Thursday, June 26, 2008

பின்னூட்ட டெம்ப்ளேட்டுகள் விற்பனைக்கு!!!!

தினந்தோறும் வெளியாகும் நூற்றுக்கணக்கான பதிவுகளுக்குப் பின்னூட்ட முடியாமல் திணறும் பதிவர்களில் ஒருவரா நீங்கள்? இதோ உங்களுக்காகவே இந்த சேவை!!!

அன்மையில் வெளியான தசாவதார விமர்ச்சனப் பதிவுகளுக்குப் என்ன பின்னூட்டுவதென்றே தெரியாமல் பல பதிவுகளுக்கு நான் பின்னூட்டவில்லை. இந்த நிலை வேறு யாருக்கும் இனி வராமல் இருக்க என்ன செய்யவேண்டும் என இரவு பகலாக சிந்தித்ததில் உருவானதே இந்த "பின்னூட்ட டெம்ப்ளேட் மென்பொருள்!!"

  • சிரிப்பான் பின்னூட்ட டெம்ப்ளேட்டுகள்

  • திரைப்பட விமர்ச்சனங்களுக்கான டெம்ப்ளேட்டுகள்
    • படத்தினைத் திட்டி வெளிவரும் பதிவுகளை ஆதரிக்கும் பின்னூட்ட டெம்ப்ளேட்டுகள்.

    • படத்தினைத் திட்டி வெளிவரும் பதிவுகளை எதிர்க்கும் பின்னூட்ட டெம்ப்ளேட்டுகள்.

    • படத்தினைப் பாராட்டி வெளிவரும் பதிவுகளை ஆதரிக்கும் பின்னூட்ட டெம்ளேட்டுகள்.

    • படத்தினைப் பாராட்டி வெளிவரும் பதிவுகளை எதிர்க்கும் பின்னூட்ட டெம்ப்ளேட்டுகள்

  • திமுக, அதிமுக உட்பட அனைத்துக் கட்சிகளையும் ஆதரித்து/எதிர்த்து வரும் பதிவுகளுக்கு ஆதரவான/எதிரான பின்னூட்ட டெம்ப்ளேட்டுகள்

  • சிறு கதைகளுக்கான பின்னூட்ட டெம்ளேட்டுகள்

  • தொடர்கதைகளுக்கான பின்னூட்ட டெம்ப்ளேட்டுகள்

  • கவிதைகளுக்கான பின்னூட்ட டெம்ப்ளேட்டுகள்

  • கவுஜைகளுக்கான பின்னூட்ட டெம்ப்ளேட்டுகள்

  • கவிதை/கவுஜை மாதிரிகளுக்கான பின்னூட்ட டெம்ப்ளேட்டுகள்

  • இறை மறுப்பு ஆதரவு/ எதிர்ப்புப் பதிவுகளுக்கான பின்னூட்ட டெம்ப்ளேட்டுகள்

  • ஆரிய/திராவிடப் பதிவுகளுக்கான பின்னூட்ட டெம்ப்ளேட்டுகள்.

  • பின்னூட்ட பாலா/பாலச்சந்தர் பின்னூட்ட டெம்ப்ளேட்டுகள்

  • கேள்வி பதில் பதிவுகளுக்கான கேள்விப் பின்னூட்ட டெம்ப்ளேட்டுகள்

  • ஸ்டார் பதிவர்களின் பதிவுகளுக்கான பின்னூட்ட டெம்ப்ளேட்டுகள

உட்பட 1970 வகைப் பதிவுகளுக்கான 13452587 பின்னூட்ட டெம்ப்ளேட்டுகளை இந்த மென்பொருள் வழங்குகிறது.


இந்த மென்பொருளின் விலை 1234 சிங்கை வெள்ளிகள் மட்டுமே!! ஏதேனும் முக்கிய நிகழ்ச்சிகள் (எ.கா : குசேலன் வெளியீடு) நடக்கும்போது அதற்கான சிறப்புப் பின்னூட்டங்களும் இம்மென்பொருளை வாங்குவோருக்கு இலவசமாய் அளிக்கப்படும்..


இந்த மென்பொருளை வாங்க விரும்புவோர் SG$1234 காசோலை அல்லது வரவோலை அல்லது உங்களுக்குப் பிடித்த ஏதோ ஒரு ஓலையாக கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பவும். உடனே உங்களுக்கு இந்த மென்பொருள் அஞ்சலில் அனுப்பப்படும்.


முகவரி:

பின்னூட்ட சேவை மையம்,

#123-12345,

1456,சிங்கப்பூர் முதல் குறுக்குச்சந்து,

சிங்கப்பூர் பிரதான சாலை,

சிங்கப்பூர் -12345678.


குறைந்த அளவு குறுந்தகடுகளே இருப்பதால் விரைவில் அனுகவும்!!!!


இந்த மென்பொருளை வாங்குவோர் தங்களுக்குக் கீழ் 2 பேரை சேர்த்தால் 25% பணம் திரும்பக் கிடைத்துவிடும். அந்த இரண்டு பேர் அவர்களுக்குக் கீழ் தலா இரண்டு பேரை சேர்த்தால் மேலும் ஒரு 12.5% பணம் திரும்பக் கிடைத்துவிடும். இப்படியே உங்களுக்கீழ் 12345 பேரை சேர்க்கும் போது நீங்கள் கோடீஸ்வரர் ஆகிவிடலாம்... விரைவில் இத் திட்டத்தில் சேர்ந்தால் விரைவில் கோடீஸ்வரர் ஆகலாம்... முந்துவீர்!!!!!!!

குறிப்பு:
இந்தப் பின்னூட்ட மென்பொருள் மூலம் போடப் படும் பின்னூட்டங்கள் பின்னூட்டிகளின் கருத்துக்களாகவே பதிவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த டெம்ப்ளேட் மூலம் போடப்படும் பின்னூட்டங்களுக்கு நிர்வாகம் பொறுப்பேற்காது!!! பின்னூட்டிகள் பின்னூட்டத்தைப் போடும் முன் சரிபார்த்துக் கொள்ளவும்!!!

Saturday, June 21, 2008

ஆத்தா கோபத்தில் இருந்து தப்பிப்பது எப்படி?

மலேசிய மாரியாத்தாவின் உக்கிரப் பார்வை என்பக்கம் திரும்பியுள்ளது..

எப்படித் தப்புவது என்றே தெரியவில்லை. யாராவது உதவுங்கள். ஆத்தாவின் கோபத்தில் இருந்து தப்ப என்ன செய்யவேண்டும் என யாராவது பரிகாரம் சொல்லுங்கள்.

நடந்தது என்ன?
வேற ஒன்னும் இல்லைங்க.. மலேசிய மாரியாத்தாவுக்கு பல்லைப் பிடுங்க அறுவை சிகிச்ச்சை நடக்கப்போகுதாம். அவங்க விரைவில் நலம் பெற வாழ்த்துக்களைத் தெரிவித்தேன். அந்தப் பதிவில் அப்படியே அவரது அருமை பெருமைகளை எல்லாம் கொஞ்சம் பாராட்டி எழுதியிருந்தேன். அவ்வளவுதான். இதுக்குப் போய் கோபப்பட்டு அலைபேசியில் காய்ச்சி எடுத்துட்டாங்க..

அவ்வளவுதான் முடிஞ்சதுன்னு நினைச்சா.. அங்க வந்து சிவாவும், நல்லவரும் இன்னும் சிலரும் கும்ம ஆரம்பிச்சாங்க... அதுக்கு வேற திட்டு.. என் அலைபேசியே அழுதுவிட்டது...

இது போதாதுன்னு இன்னும் 2 புல்லுருவிகள் இதை வைத்துப் பதிவிட்டு மேலும் கோபத்தை அதிகரிக்க வைத்துவிட்டனர்..

இதுல பாரி.அரசு இருக்காரே..... பதிவு போட்டு நம்ம முன்னோரையே கேவலப் படுத்தீட்டார்..

அண்ணே, எனக்கு அடுத்த வாரம் ஆப்புரேசன். அதுக்கு முன்னாடி தோசை வாங்கித்தாங்கன்னு ஆசையா தங்கச்சி கேட்டா, அதை வச்சுக் கும்மிப் பதிவு போடுறாரு கோவி... :(.. இதுல அவர் வருடக்கணக்கா தடை செய்து வச்சிருந்த அனானி/அதர் ஆப்சனைக் கூட கும்மிக்காக திறந்துவிடுறார்... இப்ப சொல்லுங்க ஆத்தாவுக்கு கோபம் கூடுமா.. கூடாதா? கோபம் கூடுது.. ஆனா எல்லாக் கோபமும் என்மேல தான் வருது அவங்களுக்கு...

எவ்வளவு கோவமுன்னா, ஊர்ல உலகத்துல இருக்குற எல்லாருக்கும் அனுப்பின அந்தப் பல்லு புகைப்படத்தைக் கூட எனக்கு அனுப்பல..... :(

இதுல அங்க போய் கும்மி அடிக்குறவங்க வேற..

அங்க விழுற ஒவ்வொரு கும்மிக்கும் இங்க எனக்குத் திட்டு.. கேட்டா, நான் தான் முதல்ல பதிவு போட்டு ஆரம்பிச்சு வைச்சேனாம்.. ஒரு வாழ்த்து சொன்னது இவ்வளவு பெரிய குத்தமா? :(

வலிக்குது காது. எவ்வளவு தான் திட்டு வாங்குறது... திட்டு வாங்கிக்கிட்டே சிரிக்கிறமாதிரி எவ்வளவு நேரம் தான் நடிக்கமுடியும்?

யாராவது சொல்லுங்களேன்... எப்படித் தப்பிக்கிறது ஆத்தாவின் உக்கிரப் பார்வையில் இருந்து? ஜோகூர் ஆத்தாவுக்கு கூழ் காய்ச்சி ஊற்றக் கூட தயார்.(ரவா தோசை தான் வேணுமின்னா அதுக்கும் தயார்...)

ஆத்தா அப்பாவிச் சிறுவனை மன்னித்து அருள் புரிவாயாக..... :P

மீண்டும் சொல்லிக்கிறேன்... அறுவை சிகிச்சை முடிந்து


இப்படி இருந்த துர்காவை


இப்படி ஆக்கீட்டாங்க எல்லாரும் சேர்ந்து... :(

மதி returns!!

நானும் கூட அழகுதான்... என்னருகில் இவள் இருந்தால்...


இவள் ரெம்பவே அழகு... அவளருகில் நான் இல்லையென்றால்...


















Wednesday, June 18, 2008

கண்ணைக் குத்தும் சாமியும், நக்சலைட் பதிவரும் - வலைக் கிசுகிசு

லேசியமாரியாத்தா, அ(டி)ப்பாவிச் சிறுமி, அறுந்த வாலு எனப் பல பெயர்களில் அறியப்படுகிறார் சிங்கையில் உயிரித் தொழில்நுட்பம் படிக்கும் பிரபல மலேசியப் பெண் பதிவர் ஒருவர். இவரைப் போலவே இவரது பல் ஒன்று சொன்னபடி கேட்காமல் மேலிருந்து கீழாக வளராமல், இடமிருந்து வலமாக வளர்ந்து விட்டதாம். இதனால் கிருமித் தொற்று ஏற்பட்டுவிட்டதாம். மருத்துவர், அந்தப் பல்லை அறுவைசிகிச்சை செய்து அகற்ற வேண்டும் (ஏம்மா, பல்லுப் பிடுங்குறதுக்கு உங்க ஊர்ல அறுவைசிகிச்சைன்னு பேரா :P ) என்று கூறிவிட்டாராம். இதனால் விரைவில் இவருக்கு அறுவை சிகிச்சை நடக்கப் போகிறதாம். இவர் விரைவில் நலமடைய வாழ்த்துவோம்..

(இவரின் சாட்டிங், தொலை/அலைபேசி அறுவைகளைத் தாங்கமுடியாத, பொய்யாக் கெட்டவர் உள்ளிட்ட சில பதிவர்கள், "இவர் விரைவில் நலமடையட்டும். ஆனால், குறைந்தது ஒரு மாதத்திற்காவது சாட்டிங் செய்யாமால், தொலை/அலை பேசாமல் இருக்கவேண்டும் என மருத்துவர் இவருக்கு அறிவுறுத்த வேண்டும் " எனக் கடவுளை வேண்டுகிறார்களாம்)

ன் பதிவில் பகுத்தறிவுக் கருத்துகளைப் பதிவிட்டுவரும் மலேசியப் பதிவர் ஒருவரின் பதிவுகளைப் பற்றி அவரது மனைவி அவரின் அம்மா, அப்பாவிடம் போட்டுக் கொடுத்துவிட்டாராம். அவரது வீட்டில் இப்போது அவருக்கு "சாமி கண்ணைக் குத்திவிடும்" எனக் கடும் எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளதாம். பதிவர் ஆடிப்போய் இருக்கிறார். யாருக்கும் தெரியாமல் இணைய மையங்களுக்கு வந்து வீட்டுக்குத் தெரிந்துவிடுமோ எனப் பயந்து பயந்து பதிவிடுகிறாராம் இப்போது...

மூத்த சிங்கைப் பதிவர் ஒருவரின் வீட்டிலும் இதே பிரச்சனையாம். என்னை
நக்சலைட்டா எனக் கேட்கிறார்கள் என பதிவர் சந்திப்பில் இவர் புலம்பினாராம். இவரது அண்ணன் இவரின் பதிவைப் படித்துவிட்டு, வீட்டில் "இவன் நக்சலைட் மாதிரி எழுதுறான்" எனப் போட்டுக் கொடுத்துவிட்டாராம். சமீபத்தில் ஊருக்குச் சென்றிருந்த அவர் வீட்டில் தங்காமல் பதிவர்களைச் சந்திக்க ஊர் ஊராகச் சுற்றியதைக் கண்டு, "நக்சலைட் ஆகீட்டயா?" எனக்கேட்டு பதிவரின் அம்மா நச்சரிக்க ஆரம்பித்துவிட்டாராம். இனிமேல் இப்படியெல்லாம் எழுதக்கூடாது என எச்சரித்து அனுப்பியிருக்கிறார்கள். வீட்டில் சமைக்கும் நேரம் தவிர எந்தநேரமும் கணிப்பொறி முன்னரே அமர்ந்திருப்பதைக் கண்டு கடுப்பில் இருக்கும் அவரது மனைவியும் தாக்குதலைத் தொடங்கியுள்ளாராம். இருமுனைத் தாக்குதலையும் சமாளித்து ஒரு நாளுக்கு 2 பதிவுகளைப் போட்டுத் தள்ளுகிறார் பதிவர். இவரால் மட்டும் எப்படித்தான் முடிகிறதோ... :P

சிங்கைப் பதிவர் சந்திப்பு குறித்துப் பதிவிட்ட பதிவர்களில் சிலருக்கு
"ஏண்டா **** * *** ***********,உன்னை மாதிரி *****
ஒண்ணா சேர்ந்து * தின்னறதுக்கு
பெயர் சந்திப்பாடா,**:( "

என ஒரு மனநோயாளியிடமிருந்து பின்னூட்டம் வந்திருக்கிறதாம். அந்த மனநோயாளியின் மனநோய் விரைவில் குணமடைய வாழ்த்துவோம்!!!

Monday, June 16, 2008

மங்களூர் சிவா & நிஜமா நல்லவனுக்கு ஒரு சவால்

உங்க ரெண்டு பேருக்கும் இப்படி ஒரு பின்னூட்டம் போட எப்படி மனசு வந்தது?
நிஜமா நல்லவன் said...
///ஜெகதீசன் said...
//பல பதிவர்கள் எழுத்துக்களில்தான் அனல் பறக்கும்//
சிவா... நீங்க என்னை சொல்லலியே... :P///
நீங்க தான் எழுதுறதே இல்லையே. அப்புறம் என்ன கேள்வி:)

மங்களூர் சிவா said...
/
ஜெகதீசன் said...
//பல பதிவர்கள் எழுத்துக்களில்தான் அனல் பறக்கும்//
சிவா... நீங்க என்னை சொல்லலியே... :P
/
நீங்கதான் எழுதறதே இல்லியே ஜெகதீசன் அதனால உங்க பதிவுல தூசிதான் பறக்குதாம் :))))
நான் என்ன உங்களை மாதிரி வெட்டியா உக்காந்துட்டு இருக்கேன்னு நினைச்சீங்களா?

காலைல அலுவலகம் வந்ததும்,
முதல்ல தட்ஸ் தமிழ் படிக்கனும்..

அப்புறமா தினமலர் படிக்கனும்..


அடுத்து தமிழ்மணத்தைத் திறந்து ஒவ்வொரு பதிவா நாள் முழுதும் படிக்கனும்.


பல பதிவுகளுக்கு ":)" பின்னூட்டம போடனும்.


பல பதிவுகளில் பின்னூட்டங்களுக்கு "வழிமொழிகிறேன்" போடனும்.


சில பதிவுகளுக்கு இரண்டு அல்லது 3 சொற்களில் பின்னூட்டம் போடனும்.


சில பதிவுகளுக்கு மூன்றுக்கு மேற்பட்ட சொற்களில் 4 அல்லது 5 பின்னூட்டங்கள் போட்டு கும்மனும்.


வரும் forwarded mailகள் எல்லாம் படிக்கனும்.


கொஞ்சம் மொக்கை mailகளுக்கு அதை விட மொக்கையா பதில் அனுப்பனும்..


இதற்கிடையில் அலுவலகத்தில் கொஞ்சம் ஆணியும் பிடுங்க வேண்டும்.


இத்தனை வேலைகளுக்கு நடுவில் ஒன்று அல்லது இரண்டு மாதங்களுக்கு ஒரு பதிவாவது போட்டுவிடுகிறேன்.. இது எவ்வளவு பெரிய காரியம்??

ஒரு நாளில் எத்தனை ":)" எத்தனை பின்னூட்டம் .... எத்தனை பின்னூட்டத்துக்கு பதில் .. எவ்வளவு tension... எத்தனை சாட்டிங் ..... எத்தனை email..
ஒரு நாள்... ஒரே நாள் நீங்க என் இடத்துல இருந்து பாருங்க.. அப்பத் தெரியும் என் சிரமங்கள் எல்லாம்..

சவாலுக்கு வறீங்களா?? ஒரு நாள் என்னோட இடத்துல இருந்து என்னோட வேலையெல்லாம் செஞ்சு பாருங்க.... அப்பத் தெரியும் பதிவு போடுறது எவ்வளவு சிரமம்ன்னு...

கடைசியா ஒன்னு சொல்லிக்கிறேன்.
நான் ஒரு பதிவு போட்டா..... அது 100 பதிவு போட்ட மாதிரி!!!!

Sunday, June 15, 2008

கழுத்தறுத்த கோவி.கண்ணன்... :P

பதிவர் சந்திப்பு சில துளிகள்..

கோவி.கண்ணன்.. பதிவர் சந்திப்பின் முக்கிய இலக்கணங்களில் ஒன்று போண்டாவுடன் சந்திப்பை முடிப்பது என்பது அனைவரும் அறிந்ததே. ஏதோ சில நொண்டிச்சாக்குகளைச்(கடையில் போண்டா இல்லை)சொல்லி போண்டா வாங்கித் தராத கோவியாருக்கு அனைவரும் உங்கள் கடும் கண்டனங்களைத் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.. :P

கிரி.. ரெம்ப நல்லவரா இருக்கார்.. 4:30க்கு வாங்கன்னா, சரியா 4:30க்கே வந்து நிற்கிறார். இவர் நேரம் தவறாமை பற்றி ரெம்பக் கற்றுக்கொள்ளவேண்டும்.[யாரோ இங்கிருந்து பேருந்தில் 20 நிமிடத்தில் பெடாக் சென்று விடலாம் என்று சொன்னதை நம்பி 4:00 மணிக்குக் கிளம்பினேன்.. பேருந்து அங்கு சென்று சேர 40 நிமிடம் ஆகிவிட்டது...:(]. ஈழத்தமிழர் விவகாரம் குறித்து பாரி.அரசுவிடம் சில விடயங்கள் கேட்டுத் தெளிவு பெற்றார் இவர்.

பாரி.அரசு.. கோவி.கண்ணன் நேற்று காலை அழைத்து பதிவர் சந்திப்பைப் பற்றி, பாரி.அரசுவைக் கலாய்த்து பதிவு எழுதச் சொல்லிக் கேட்டுக்கொண்டார். மன்னிக்கவும் கோவியாரே, அரசு நல்லவர்.. வல்லவர்... நாலுந்தெரிஞ்சவர்...கள அனுபவம் நிறைய உள்ளவர்.. அதனால் அவரை என்னால் கலாய்க்க முடியாது. ஆனாலும் இவர்தான் நேற்றய சந்திப்பின் கதாநாயகன்.. அவரது கள அனுபவங்களை அனைவருக்கும் விளக்கினார்.

செந்தில்(சிங்கை நாதன்).. இவரும் ரெம்ப நல்லவரு.. 5 மணிக்கே கடற்கரைக்கு வந்து காத்திருந்தார்..இவர் கொண்டுவந்திருந்த அல்வாவும், கேழ்வரகு முறுக்கும் சுவையாக இருந்தது. இவர் பதிவர் சந்திப்புகள் பல கடந்த மூத்த பதிவராம்.. ஆனால் இவரது பதிவு எது என்பதைத் தான் தங்கமலை ரகசியம் போல வெளியே சொல்லாமல் இருக்கிறார்.. இவரது பதிவைக் கண்டுபிடித்துத் தருவோருக்கு பின்னூட்ட நாயகன் இடுகைக்கு 1000 பின்னூட்டங்கள் வெகுமதியாகத் தருவதாக அறிவித்துள்ளார்...

வடுவூர் குமார்.. சந்திப்புக்கு வந்த எல்லாப் பதிவர்களையும் போல இவரும் பழகுவதற்கு மிகவும் இனிமையானவர். விரைவில் துபாய் செல்கிறார் இவர். அனைவருக்கும் இரவு உணவு இவர்தான் அளித்தார். தமிழ்99 தட்டச்சு முறையின் தேவை குறித்து பாரி.அரசுவிடம் சந்தேகங்கள் கேட்டு அவரிடம் விளக்கங்கள் பெற்றுக்கொண்டார்..

முகவை மைந்தன்.. முகவை குமாரின் பேக்கரிக்குப் பக்கத்து வீட்டுக்காரர்.:).. தமிழ்மணத்துடன் போராடி இப்போது தான் தன் பதிவைத் தமிழ்மணத்தில் இணைத்திருக்கிறார்.சுதந்திரம், கட்டுப்படுத்தப்பட்ட சுதந்திரம் பற்றி பாரி.அரசுவுடன் நல்ல விவாதம் புரிந்தார்.. முகவை குமாருக்குப் போட்டியாக விரைவில் ஒரு திரைக்காவியம் இவரே தயாரித்து, இயக்கி, பாடல் எழுதி, பாடி, கதாநாயகனாகவும் நடிக்கப் போவதாக ஒரு உறுதி செய்யப்படாத தகவல்... :P

சிவராம் முருகன்.. வலைப் பதிவு தொடங்கி, தமிழ்மணத்துடன் இணைத்ததுடன் சரியாம். அதன்பிறகு எதுவும் எழுதவில்லையாம்.. எழுதவே பயமாக இருக்கிறதாம் இவருக்கு.. கிரியிடம் சில ஆலோசனைகளைப் பெற்றுக்கொண்டார் பாதுகாப்பாகப் பதிவு எழுதுவது எப்படி என்பது குறித்து...விரைவில் எழுதத் தொடங்குவதாக உறுதியளித்துள்ளார். ஒயின் பாட்டிலைத் திறப்பது எப்படி என்பது குறித்து இவருக்கு விளக்க வகுப்பு எடுக்கப் பட்டது. இது குறித்து அவர் விரைவில் பதிவார்..

நான்... ஹிஹிஹி... இரும்படிக்குற இடத்துல "ஈ"க்கு என்ன வேலை.. அனுபவசாலிகள் தங்கள் அனுபவங்களையெல்லாம் பகிர்ந்து கொண்டார்கள்.. நான் முறுக்கு மற்றும் அல்வாவை சுவைத்துக் கொண்டே அவர்களது விவாதங்களை கவனித்துக் கொண்டிருந்தேன்..:P

மொத்தத்தில் சந்திப்பு பயனுள்ளதாகவும், இனிமையானதாகவும், புதிய அறிமுகங்களைப் பெற்றுத் தருவதாகவும் இருந்தது.. நான்கு மணி நேரம், ஏதோ அரைமணி நேரம் போல விரைவில் கடந்துவிட்டது. இன்னும் கொஞ்ச நேரம் இருந்தால் நன்றாக இருக்குமே என்ற ஏக்கத்துடனே கலைந்தது போல் இருந்தது அனைவரும்.. அடுத்த முறை சந்திப்பு ஏற்பாடு செய்யும் போது மாலை ஒரு 4 மணிக்கே தொடங்குவது போல் ஏற்பாடு செய்தால் ஒரு 2 மணி நேரம் அதிகம் செலவழிக்கலாம்...


மதி ஊருக்குச் சென்றபிறகு, சிங்கையில் இருந்த ஒவ்வொரு வார இறுதியும் ஏன் தான் வருகிறதோ என நினைக்கும் அளவுக்கு சிரமமாகவே இருந்திருக்கிறது எனக்கு, தனிமையின் காரணமாக. ஆனால் மற்ற வார இறுதிகள் போல் இல்லாமல்,

இந்தவார இறுதியை இனியதாக்கிய நண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்!!!!!!


சந்திப்பு குறித்த மற்ற பதிவுகள்:
சிங்கை சிங்கங்களின் சந்திப்பு !
கலகலப்பாக சென்ற சிங்கை வலைப்பதிவர் சந்திப்பு - கிரி

Friday, June 13, 2008

பதிவர் சந்திப்பு - குடை - கொஞ்ச்சம் மொக்கை

கோவி.கண்ணன் நாளை சிங்கையில் பதிவர் சந்திப்பு ஏற்பாடு செய்துள்ளார். சிங்கைப் பதிவர்கள் அனைவரும் கட்டாயம் கலந்துகொள்ளவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

இடம் : கிழக்குக் கடற்கரைப் பூங்கா (ECP), கோமளாஸ்/மெக்டொணால்ட் உணவகங்களுக்குப் பின்னால்.
(கிழக்குக் கடற்கரைப் பூங்க 2கி.மீட்டருக்கும் அதிக நீளமுள்ளது என்பதால் சரியான பேருந்து நிறுத்தத்தில் இறங்கவும். வாடகைக்கார்/ சொந்தக் காரில் வருவோர் ஓட்டுனரிடம் மெக்டொனால்ட் உணவகம் அருகில் இறக்கிவிடச் சொல்லவும்..)
...................

மலேசிய மாரியாத்தா வரப்போவதில்லை என்று சொல்லிவிட்டதால், வீணை மழை எதுவும் இருக்காது என்றாலும், வான் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக முன்னுரைக்கப்பட்டுள்ளதால் அனைவரும் கட்டாயம் குடைகளுடன் வரவும்...
...................
என்ன பேசலாம்?எதைப்பற்றி வேண்டுமானாலும் பேசலாம்.. ஆனால் சில விடயங்கள் முக்கியமாக விவாதிக்கப் படும் எனத் தெரிகிறது.

**கோவியார் வலையுலகில் இருந்து ஓய்வு பெறும் முடிவை சந்திப்பின் போது அறிவிப்பார் எனத் தெரிகிறது.(இதுவரை ஒரு நாளைக்கு 10 பதிவுகள் எழுதியவர், ஓய்வுக்குப் பிறகு 1 அல்லது 2பதிவுகள் மட்டும் எழுதுவார் எனத் தெரிகிறது) அத்துடன் தனது வலையுலக வாரிசாகப் பதிவர் பாரி.அரசுவை அறிவிப்பார் என எதிர்பார்க்கப் படுகிறது. வாரிசாகத் தன்னை அறிவிக்கவில்லை என்ற கோபத்தில் தான் டிபிசிடி மலேசியாவில் இருந்து இந்தியா திரும்பிவிட்டார் என்றும் தெரிகிறது.

**கோவியார் எடுத்த முதல் படம் சுமாராக ஓடிவிட்டதால் பாரி.அரசுவைக் கதாநாயகனாகக் கொண்டு(எவ்வளவோ பார்த்துட்டோம்.. இதையும் பார்க்கமாட்டமா என்ன...:P ) புதிய படம் எடுக்க முடிவு செய்துள்ளார். இந்தப் படம் முழுக்க முழுக்க சிங்கை மற்றும் மலேசியாவில் படமாக்கப் படும். பெயர் தெரியாத மலேசிய இந்தியர் ஒருவர் கதாநாயகி. கோவியாரும் இதில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பார் எனத் தெரிகிறது. இதற்கான கதை விவாதமும் நடக்கும் எனத் தெரிகிறது..

**பாரி.அரசு தனது "பீல்டு" அனுபவங்களை அனைவருக்கும் விளக்குவார் எனவும் தெரிகிறது..
.................

கோவியார் தனது தொலைபேசி எண்ணை(65 9876 7586) அவரது பதிவில் தந்திருக்கிறார். சந்திப்பு நடக்கும் இடத்திற்கு வர வழி தெரியாதவர்கள் அவரைத் தொடர்பு கொள்ளவும்.. எனது தொலைபேசி எண்ணும்(65 9002 6527) தந்திருக்கிறார். ஆனால் 1/2 மணி நேரத்தில் வந்து சேர்ந்துவிடக்கூடிய இடத்திற்கு என்னிடம் வழிகேட்டு வந்தால் 3 மணி நேரம் ஆகிவிடக்கூடிய வாய்ப்பு இருப்பதால் என்னிடம் வழிகேட்பதைத் தவிர்க்கவும்.. :)

எப்படியும் சந்திப்பு இனியதாக இருக்கும் என்பதற்கு என்னால் உத்திரவாதம் தரமுடியும். எனவே அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளவும்!!

Monday, June 9, 2008

நல்ல நடுவராவது எப்படி? - Guide for dummies

இப்பொழுதெல்லாம் தொலைக்காட்சிகளில் அதிக நடன நிகழ்ச்சிகள் வந்துவிட்டதால் நடுவர்களுக்கு கொஞ்சம் தட்டுப்பாடு இருப்பதாகத் தெரிகிறது.. இந்தப் பதிவின் நோக்கம் நல்ல நடுவர்களை உருவாக்குவதே..

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் வரும் நடுவர்களின் சில முக்கியமான பணிகள்:
1.பங்கேற்பவர்களைப் பாராட்டுவது.
2.பங்கேற்பவர்களைத் திட்டுவது.
3.பங்கேற்பவர்கள் அல்லது தொகுப்பாளர்களுடன் சண்டை போடுவது

இவற்றில் ஒவ்வொன்றாகப் பார்க்கலாம்..

பாராட்டுதல்:
உங்களுக்கு ஒருவரது நடனம் பிடித்திருந்தால் அல்லது நிகழ்ச்சி தொடங்கும் முன் அந்தப் பங்கேற்பாளர் உங்கள் மணம் குளிரும் அளவுக்கு உங்களுக்கு ஐஸ் வைத்திருந்தால் நீங்கள் அவரது நடனம் முடிந்ததும் அவரைப் பாராட்ட வேண்டியது மிகவும் அவசியம்.. இதற்கு சில ஆங்கில வார்த்தைகள் தெரிந்து கொண்டிருப்பது மிகவும் அவசியம்..

1. Excellent : உங்களுக்கு எத்தனை தடவை வேண்டுமோ அத்தனை தடவை சொல்லலாம் இதை... ரெம்பப் பிடிச்சிருந்தால் Excellent! Excellent!! Excellent!!! (நன்றி: சுந்தரம்) அப்படின்னு 3 தரம் சொல்லலாம்...
awesome!! great!! Superb போன்ற வார்த்தைகளையும் உபயோகப் படுத்தலாம்..

2.Mind Blowing: (நன்றி: உயிர் சங்கீதா) இது எல்லாஇதை நீங்கள் ஒரு எபிசோடுக்கு ஒருமுறையாவது கட்டாயம் பயன்படுத்தியிருக்கவேண்டும்..

3. செம செம செம / கம கம கம / தம தம தம : இப்படி எதாவது ஒரு புதிய வார்த்தைகள் உங்கள் நிகழ்ச்சியை மற்ற நிகழ்ச்சிகளில் இருந்து தனியாகக் காட்டும்படி வைத்துக் கொள்ளலாம்.. நடனம் எவ்வளவு நன்றாக இருக்கிறதோ அத்தனை முறை சொல்லலாம் (எ.கா: செம / செம செம/ செம செம செம செம.......)

4. உங்க பெர்பாமன்ஸ்லயே இது தான் டாப்..

திட்டுதல் / குறை சொல்தல்

1 நல்லா இருந்தது.. ஆனா.... :
கோடிட்ட இடத்தில் இதில் எதை வேண்டுமானால் சேர்த்துக் கொள்ளலாம்
-> பிடிக்கலை..
-> உங்ககிட்ட இன்னும் ரெம்ப எதிர்பாக்குறோம்
-> But, Something is missing... ஆனா என்னன்னு தெரியலை.. சாரி

2. அவங்க performance நல்லா இருந்தது: ஜோடியில் யாராவது ஒருவர் பெயரைக் குறிப்பிட்டு அவரோட performance நல்லா இருந்தது. ஆனா நீங்க சரியாப் பண்ணலை அப்படின்னு சொல்லி ஜோடிக்கு இடையில் சண்டை மூட்டி விடனும்.

3. choreography: உங்க performance நல்லாதான் இருந்தது.. ஆனா choreography சரியில்லை

4. group dancers: நீங்க நல்லாத் தான் ஆடுனீங்க ஆனால் க்ரூப் டான்சர்ஸ் சரியில்லை..

5. Hero மாதிரி ஆடுங்க: நீங்க உயிரைக் கொடுத்து ஆடுறீங்க.. நல்லா இருக்கு. ஆனால் டான்சர் மாதிரி ஆடுறீங்க.. கொஞ்சம் மாத்திக்கோங்க. ஹீரோ மாதிரி ஆடனும்..

6. Expressions: நல்லா இருந்தது... ஆனா expressions missing...

7. Eye contact: உங்க ரெண்டு பேருக்கு இடையில் eye contact ஏ இல்லை...

8. Lip movement: Lip movementஏ இல்லை/ சரியில்லை / female voice க்கும் சேர்த்து movement தறீங்க.....

9. Chemistry: ஜோடி நடன நிகழ்ச்சிகளில் மிகவும் முக்கியமான வார்த்தை இது.. இதை நீங்கள் கட்டாயம் ஒரு 4 முறையாவது ஒரு எபிசோடில் பயன்படுத்தியிருக்கவேண்டும். இல்லையென்றால் உங்களை நல்ல நடுவராக ஏற்றுக் கொள்ள முடியாது..
எ.கா:
chemistry நல்லா workout அயிருக்கு/ஆகலை..
நல்லாத்தான் ஆடுனீங்க... but chemistry is missing..

பங்கேற்பவர்கள் அல்லது தொகுப்பாளர்களுடன் சண்டை போடுவது:
நிகழ்ச்சி கொஞ்சம் சரியாகப் போகாதது போல் தெரிந்தால் உடனே இயக்குனர் உங்களை யாராவது பங்கேற்பாளருடன் சண்டை போடச் சொல்லுவார்.. அந்தப் பங்கேற்பாளருக்கும் இதைப் பற்றி ஏற்கனவே அறிவித்து அவருக்கும் பயிற்சி ஏற்கனவே அளிக்கப்பட்டிருக்கும்.. உங்களுக்கும் நிகழ்ச்சிக்கு முன்னரே தகுந்த பயிற்சி அளிக்கப்படும்...

ஆனால் நடிக்கும் போது கவனமாக இருக்க வேண்டும்.. கொஞ்ச்சம் தப்பினாலும் வெளியே தெரிந்துவிடும்..
1. பங்கேற்பாளருடன் சண்டை:
எனக்குப் பிடிக்கலை உங்க பெர்பாமன்ஸ்... இதுக்கு மேல நீங்க ஒன்னும் சொல்லக்கூடாது.. உடனே ஏன் பிடிக்கலைன்னு பங்கேற்பாளர் கேப்பார்.. உடனே நீங்க அழுக ஆரம்பிக்கனும்... எனக்கு நடிக்கத் தெரியாது அது இதுன்னு.. அப்படியே டாடா சொல்லீட்டு வெளிய போயிறனும்.. எல்லாரும் வந்து கெஞ்சுவாங்க.. அப்புறமா பிகு பண்ணிட்டு திரும்ப வந்துரனும்.. அந்த பங்கேற்பாளர் அதோட விலகிக்கொள்வார்... (எ.கா: சிம்பு - ப்ரித்திவ் )

ஜோடிகள் இருவரில் யாராவது ஒருவர் மட்டும் நல்லாப் பண்ணுறார்ன்னு நீங்க சொல்லனும்... உடனே மற்றவர் நான் விலக்கிறேன்னு போயிடுவார். அடுத்து ஜோடியைப் பிரித்து புதுசா ஒருத்தருடன் செர்த்துவிடனும்.. (எ.கா: s.j.சூர்யா - ஜீவா)

2. தொகுப்பாளருடன் சண்டை
இந்த மாதிரி எதும் சண்டை போட வாய்ப்புக் கிடைக்காத போது தொகுப்பாளருடன் சண்டை போட்டுட்டு கேரவனுக்குள்ள போயிடனும்..பின்னாடியே வற்ற கேமராமேனை விரட்டனும்.. கொஞ்சம் கூட பிரைவசி இல்லையா.. ரியாலிட்டி சோ(??) ன்னாலே இது தான் பிரச்சனை அப்படின்னு கத்தனும் (எ.கா: சிம்ரன் - விஜய் ஆதிராஜ்)

இதுபோக இன்னும் சில குறிப்புகள்:
உங்களுடன் சேர்ந்து இன்னும் 2 நடுவர்கள் இருப்பாங்க.. அவர்களில் ஒருவர் பெரிய நடன இயக்குனரா இருப்பார்.. அவருக்கு பயங்கர மரியாதை தர மாதிரி நடிக்கனும்...
உங்ககூட இருக்கும் உங்கள் வயது நடுவருக்கு முடிந்த வர ஜால்ரா போட வேண்டும்....
******************************
இன்னும் எதாவது இருந்தா பின்னூட்டத்துல சொல்லுங்கப்பா.... :))

ஏர்இந்தியா எக்ஸ்பிரஸில் தமிழ்!!!!!!




அதிசயம் ஆனால் உண்மை!!! ஏர் இந்தியா எக்ஸ்பிரஸில் தமிழையும் பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர்!!!!!!

இந்த முறை ஊருக்குச் சென்றபோதும், திரும்பியபோதும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸில் பயணித்தேன்... முதலில் எல்லாம் சரியாகத்தான் இருந்தது.. வழக்கம்போல ஆங்கிலம் மற்றும் இந்தியில் பாதுகாப்பு வழிமுறைகள் எல்லாம்...

ஒரு அரை மணி நேரம் கழித்து திடீரென்று மேலிருந்து ஒரு டீவி முளைத்தது.. அங்கு தான் தமிழ்.... ஆமாங்க தமிழ்ப்படம் போட்டாங்க... அதிரடி நாயகன் சுந்தர்சி யின் வீராப்பூ படம் போட்டாங்க... முதல் 5 நிமிடம் சத்தத்துடன் படம் ஓடியது... திடீருன்னு சத்தம் நின்று போனது... அப்புறம் பாத்தா அந்தப்பக்கத்துல இருந்து விமாணப் பணிப்பெண் அத்தை (ஏர் இந்தியா இப்பல்லாம் மாறிடுச்சி... பணிப்பெண்கள் 50 வயது பாட்டிகள் இல்லை... அதுக்கு பதில் 40 வயது அத்தைகள்... :) ) headphone எடுத்துட்டு வந்தாங்க ஒரு தட்டில்....


ஒரு headphone 2 சிங்கப்பூர் வெள்ளி அல்லது ஒரு அமெரிக்க வெள்ளி அல்லது 50 ரூபாயாம்.... ஹிஹிஹி..... அந்த மட்டமான headphone விக்கிறதுக்குத்தான் தமிழ்ப்படம் போட்டாங்க போல...

ஆனாலும் அவங்க யாருக்குமே தெரியலை வீராப்பூ, வேல்(திரும்ப வந்தப்ப போட்டாங்க) மாதிரி மட்டமான படங்களுக்காக எல்லாம் நம்மாளுங்க யாரும் 50 ரூபாய் தந்து headphone வாங்கமாட்டாங்கன்னு..... :)) ஒரு 2 அல்லது 3 பேர் தவிர வேற யாருமே வாங்கலை.....


சென்னையில் இருந்து மதுரை சென்ற பாரமவுண்ட் விமானத்தில் அப்படியே தலைகீழாக இருந்தது.... தமிழிலும் அறிவிப்புகள்.. கனிவுடனும், சிரிப்புடனும் பணிப்பெண்கள்.. 1/2 மணிநேரப் பயனம் என்றாலும் இனிய அனுபவம்.. நல்ல உணவுடன்.

நான் சென்ற அதே விமானத்தில் முதல்வர் கலைஞரும் வந்திருக்கிறார், விமானநிலைய விரிவாக்கப் பணிகளுக்கு அடிக்கல் நட்டும் விழாவிற்காக.. ஆனால் இதனால் மற்ற பயணிகளுக்கு சிறிதும் இடைஞ்சல் இல்லாமல் பார்த்துக் கொண்டார்கள்.. விமானம் நின்ற பின் ஒரு 5 நிமிடம் தாமதமாக விமானத்தில் இருந்து வெளியெறுமாறு கேட்டுக் கொண்டார்கள். இதைத் தவிர ஒரு சிறு சிரமம் கூட மற்ற பயணிகளுக்கு ஏற்படவில்லை.. நல்ல சேவை..

அரசு விமான நிறுவனங்களின் சேவை எப்போது இதுபோல் மாறுமோ தெரியவில்லை.... :(

Thursday, June 5, 2008

தேவதைக்கு ஒரு வயசு!!!!! :)

எங்க வீட்டு குட்டி தேவதைக்கு இன்று முதல் பிறந்த நாள்!!!!

மதிக்குட்டி மற்றும் அண்ணன் & அண்ணிக்கு வாழ்த்துக்கள்!!!







Wednesday, June 4, 2008

அக்கரைக்கு இக்கரை பச்சை..

அக்கரைக்கு இக்கரை பச்சை..
இக்கரை பச்சை என்பதால் இங்கு வா என நான் அக்கரையில்
இருந்த போது என் மீது அக்கறை உள்ள சிலர் அழைக்க
அதை ஏற்று அக்கரையில் இருந்து இக்கரைக்கு வந்தபின் சில காலம்
இக்கரை பச்சையாகவே தெரிந்தாலும் இப்போது என்னதான் இருந்தாலும் அக்கரை சொந்தக்கரை என்பதால் இக்கரையை விட
அக்கரையே பச்சையாய்த் தெரிகிறதென்றாலும்
அக்கரை திரும்பி அங்கிருந்து பார்க்கும் போது மீண்டும்
இக்கரை பச்சையாகத் தோன்றி அவசரப்பட்டு இக்கரையை விட்டு வெளியேறிவிட்டோமே என்று வருத்தப் படவேண்டியிருக்குமோ
என நினைத்து அக்கரைக்குத் திரும்புவது பற்றி முடிவெடுக்கமுடியாமல் அக்கரையை ஏக்கத்துடன் பார்த்துக்கொண்டே
இக்கரையில் இருக்கிறேன்....
:(

குறிப்பு:

இக்கரை - சிங்கை
அக்கரை- சென்னை

(சென்னையில் இருந்தபோதும் இப்படித் தோன்றியிருக்கிறது.....
அப்போது
இக்கரை - சென்னை
அக்கரை - ஆமத்தூர்..
காக்கைக்கும் தன் குஞ்சு பொன்குஞ்சு அதனால் எங்க ஊர் எப்பவுமே எனக்கு பச்சையாகத் தான் தெரிகிறது.... :)
)