Thursday, October 25, 2007

தீபாவளி

டேய் ராமு, எங்க வீட்டுல தீவாளிக்கு எல்லாருக்கும் ட்ரெஸ் எடுத்தாச்சு. எனக்கு ரெண்டு பேண்ட்டு, சட்ட. உனக்கு ட்ரெஸ் எடுத்தாச்சா?

இல்லடா சோமு, எங்க அப்பாக்கு ஃபயர்ஆபீசுல இன்னும் 10 நாள் கழிச்சுதா போனஸ் போடுவாக. அதுக்கு அடுத்து தான் ட்ரெஸ் எடுக்கனும். எனக்கும் 2 செட் ட்ரெஸ் கேட்டுருக்கே. எங்கப்பா வாங்கித் தருவாரு.

எங்கப்பாட்ட நா கம்பிமத்தாப்பு, புஸ்வானம், ராக்கட்டு இன்னும் ரெம்ப வேட்டு கேட்டுருக்கேன். அவரு தீவாளிக்கு ஒருவாரத்துக்கு முன்னாடி எல்லா வாங்கித் தரேன்னு சொல்லிருக்காரு. -சோமு

எங்கப்பா, அம்மா ரெண்டு பேத்துக்கும் ஃபயர்ஆபீசுலயே ரெம்ப வேட்டு தருவாங்க. எனக்கு அது போதும். -ராமு.
-----------------------------
டேய் ராமு வேகமாப் படிச்சு முடிச்சுட்டு வந்து தூங்கு ராசா.

இதோ வந்துட்டேம்பா.
யப்பா, சோமு வீட்டுலயெல்லாம் ட்ரெஸ் எடுத்துட்டாங்களாம்ப்பா. எனக்கு எப்ப எடுத்துத் தருவ?

போனஸ் போட்டவுடனே வாங்கித்தற்றேண்டா கண்ணா..

சரிப்பா எனக்கு 2 ட்ரெஸ் வேணும். அவங்கப்பா அவனுக்கு ரெம்ப வேட்டு வாங்கித் தருவாராம்.

எனக்கு, உங்கம்மாவுக்கு ரெண்டு பேருக்குமே ஆபீஸ்ல வேட்டு தருவாங்கல்ல. அது பூரா உனக்குத்தான? இப்ப பேசாம படுத்துத் தூங்கு.
------------------------------
டே ராமு எந்திரிடா.
என்னம்மா இன்னு விடியலயே.. அதுக்குள்ள எதுக்கு எழுப்புற?

இன்னக்கி வேலக்கி வேகமாப் போகனுண்டா. சோறு காச்சி வச்சிருக்கேண்டா. சாப்புட்டு ஸ்கூலுக்குப் போ. சாவிய பாட்டி வீட்ல குடுத்துட்டுப் போ.

சரிம்மா போய்ட்டு வா.
-------------------------------
பத்திரிக்கைச் செய்தி:
சிவகாசி அருகே உள்ள பட்டாசுத் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் கணவன் மரணம், மனைவி படுகாயம்.........

-------------------------------
டே ராமு, தண்ணி கொண்டாடா குடிக்க.

நீ எந்திரிக்காதம்மா. நா அங்கயே கொண்டுவரேன்.

சரிடா குடுத்துட்டு, சோமு வீட்டுக்குப் போ அங்க வேட்டு போட்டுட்டு இருப்பாங்க. போய்ப் பார்ரு.

இல்லம்மா நா போகல.
-------------------------------
டேய் சோமு, ராமு பாவண்டா. அவனப் போயிக் கூட்டீட்டு வா, ரெண்டு பேரு ஒன்னா வேட்டுப் போடுங்க.

சரிப்பா நா போயிக் கூட்டீட்டு வரேன்.

டே ராமு, வாடா வேட்டுப் போடலாம். எங்கப்பா கூட்டீட்டு வரச்சொன்னாரு உன்னய.
இல்லடா சோமு நா வரல.

ராமு, போப்பா. சும்மாப் போயி வேடிக்கயாவது பாரு.
சரிம்மா போறேன்.
--------------------------------
டேய் ராமு, இன்னும் நீ ஸ்கூலுக்குக் கிளம்பலயாடா. நாங்கெளம்பிட்டேன். வேகமாக் கெளம்புடா போகலாம்.

இல்லடா, இன்னைலருந்து நா ஃபயராபீசுக்கு வேலைக்குப் போகப் போறேன். நீ கெளம்பு.

பள்ளிக்குச் செல்லும் சோமுவை ஏக்கத்துடன் பார்த்த்துக் கொண்டே வேலைக்குக் கிளம்பினான் ராமு...
*****************************************
சில தகவல்கள்:

* சிவகாசி, சாத்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள பட்டாசுத் தொழிற்சாலைகளின் எண்ணிக்கை 500க்கும் மேல். இவற்றின் மொத்த உற்பத்தி மதிப்பு ஆண்டுக்கு சுமார் ரூ.400கோடிக்கு மேல்.

*இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் பட்டாசுகளில் 90% இங்கு தான் உற்பத்தி செய்யப்படுகிறது.

* இவற்றில் 40% மேற்பட்ட தொழிற்சாலைகள் முறையான அனுமதி பெறாதவை. முறையான பாதுகாப்பு வசதிகள் இல்லாதவை 60% க்கும் மேல். பாதுகாப்பான குடிநீர் மற்றும் அடிப்படை வசதிகள் 20% தொழிற்சாலைகளில் மட்டுமே உள்ளது.

* ஒவ்வொரு வருடமும் நூற்றுக்கணக்கானோர் தீ விபத்துக்களில் மரணமடைகின்றனர். சிவகாசி அரசு மருத்துவமனையில் தீ விபத்துக்கான சிகிச்சைகளுக்கு எந்த வசதியும் இல்லாததால், காயமடைபவர்கள் மதுரை அரசு மருத்துவமனக்கே எடுத்துச் செல்லப்படுகின்றனர்.(சிவகாசியில் இருந்து சுமார் 50 கிலோ மீட்டர்).

* இத்தொழிற்சாலைகளில் பணி புரிவோர் எண்ணிக்கை சுமார் ஒரு லட்சத்திற்கும் மேல்(நேரடியாகவும்/மறைமுகமாகவும்). இவர்களின் ஒருநாள் ஊதியம் அதிகபட்சம் 50ரூபாய்.
இதில் ஆயிரக்கணக்கான குழந்தைத் தொழிலாளர்களும் அடக்கம்.

* இத்தொழிலாளர்களுக்கென தனி அமைப்பு, தொழிற்சங்கங்கள் ஏதும் இல்லை.

6 comments:

said...

ரொம்ப சோகமாக இருக்கு !
:(

said...

பக்கத்திலேயிருந்து பார்த்த நிகழ்வுகள்..நான் கல்லூரியிலே படிக்கும் போது நாட்டு நலப் பணி திட்டத்திற்காக சிவாகசி, விருதுநகர் பக்கம் உள்ள கிராமங்களுக்கு போய் வருவதுண்டு..அங்கே சிறுவர், சிறுமியர் கையில் விளையாட்டு பொருட்களை பார்த்ததில்லை..பேசிக் கொண்டே லவாகமாக வெடி சுருட்டுவதையும், தீக் குச்சி அடுக்குவதையும் வாய் பிளந்து பார்த்ததுண்டு.
அதை இப்பொழுது உங்க எழுத்தில பார்க்கிறேன்...ஜெகதீசன்...ஏ.ஏ.தி.க சார்பா ஏதாவது செய்யலாமில்ல...

said...

//

கோவி.கண்ணன் said...
ரொம்ப சோகமாக இருக்கு !
:(
//
ஒவ்வொரு தீபாவளிக்குப் பின்னும் இதுபோல பல சோகங்கள் எங்க ஊரில் இருக்குது...
:(

பட்டாசுத் தொழ்ற்சாலைகளில் மட்டும் இல்லை... தீப்பட்டித் தொழிற்சாலை, அச்சகங்களிலும் இதே நிலை தான்...
இங்கெல்லாம் 1000ரூபாய் சம்பளம் வாங்குவது பெரிய விசயம்...

said...

//
TBCD said...
பக்கத்திலேயிருந்து பார்த்த நிகழ்வுகள்..நான் கல்லூரியிலே படிக்கும் போது நாட்டு நலப் பணி திட்டத்திற்காக சிவாகசி, விருதுநகர் பக்கம் உள்ள கிராமங்களுக்கு போய் வருவதுண்டு..அங்கே சிறுவர், சிறுமியர் கையில் விளையாட்டு பொருட்களை பார்த்ததில்லை..பேசிக் கொண்டே லவாகமாக வெடி சுருட்டுவதையும், தீக் குச்சி அடுக்குவதையும் வாய் பிளந்து பார்த்ததுண்டு.
அதை இப்பொழுது உங்க எழுத்தில பார்க்கிறேன்...ஜெகதீசன்...ஏ.ஏ.தி.க சார்பா ஏதாவது செய்யலாமில்ல...
//
ஏற்கனவே எல்லோரும் இவங்கள ஏமாத்திக்கிட்டு தான இருக்காங்க.. இதுல நம்ம வேறயா...

said...

மிகுந்த மனவேதனையை தருகிறது. நிகழ்வை எழுத்துக்களில் வடித்த உங்களுக்கு வாழ்த்துக்கள்.

said...

//
பாரி.அரசு said...
மிகுந்த மனவேதனையை தருகிறது. நிகழ்வை எழுத்துக்களில் வடித்த உங்களுக்கு வாழ்த்துக்கள்.
//
நன்றி அரசு...