்தது 1996ம் வருடம்)
ஆனால் நான் அறிந்த வரையில் ராஜாஜியின் குலக்கல்வித் திட்டத்தின் படி,
ஒரு நாளில் 3 மணி நேரம் மட்டுமே பள்ளி நடக்கும்.மீதமுள்ள நேரத்தில் தன் குடும்பத்தொழில்/ வேறு தொழில்கள் செய்துகொள்ளலாம்.
இதற்க்குப் பள்ளிகளில் எந்த வகுப்புகளும் கிடையாது. மதிப்பெண் எதுவும் கிடையாது.
திரு.ஜீவி அவர்கள் கைத்தொழில் வகுப்புகளையும், குலக்கல்வித் திட்டத்தையும் குழப்பிக்கொள்கிறாரா, அல்லது வேண்டுமென்றே தவறான ஒரு தகவலைத் தருகிறாரா என்று தெரியவில்லை.
*************************************
இனி குலக் கல்வித் திட்டம் பற்றி:
ராஜாஜி அவர்கள் முதல்வராக இருந்த போது[1952-1954] இருந்த நிதி நெருக்கடியின் காரணமாக, சுமார் 6000 பள்ளிகளை மூடிவிட்டு மீதமுள்ள பள்ளிகளில் காலை 3 மணி நேரம் ஒரு பகுதி, மாணவர்களுக்கும், மாலை 3 மணி நேரம் ஒரு பகுதி மாணவர்களுக்கும் வகுப்புகள் நடத்தத் தொடங்கப்பட்ட திட்டம் தான் இது.
மீதமுள்ள நேரம் மாணவர்கள் என்ன செய்வார்கள் என்ற கேள்வி எழுந்தபோது(மாற்றுக் கருத்து கொண்டவர்கள் எழுப்பியபோது) அவர் தெரிவித்தது தான், இந்த "குடும்பத்தினர் செய்யும் தொழிலை கற்றுக் கொள்ளலாம் இல்லையேல் கட்டாயமில்லை, வேறு தொழிலும் பழகலாம்."
இத்திட்டம் கொண்டுவரப்பட்ட நேரத்தில்:
**சில நூற்றாண்டுகளாகப் படிப்புரிமை மறுக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப் பட்ட வகுப்பினரில் 70%க்கும் மேற்பட்டோர் முதல் தலைமுறையாகப் பள்ளிக்குச் செல்லத் தொடங்கியிருந்தனர்.
**முற்படுத்தப்பட்ட வகுப்பினரில் 70%க்கும் மேற்பட்டோர் பல தலைமுறைகள் கல்வி கற்று நல்ல வேலைகளில் இருந்தனர்.(அரசுப் பணிகளில்
70%க்கும் மேல் இருந்தனர்.)
இத்திட்டம் செயல்படுத்தப் பட்டிருந்தால்
**முதல் தலைமுறையாகக் கல்வி கற்கும், பெற்றோர் குலத்தொழில் புரியும் 70% மாணவர்கள், தங்கள் தந்தை செய்யும் தொழில் மட்டுமே கற்றிருக்க முடியும். கல்வியறிவற்ற தந்தைகள் அவர்களுக்கு வேறு எந்தப் பயிற்சியும் அளிக்க முடியாது. வீட்டில் பெற்றோர் எதுவும் சொல்லித்தர முடியாத நிலையில் 3 மணி நேரக் கல்வியால் அவர்கள் என்ன கற்றுக் கொண்டிருக்க முடியும்?
**முந்தய தலைமுறைகளில் இருந்து நல்ல கல்வியறிவு பெற்ற, உயர் வகுப்பினர், தன் பிள்ளைகளுக்குத் தேவையான பயிற்சிகள் தந்திருப்பர். "வெள்ளைக் காலர் பணி"களுக்குத் தேவையான அனைத்துப் பயிற்சிகளும் இவர்களுக்கு அளிக்கப் பட்டிருக்கும். இவர்களுக்கு, அந்த 3 மணி நேரக் கல்வி தவிர பல பயிற்சிகள் இவர்கள் பெற்றோர்களிடமிருந்து கிடைத்திருக்கும்.
இவ்வாறு இருக்கும்போது எப்படி முதல் தலைமுறையாகக் கல்வி கற்றவர்கள் பலதலைமுறையாக நல்லநிலையில் இருப்பவர்களிடம் போட்டியிட்டு வேலைகள் பெற்றிருக்கமுடியும்? இத்திட்டம் செயல்பட்டிருந்தால் அரசுப்பணிகள், மருத்துவம், பொறியியல் மற்றும் அனைத்துத் துறைகளிலும் முற்படுத்தப் பட்ட மக்களின் ஆதிக்கம் இன்னும் இருந்து கொண்டுதானே இருக்கும்? விவசாயி மகன் விவசாயியாகவும், துணி துவைப்பவர் மகன் துணி
துவைப்பவருமாகத் தானே இருந்திருக்க முடியும்? இத்திட்டத்தை பெரியார், காமராசர் முதல் சாதாரண மக்கள் வரை
எதிர்த்ததில் என்ன தவறு இருக்கிறது?
----------------------
ராஜாஜி அவர்களுக்கு "அப்பன் வேலையத் தான் பிள்ளை செய்யவேண்டும்" என்ற உள்நோக்கம் இல்லை என்றே வைத்துக்கொண்டாலும்,
இத்திட்டம் நிதிப் பற்றாக்குறையை சமாளிக்கக் கொண்டுவரப்பட்டது எனில்,
ராஜாஜிக்குப் பின்வந்த கர்மவீரர் காமராசரால் எப்படி
மூடப்பட்ட 6000 பள்ளிகளையும் திறந்து அதற்கு மேலும் புதிய பள்ளிகள் திறக்க முடிந்தது?
(என் அம்மா, அப்பா 10ஆம் வகுப்பு வரை படித்ததும், அவர்கள் எங்களைப் பட்டப்படிப்புகள் வரை படிக்கவைத்ததும் காமராசரால் தான். இது எனக்கு மட்டுமில்லை, என் தலைமுறையில் இருக்கும் பெரும்பாண்மையோருக்கும் இது பொருந்தும்)
பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப மறுத்தவர்கள், மூன்று மணி நேரமாவது பள்ளிகளுக்கு அனுப்புவார்கள் என்பதற்காக கொண்டுவரப்பட்டதென்றால்
காமராசரால் மதிய உணவுத்திட்டத்தின் மூலம் அனைத்து மாணவர்களையும் முழுநேரமும் பள்ளிக்குக் கொண்டு வரமுடிந்ததே?
இதில் யார் சிறந்த நிர்வாகி?
6000 பள்ளிகளை மூடிய ராஜாஜியா?
இல்லை கல்விக்கண் திறந்த கர்மவீரரா?
*************************************
அடுத்த பதிவு: ராஜாஜி மூதறிஞரா?
(ஒன்று அல்லது இரண்டு வாரங்களில்)
இதுவும் ஜீவி அவர்களின் அதே பதிவில் கேட்டிருந்த கேள்விக்குப் பதில் தான்.
//
குலக்கல்விக்கு வித்திட்டவர் என்று கூசாமல் சொன்ன வாயால், அவரையே 'மூதறிஞர்' என்று எப்படிப்புகழ்பாட முடிகிறது என்பது புரியவில்லை. மூதறிஞர் என்று அவரை அழைக்கும் அளவுக்கு அவருக்கு என்ன நன்றிக்கடன் பட்டிருக்கிறார்களோ,அதுவும் தெரியவில்லை.
//
இந்த வரிகளை, ஜீவி அவர்கள் பெரிதும் மதிப்பதாகக் கூறும் பெரியார் மீதும், காமராசர் மீதும்,
குலக்கல்வித் திட்டத்தை எதிர்த்த மற்ற தலைவர்களின் மீதும் பரப்பப்படும் அவதூறாகவே கருதமுடிகிறது.
இதற்கு என் அடுத்த பதிவில் பதில் தருகிறேன்.
தொடர்பான சில சுட்டிகள்:
ஜீவி அவர்களின் பதிவு: http://jeeveeji.blogspot.com/2007/11/2.html
திரு அவர்களின் பதிவு: http://aalamaram.blogspot.com/2006/08/blog-post_11.html
விக்கிப்பீடியாவில்: http://en.wikipedia.org/wiki/Hereditary_Education_Policy
இதையும் பாருங்கள்: http://www.geocities.com/tamiltribune/07/1102.html





