Sunday, October 28, 2007

பதில் சொல்லுங்கள்! பரிசுகளை அள்ளிச் செல்லுங்கள்!!!!!!

1. இந்தியாவின் தலைநகர் எது?
அ. புது டெல்லி
ஆ. புது ஜல்லி

2. பாரதப் பிரதமர் யார்?
அ. மன்மோகன்சிங்
ஆ. கல்மோகன்சிங்

பதில்களைப் பின்னூட்டங்களாக இடுங்கள்!! பரிசுகளை அள்ளிச் செல்லுங்கள்!!!
:)

டிஸ்கி:
தமிழ்த் தொலைக்காட்சி வரலாற்றில் புதுமைகள் பல புகுத்திவரும் ஒரு தொலைக்காட்சியின் புதிய நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கும்(கீழே சிவப்பு எழுத்துக்களில்) இதற்கும் எந்த சம்மந்தமும் இல்லை. அப்படி யாராவது சந்தேகப் பட்டால் நான் பொறுப்பல்ல.

தெர்மாமீட்டரில் இருக்கும் திரவத்தின் பெயர் என்ன?
அ.பாதரசம்
ஆ.மிளகு ரசம்

பிரசாந்த், ஐஸ்வர்யாராய் சேர்ந்து நடித்த படத்தின் பெயர் என்ன?
அ.ஜீன்ஸ்
ஆ.பெர்முடாஸ்.

அமெரிக்காவின் official building எது?
அ.White House
ஆ.Rest House
(நன்றி: அவந்திகா)

sharu Khan நடிச்ச படம் எது?
அ.கபி குஷி கபி கம்
ஆ.பபிள் கம்?
(நன்றி: அவந்திகா)

Thursday, October 25, 2007

தீபாவளி

டேய் ராமு, எங்க வீட்டுல தீவாளிக்கு எல்லாருக்கும் ட்ரெஸ் எடுத்தாச்சு. எனக்கு ரெண்டு பேண்ட்டு, சட்ட. உனக்கு ட்ரெஸ் எடுத்தாச்சா?

இல்லடா சோமு, எங்க அப்பாக்கு ஃபயர்ஆபீசுல இன்னும் 10 நாள் கழிச்சுதா போனஸ் போடுவாக. அதுக்கு அடுத்து தான் ட்ரெஸ் எடுக்கனும். எனக்கும் 2 செட் ட்ரெஸ் கேட்டுருக்கே. எங்கப்பா வாங்கித் தருவாரு.

எங்கப்பாட்ட நா கம்பிமத்தாப்பு, புஸ்வானம், ராக்கட்டு இன்னும் ரெம்ப வேட்டு கேட்டுருக்கேன். அவரு தீவாளிக்கு ஒருவாரத்துக்கு முன்னாடி எல்லா வாங்கித் தரேன்னு சொல்லிருக்காரு. -சோமு

எங்கப்பா, அம்மா ரெண்டு பேத்துக்கும் ஃபயர்ஆபீசுலயே ரெம்ப வேட்டு தருவாங்க. எனக்கு அது போதும். -ராமு.
-----------------------------
டேய் ராமு வேகமாப் படிச்சு முடிச்சுட்டு வந்து தூங்கு ராசா.

இதோ வந்துட்டேம்பா.
யப்பா, சோமு வீட்டுலயெல்லாம் ட்ரெஸ் எடுத்துட்டாங்களாம்ப்பா. எனக்கு எப்ப எடுத்துத் தருவ?

போனஸ் போட்டவுடனே வாங்கித்தற்றேண்டா கண்ணா..

சரிப்பா எனக்கு 2 ட்ரெஸ் வேணும். அவங்கப்பா அவனுக்கு ரெம்ப வேட்டு வாங்கித் தருவாராம்.

எனக்கு, உங்கம்மாவுக்கு ரெண்டு பேருக்குமே ஆபீஸ்ல வேட்டு தருவாங்கல்ல. அது பூரா உனக்குத்தான? இப்ப பேசாம படுத்துத் தூங்கு.
------------------------------
டே ராமு எந்திரிடா.
என்னம்மா இன்னு விடியலயே.. அதுக்குள்ள எதுக்கு எழுப்புற?

இன்னக்கி வேலக்கி வேகமாப் போகனுண்டா. சோறு காச்சி வச்சிருக்கேண்டா. சாப்புட்டு ஸ்கூலுக்குப் போ. சாவிய பாட்டி வீட்ல குடுத்துட்டுப் போ.

சரிம்மா போய்ட்டு வா.
-------------------------------
பத்திரிக்கைச் செய்தி:
சிவகாசி அருகே உள்ள பட்டாசுத் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் கணவன் மரணம், மனைவி படுகாயம்.........

-------------------------------
டே ராமு, தண்ணி கொண்டாடா குடிக்க.

நீ எந்திரிக்காதம்மா. நா அங்கயே கொண்டுவரேன்.

சரிடா குடுத்துட்டு, சோமு வீட்டுக்குப் போ அங்க வேட்டு போட்டுட்டு இருப்பாங்க. போய்ப் பார்ரு.

இல்லம்மா நா போகல.
-------------------------------
டேய் சோமு, ராமு பாவண்டா. அவனப் போயிக் கூட்டீட்டு வா, ரெண்டு பேரு ஒன்னா வேட்டுப் போடுங்க.

சரிப்பா நா போயிக் கூட்டீட்டு வரேன்.

டே ராமு, வாடா வேட்டுப் போடலாம். எங்கப்பா கூட்டீட்டு வரச்சொன்னாரு உன்னய.
இல்லடா சோமு நா வரல.

ராமு, போப்பா. சும்மாப் போயி வேடிக்கயாவது பாரு.
சரிம்மா போறேன்.
--------------------------------
டேய் ராமு, இன்னும் நீ ஸ்கூலுக்குக் கிளம்பலயாடா. நாங்கெளம்பிட்டேன். வேகமாக் கெளம்புடா போகலாம்.

இல்லடா, இன்னைலருந்து நா ஃபயராபீசுக்கு வேலைக்குப் போகப் போறேன். நீ கெளம்பு.

பள்ளிக்குச் செல்லும் சோமுவை ஏக்கத்துடன் பார்த்த்துக் கொண்டே வேலைக்குக் கிளம்பினான் ராமு...
*****************************************
சில தகவல்கள்:

* சிவகாசி, சாத்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள பட்டாசுத் தொழிற்சாலைகளின் எண்ணிக்கை 500க்கும் மேல். இவற்றின் மொத்த உற்பத்தி மதிப்பு ஆண்டுக்கு சுமார் ரூ.400கோடிக்கு மேல்.

*இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் பட்டாசுகளில் 90% இங்கு தான் உற்பத்தி செய்யப்படுகிறது.

* இவற்றில் 40% மேற்பட்ட தொழிற்சாலைகள் முறையான அனுமதி பெறாதவை. முறையான பாதுகாப்பு வசதிகள் இல்லாதவை 60% க்கும் மேல். பாதுகாப்பான குடிநீர் மற்றும் அடிப்படை வசதிகள் 20% தொழிற்சாலைகளில் மட்டுமே உள்ளது.

* ஒவ்வொரு வருடமும் நூற்றுக்கணக்கானோர் தீ விபத்துக்களில் மரணமடைகின்றனர். சிவகாசி அரசு மருத்துவமனையில் தீ விபத்துக்கான சிகிச்சைகளுக்கு எந்த வசதியும் இல்லாததால், காயமடைபவர்கள் மதுரை அரசு மருத்துவமனக்கே எடுத்துச் செல்லப்படுகின்றனர்.(சிவகாசியில் இருந்து சுமார் 50 கிலோ மீட்டர்).

* இத்தொழிற்சாலைகளில் பணி புரிவோர் எண்ணிக்கை சுமார் ஒரு லட்சத்திற்கும் மேல்(நேரடியாகவும்/மறைமுகமாகவும்). இவர்களின் ஒருநாள் ஊதியம் அதிகபட்சம் 50ரூபாய்.
இதில் ஆயிரக்கணக்கான குழந்தைத் தொழிலாளர்களும் அடக்கம்.

* இத்தொழிலாளர்களுக்கென தனி அமைப்பு, தொழிற்சங்கங்கள் ஏதும் இல்லை.

Monday, October 22, 2007

லக்கிலுக் VS இலைக்காரன்

VSவலையுலகில் அஇஅதிமுக வின் கொள்கை பரப்புச் செயலாலராகவும், 80 கோடி இந்துக்களின் குரலை ஒலிப்பவராகவும் திகழ்பவர், ஸ்ரீராம பக்தரான ஸ்ரீமான். இலைக்காரன் என்பவர். இவர் அம்மாவின் புகழைப் பரப்ப நடத்தும் வலைப்பூ "அம்மான்னா சும்மாவா"

திமுகவின் கொ.ப.செ யாகத் திகழ்பவர் திரு.லக்கிலுக் அவர்கள். இவர் நடத்தும் வலைப்பூ "சும்மா டைம்பாஸ் மச்சி". மேலும் டாக்டர் கலைஞர் உட்பட பல வலைப்பூக்களில் உறுப்பினராகவும் உள்ளார்.

பதிவுலகில் நீண்ட நாட்களாக நடந்து கொண்டிருக்கும் விவாதம் லக்கிலுக்கும் இலைக்காரரும் ஒரே பதிவரா இல்லையா என்பது தான்.
இது குறித்து பல புகார்கள் வந்ததை அடுத்து வலையுலக புலனாய்வு அமைப்பான BBI(Bureau of Blogging Invistigation) தனது புலனாய்வைத் தொடங்கியது.

புலனாய்வின் முடிவில் இருவரும் வெவ்வேறு பதிவர்கள் என்பதற்கான உறுதியான ஆதாரங்கள் BBIக்குக் கிடைத்துள்ளன. பதிவர்களைப் பற்றிய விவரங்களைப் பாதுகாப்பது BBI யின் கடமை என்பதால் இது குறித்த ஆதாரங்களை வெளியிட முடியாது.

இந்தப் புலனாய்வின் போது அதிர்ச்சிகரமான பல உண்மைகளை BBI கண்டுபிடித்துள்ளது. அது குறித்த BBI யின் அறிக்கை கீழே.

*****************************************


இலைக்காரரின் பதிவு அதிமுக மற்றும் பல இந்து அமைப்புகளைக் கிண்டல் செய்வதற்காக நடத்தப்படும் வலைப்பூ என்பது பல பதிவர்களின் கருத்து. இந்த விசாரனையின் போது அது உண்மையல்ல என்று தெரியவந்துள்ளது.

அதிமுக, இந்து அமைப்புகள் மற்றும் ஸ்ரீராமர் ஆகியோரைக் கிண்டல் செய்யும் படியாக சில பதிவுகளை எழுதி அதன் மூலம் திராவிடப் பதிவர்களைத் தன் பதிவை வாசிக்க வைக்கிறார். பின் திம்மிகள் என்று இவர் அன்புடன் அழைக்கும் திராவிடப் பதிவர்களைத் தன் வலையில் விழ வைத்து தன் கட்சியில் சேர்த்து விடுகிறார்.

இதற்கு நல்ல உதாரணம் திராவிடப் பதிவர் என்று அறியப்பட்ட லக்கிலுக் அவர்களின் சமீபத்திய மாற்றங்கள். அவரது கடைசிப் பதிவில் கூட இதைப் பார்க்கலாம்.
அடுத்த உதாரணம் பகுத்தறிவுப் பதிவர் கோவி.கண்ணன் அவர்கள். புரட்ச்சிதலைவி பற்றிய இவரது கடைசி சில பதிவுகளைப் பார்ப்பவர்களுக்குப் புரியும். இவர்கள் இருவரும் இலைக்காரன் பதிவில் அடிக்கடி பின்னூட்டம் இடுபவர்கள் அனைவரும் அறிந்தது தான்.

சமீபத்தில் இலைக்காரனுக்கு உதவியாக ஒரு "சாணக்கியன்" என்னும் புதிய பதிவர் ஒருவரும் வந்துள்ளார். இவரும் இலையாரின் வழியில் இந்து அமைப்புகளைக் கிண்டல் செய்து சில பதிவுகளை வெளியிட்டு, ஒரு திராவிடப் பதிவர் போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளார். ஆனால் உண்மையில் இவரும் இலைக்காரனுடன் இணைந்து 80 கோடி இந்துக்களுக்காகக் குரல் கொடுக்க வந்துள்ள ஒரு பதிவரே ஆவார்.(கோவியார் கூட சமீபத்தில் இலைக்காரரின் வழிகாட்டுதலின் படி, இந்தப் பதிவில் பின்னூட்டியிருக்கிறார்.)

இவர்களின் வலையில் விழாமல் ஜாக்கிரதையாக இருக்கும்படி அனைத்துப் பதிவர்களையும் BBI கேட்டுக்கொள்கிறது.


*****************************************

டிஸ்கி1: சிறிது நாட்களாக "நீங்கள் தான் இலைக்காரனா?" என்று லக்கிலுக்கைக் கேட்பவர்கள் எண்ணிக்கை குறைந்து விட்டதாம். அதனால் இது போன்ற ஒரு பதிவு இட்டால், இனிமேல் என் ஒவ்வொரு பதிவிலும் 10 பின்னூட்டங்கள் இடுவதாக லக்கி வாக்களித்துள்ளார். அதனால் தான் நான் இந்தப் பதிவை இட்டுள்ளேன். அதை அவர் செயல்படுத்துவார் என நம்புகிறேன்.
(இலைக்காரன் எழுதுவது போன்று ஒரு பதிவு எழுதினால், அங்கு கூட யாரும் வந்து "நீங்கள் தான் இலைக்காரனா" என்று நேரடியாக லக்கியை கேட்கவில்லையாம்...)

டிஸ்கி2: இது சீரியஸ் பதிவு என்பதால் கோவி.கண்ணன், லக்கிலுக் மற்றும்/அல்லது இலைக்காரன் ஆகியோர் தங்களைக் கலாய்ப்பதாகத் தப்பாக எடுத்துக் கொள்ளமாட்டார்கள் என நம்புகிறேன்.

டிஸ்கி3: இது லக்கிலுக் அவர்களின் சீரியஸ் பதிவைப் போல மிகவும் நீளமான பதிவாகிவிட்டதால், இன்னும் இருக்கும் பல டிஸ்கிகளைத் தனிப் பதிவாகத் தருகிறேன்.

Tuesday, October 16, 2007

மீன் வேண்டாம். மீன் பிடிக்கக் கற்றுத் தாருங்கள்!

பசி என்று வரும் ஒருவனுக்கு சாப்பிட மீன் தருவதை விட அவருக்கு மீன் பிடிக்கக் கற்றுத் தருவது சிறந்தது.
பசியைப் போக்க மீன் தந்துவிட்டு அடுத்த வேளை சாப்பாட்டுக்கு மீன் பிடிக்கக் கற்றுத் தருவது அதை விட சிறந்தது.


தமிழக அரசின் "இலவசங்கள்" இது போன்ற பசியைப் போக்க மீன் தருவது போலவே ஆகும். ஆனால் மீன் பிடிக்கக் கற்றுத் தரும் திட்டங்கள் மிகக் குறைவாகவே உள்ளன.(சென்ற அரசு மீனும் தரவில்லை, மீன் பிடிக்கக் கற்றும் தரவில்லை என்பது வேறு விசயம்...)

இப்படிப் பட்ட திட்டங்களில் ஒன்று தான் கலைஞர் அவர்களின்
"ஆதி திராவிட மற்றும் பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த பெண்களுக்கு விமான பணிப் பெண் பயிற்சி" தரும் திட்டம்.

இது குறித்த தட்ஸ்தமிழ் செய்தி இங்கே
இது குறித்து பதிவர் உடன்பிறப்பு அவர்களின் இடுகை இங்கே

தமிழகத்துக்குத் தேவை "இலவசங்கள்" அல்ல. இது போன்ற திட்டங்கள் தான்.

எடுத்துக்காட்டாக,
அனைத்து விவசாயிகளின் கூட்டுறவுக் கடன்களைத் தள்ளுபடி செய்ததில் அரசுக்கு இழப்பு ரூ6866 கோடி. இதில் ஏழை விவசாயிகளின் கடன்களை மட்டும் தள்ளுபடி செய்திருக்கலாம். பணக்கார விவசாயிகளின் கடனைத் தள்ளுபடி செய்ததற்குப் பதில் அந்தப் பணத்தில் இனிமேல் விவசாயிகளுக்கு நட்டம் வராமல் தடுக்கும் முறைகளை ஆராய்வதற்குப் பயன்படுத்தியிருக்கலாம்.


வேலையில்லா இளைஞர்களுக்கு மாத உதவித்தொகை வழங்குவதற்குப் பதில் அவர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் சுயதொழில் தொடங்கவும் திட்டங்கள் தீட்டலாம்.(உதவித்தொகை பசிக்கு மீன் தருவது போல் தான். அது மட்டும் போதாது)

"விமான பணிப் பெண் பயிற்சி" திட்டம் போல மீன் பிடிக்கக் கற்றுத்தரும் வகையான திட்டங்கள் பல கலைஞர் அவர்கள் தருவார் என நம்புவோம்.

காட்டுமிராண்டித்தனம். :(

தலித் வழக்கறிஞரின் வாயில் மலம் திணிப்பு-மதுரையில் கொடுமை

மதுரையில் தலித் சமூகத்தைச் சேர்ந்த வழக்கறிஞரின் வாயில் மலம் திணிக்கப்பட்ட கொடுமை நடந்துள்ளது. இந்த மகா பாதகச் செயலைச் செய்த பாமக செயலாளர் கட்சியை விட்டு நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

மதுரை சமயநல்லூரைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் சுரேஷ். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த பஞ்சாயத்து தலைவர் கிள்ளிவளவனுக்கும் இடையே உள்ளாட்சி தேர்தலின்போது மோதல் ஏற்பட்டுள்ளது.

இந் நிலையில் சுரேஷ் தனியே சென்றபோது அவரை வழிமறித்த கிள்ளிவளவன் மற்றும் மதுரை பாமக மாவட்ட செயலாளர் கிட்டு ஆகியோர் கொண்ட கும்பல் அவரை அடித்து உதைத்துள்ளது. அத்தோடு விடாமல் அவரது வாயில் மலத்தையும் திணித்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து சுரேஷ் சமயநல்லூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின்பேரில் பஞ்சாயத்து தலைவர் கிள்ளிவளன் மற்றும் அவரது அடியாட்கள் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

ஆனால் பாமக மாவட்ட செயலாளர் கிட்டுவை போலீசார் கைது செய்யவில்லை. இந் நிலையில் பாமக தலைவர் ஜிகே மணி மதுரை வந்தார். சம்பவம் குறித்து விசாரணை நடத்திய அவர் பாமக செயலாளரை கட்சியை விட்டு நீக்கி உத்தரவிட்டார்.

:(
நன்றி: தட்ஸ்தமிழ்.

Sunday, October 7, 2007

சத்ரு சம்ஹார யாகம்.....

உங்கள் எதிரிகளை அழிக்க வேண்டுமா? வாங்க சத்ரு சம்ஹார யாகம் நடத்துவோம்...""சத்ரு சம்ஹார யாகம்' பலமா நடந்துண்டு இருக் கறது ஓய்... அதனால தான் சென்னைக்கு வர முடியலை...!'' என்று பேச்சை துவக்கினார் குப்பண்ணா.

""அது என்ன சத்ரு சம்சார யாகம்ன்னு சொல்லும் வே...'' என்று கேட்டார் பெரியசாமி அண்ணாச்சி.

""வம்பா போச்சு ஓய்... சத்ரு சம்சார யாகம் இல்லை... "சத்ரு சம்ஹார யாகம்'ன்னு சொன்னேன்... அதாவது எதிரிகளை அழிக்கற யாகம்... நடக்கறது எங்கே தெரியுமோ... ஊட்டி மலையில... இப்ப புரியறதா...'' என்றார் குப்பண்ணா.

""புரியுது... அந்த யாகம் நடத்தினா என்ன நடக்கும் வே...'' என்று கேட்டார் அண்ணாச்சி.

""போன ஜூன் மாசம் யாகம் நடந்தப்ப, அறிவாலயத் தலைவர் குடும்பத்துல பிரச்னை வந்து பெரும் பிளவு ஏற்பட்டது... சில நாளைக்கு முன்னால நடத்திய யாகத்தால சுப்ரீம் கோர்ட்ல கெட்ட பெயர் வந்தது... அதனால, சென்னைக்கு திரும்பறதா இருந்த புரோகிராமை "கேன்சல்' பண்ணிட்டு யாகத்தை திரும்ப "ஸ்டார்ட்' பண்ணச் சொல்லிட்டாங்க... யாகத்தை மேலும் தீவிரப்படுத்தி நடத்திண்டிருக்கா ஓய்...'' என்றார் குப்பண்ணா.

(தினமலர், அக்டோபர்-7-2007)


இதைப் பார்த்து சிரிப்பதா? கோவப்படுவதா? இல்லை இவர்களைப் பார்த்து வருத்தப் படுவதா?

நீங்களும் இங்க போயி படிச்சு சிரிங்க...