Wednesday, December 26, 2007

கலக்கும் லாலு!!

பல மாநிலங்களுக்கு குடிநீர் சப்ளை செய்து, ரயில்வே துறை சம்பாதிக்க முடியுமா? ஏன் முடியாது என்று புதுமையான திட்டத்தை தீட்டியிருக்கிறார், ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ்!

ரயில்வே துறை அமைச்சராக லாலு பொறுப்பேற்றதில் இருந்து, ஆண்டுக்கு 20 ஆயிரம் கோடி ரூபாய் லாபம் கிடைத்து வருகிறது.

"ரயில்வே துறை லாபம் குவிக்க இன்னும் பல வழிகள் உள்ளது. அதைப்படிப்படியாக நிறைவேற்றுவேன்' என்று, அமைச்சர் கூறியிருந்தார். அதன் முதல் கட்டமாக, குடிநீர் "பைப் லைன்' திட்டம் பற்றி லாலு தீவிரமாக பரிசீலித்து வருகிறார்.

நாடு முழுவதும் போடப்பட்டுள்ள 63 ஆயிரம் கி.மீ., நீள தண்டவாளங்களில், இரு பக்கமும், குடிநீர் பைப்களை புதைத்து, பல்வேறு மாநிலங்களில் உள்ள நதி நீரை ஒரு மாநிலத்தில் இருந்து இன்னொரு மாநிலத்துக்கு சப்ளை செய்வது தான் லாலுவின் திட்டம்.

இந்த திட்டம் நிறைவேறினால், சில மாநிலங்களில் பல ஆண்டாக மழைக்காலங்களில் ஏற்படும் வெள்ள அபாயம் நீங்கும்; வறட்சியில் உள்ள சில மாநிலங்களுக்கு தண்ணீர் சப்ளை கிடைக்கும்.

முழு செய்திக்கு: தண்டவாளம் அருகே "பைப் லைன்' லாபத்தை பெருக்க லாலு புது திட்டம்

உண்மையிலேயா லாலு கலக்குகிறார்!!!!

நன்றி: தினமலர்

பின் குறிப்பு:
இது சென்ற வார செய்திதான்... இப்போது தான் பார்த்தேன். :)

Monday, December 24, 2007

எ.ஏ.தி.க தலைவருக்கு வாழ்த்துக்கள்!!!!!!எ.ஏ.தி.க தலைவர், வருங்காலத் தமிழகத்தின் விடிவெள்ளி, பிணாங்கு சிங்கம் எங்கள் தலைவர் டி.பி.சி.டி(அரவிந்த்) க்கு இன்று பிறந்தநாள்! அவரை வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம்!! :P


தமிழக மக்களே... சிந்தித்துப் பாருங்கள்... புலியையும் அடக்கி நண்பனாக்கும் திறமை கொண்ட ஒரே அரசியல்வாதி, எங்கள் தலைவர், கொள்கைக் குன்று டி.பி.சி.டி மட்டுமே!!!! இதையெல்லாம் சிந்தித்துப் பார்த்து எங்களுக்கு ஓட்டுப்போட்டு 200011 தேர்தலில் எங்கள் தலைவரை முதல்வராக்குங்கள்!!!!

பின் குறிப்பு:
கும்மி not allowed... :PMonday, December 17, 2007

இளம் ஜோடி(adults only) - ந.ஒ.க போட்டிக்கு அல்ல!!

அவருக்கு சில நாட்களாகவே அந்தப் பிரச்சனை இருக்கிறது. ஆனால் யாருக்கும் தெரியாது. இது யாருக்காவது தெரிந்தால் சமூகத்தில் அவருக்கு இருக்கும் மதிப்பு என்னாகுமோ என்று மிகவும் பயப்படுகிறார்.

நேற்று கூட இப்படித்தான், திடீரென கை, கால்கள் எல்லாம் நடுங்க ஆரம்பித்துவிட்டது. அந்தப் பிரச்சனை வந்தால் உடனே "அந்த" வேலையை முடிக்க வேண்டும் இல்லையென்றால் கை கால்கள் எல்லாம் நடுங்க ஆரம்பித்துவிடுகிறது. வேறு எதுவுமே யோசிக்க முடிவதில்லை...

அப்பாடா இன்று வெள்ளிக்கிழமை ஆயிற்று.. சனி, ஞாயிறு இரு நாட்களும் குறைந்தது இரண்டு முறையாவது 'அந்த' வேலையைச் செய்து விடலாம் என்று மிகவும் சந்தோசமாக இருந்தது அவருக்கு. ஆனால் வீட்டுக்குப் போனதும் ஒரு இடி காத்துக்கொண்டு இருந்தது..

"என்னங்க பாப்பா நாளைக்கு sentosa போகனும் ன்னு சொல்லுறாங்க. கூட்டீட்டுப் போகலாம்" என்று அவர் வீட்டுக்குச் சென்றதும் மனைவி கேட்டார். அவரால் மறுக்க முடியவில்லை. மறுத்தால் மனைவிக்குத் தெரிந்துவிடுமே.. அப்புறம் அவ்வளவுதான்.

ஆனால் அவருக்கு பயமாக இருந்தது ஒரு நாள் முழுவதும் தாங்க முடியுமா என்று.. ஆனால் முயன்று பார்க்கலாம் என்று நினைத்தார்.

மறுநாள் காலையில் M.R.T யில் செல்வதாக முடிவெடுத்து M.R.T யில் சென்றனர். ஒரு மணி நேரம் வரை எந்தப் பிரச்சனையும் இல்லை. மவுண்ட் பேபர் சென்று அங்கிருந்து கேபிள் காரில் செல்ல முடிவெடுத்தனர்.

மவுண்ட் பேவரில் ஒரு நாயைப் பார்த்ததும் அவருக்கு "அந்த" நினைப்பு வந்துவிட்டது.. கை கால் நடுக்கம் எடுக்க ஆரம்பித்தது.. தனியாகச் சென்று ஒரு தம் இழுத்து கொஞ்சம் மனதை மாற்றி விட்டு வந்தார்...

அடுத்து sentosa சென்ற பின் மாலை வரை சுற்றிப் பார்த்தனர். அது வரை எந்தப் பிரச்சனையும் இல்லை. அவருக்கே சந்தோசமாக இருந்தது அவரால் அதைச் செய்யாமல் ஒரு நாள் முழுவதும் இருக்க முடியும் என....

அப்போது தான் பார்த்தார் அந்த கைகோர்த்துச் சென்ற அந்த இளம் ஜோடியை.. மீண்டும் அவருக்கு கை கால்கள் நடுங்க ஆரம்பித்து விட்டது. மனைவியிடம் உடனே கிளம்பச் சொல்லி வீட்டுக்குக் கிளம்பிவிட்டனர்...

"இனி வீட்டில் போய் சமைக்க முடியாது, இங்கேயே சாபபிட்டுவிடலாம்" என்று மனைவி சொன்னதை வேறு வழியில்லாமல் ஏற்றுக் கொண்டார்.. அவரால் சாப்பிடக்கூட முடியவில்லை.. ஒருவழியாக சாப்பிட்டு விட்டு வீட்டுக்கு வந்து சேர்ந்தனர்..

ஏற்கனவே தூங்க ஆரம்பித்திருந்த அவரது மகளை உள்ளே எடுத்துச் சென்று மனைவியும் மகளுடன் சேர்ந்து தூங்க ஆரம்பித்தார்..

அது வரை காத்திருந்த அவர் லேப்டாப்பைத் திறந்து ப்ளாக்கருக்குள் நுழைந்தார். "அந்த இளம் ஜோடி கை கோர்த்து...." என்று "நஒக - இளம் ஜோடி(adults only)" என்ற தலைப்பில் கதை எழுத ஆரம்பித்தார்.

ஆம்... இப்பொழுதெல்லாம் ஒரு நாளைக்கு இரண்டு "நச்சென்று ஒரு சிறுகதை"யாவது எழுதவில்லை என்றால் கை, கால் எல்லாம் நடுங்க ஆரம்பித்துவிடுகிறது.... யாருக்காவது இதற்கு ஏதாவது வைத்தியம் தெரியுமா???

பின்குறிப்பு:
இந்தக் கதை முழுவதும் கற்பனையே... இதில் வரும் "அவர்" கதாப்பாத்திரம் எந்தப் பதிவரையும் குறிப்பதல்ல....


இந்தக் கதை யார் மனதையும் புண்படுத்துவதற்காக இல்லை.... சிரிப்பதற்காக மட்டுமே!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

இந்தக் கதையை இங்கும் பதிந்துள்ளேன்....

Saturday, December 15, 2007

எந்தப் பூவும் அழகல்ல இந்தப் பூவூடன் ஒப்பிட்டால்....

இந்த முறையாவது PIT போட்டியில கலந்து கொள்ள(ல்ல)னும் ன்ன்னு நினைச்சேன்.... ஆனா வேலைப் பளுவால் படங்கள் எதுவும் எடுக்க முடியவில்லை. அதனால் என்னிடம் இருந்த பழய பூக்களைப் பதிவிடுகிறேன்....இவை போட்டிக்கு அல்ல....இந்தப் பூக்கள் எல்லாம் பினாங்கில் எடுத்தது....
இது என் அலுவலகம் அருகில் இருந்த பார்க்கில் எடுத்தது...
ஆனால் போட்டியில் இருக்கும் எந்தப் பூவும் அழகல்ல கீழே இருக்கும் பூவுடன் ஒப்பிட்டால்..... :)))
Thursday, December 6, 2007

எதிர்பாராத திருப்பம்!

இதன் முதல் பாகம்: தப்பா நினச்சுக்குவாளோ?

அவள் இப்படி மறுத்துவிடுவாள் என நான் எதிர்பார்க்கவே இல்லை.

நான் அப்படியென்ன கேட்டுவிட்டேன்? அவள் வீட்டு பால்கனியில் இருக்கும் பூக்களைப் புகைப்படம் எடுத்துக் கொள்கிறேன் என்றுதானே கேட்டேன்? இதை ஏன் மறுக்க வேண்டும்?

அவள் ஜுராங் பறவைப் பூங்காவில் வேலை பார்க்கிறாளாம்.. பறவைகளுடன் தினமும் பழகும் அவள் பறவைகளைப் போல இனிய மனமுடையவளாக இருப்பாள் என்று நினைத்துத் தானே அவளுடன் பழகினேன்? அவள் இவ்வளவு கல்நெஞ்சக்காரியாக இருப்பாள் என சற்றும் எதிர்பார்க்கவில்லை.

அந்த நிகழ்ச்சி நடந்த நாள் முதல் அவளை சந்திப்பதையே முற்றிலும் தவிர்த்துவிட்டேன். அவளுடன் ஜாகிங் போவதையும் நிறுத்திவிட்டேன்.

அண்ணி கூட சமாதானப் படுத்தினாள், "சீனர்களின் செண்டிமெண்ட்டுகள் உனக்குத் தெரியாததா.. பூக்களைப் படம் எடுக்கக் கூடாதென ஏதாவது செண்டிமெண்ட் இருக்குமோ என்னவோ" என்று.. ஆனாலும் என் மனம் சமாதானமடையவில்லை.

அவள் தினமும் காலையில் ஜாகிங் செல்லும்போது என் வீட்டு ஜன்னல் வழியாக நான் வருகிறேனா எனப் பார்ப்பது எனக்குத் தெரிந்தது..ஆனாலும் என் முடிவை மாற்றிக் கொள்ள விரும்பவில்லை.

அடுத்த நாள் மாலையில் வீட்டில் ஒரு ஆச்சர்யம் காத்திருந்தது. அலுவலகத்திலிருந்து வீட்டுக்கு வந்ததும் அண்ணி ஒரு கிப்ட் பேக்கை அவள் என்னிடம் கொடுக்கச் சொன்னதாகத் தந்தாள்..

அந்தப் பேக்கில் ஒரு கடிதமும் ஒரு சிடியும் இருந்தது.

டியர் ஸ்வீட் ஹார்ட்,
என் மேல் என்ன கோவம் உனக்கு?

என் வீட்டில் இருக்கும் பூக்கள் அவ்வளவாக நன்றாக இல்லை. அதனால் தான் வேண்டாம் என்று சொன்னேன்.
நேற்று புங்கோல் பார்க்குக்கு சென்ற போது எடுத்த அழகிய மலர்கள் இந்த சிடியில் இருக்கிறது. அவற்றைப் போட்டிக்குப் பயன்படுத்திக்கொள். அத்துடன் பேர்ட்ஸ் பார்க்கில் எடுத்த பறவைகள் படங்களும் இருக்கிறது அதை எப்போழுதாவது "பறவைகள்" என்ற தலைப்பில் போட்டி வந்தால் பயன்படுத்திக்கொள்..

நாளை காலையில் ஜாகிங்கிற்கு உன்னை எதிர்பார்க்கிறேன்...


எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது.. இவளைப்போய் தப்பாக நினைத்துவிட்டோமே என்று.. மறுநாள் காலையில் 6 மணிக்கே எழுந்து அவளுடன் ஜாகிங் கிளம்பிவிட்டேன்..

என்னைப் பார்த்ததும் புன்னகைத்தாள்..

சாரி... உன் நல்ல மனசைப் புரிஞ்சுக்காமத் தப்பா நினைச்சுட்டேன்...
இட்ஸ் ஒகே.. ஸ்வீட் ஹார்ட்..


என் மேல கோவம் இல்லையே?
நோ மை சைல்ட்... நீயும் என் மகன் மாதிரிதானே.. நான் எப்படி உன்மேல் கோவப்படுவேன்?

தேங்க்யூ ஆண்டி....

என் அம்மாவின் வயதிருக்கும் அந்தச் சீனப் பெண் என் மீது வைத்திருக்கும் பாசத்தைப் பார்த்து மனம் நெகிழ்ந்தவாறு ஜாகிங் முடித்து வீட்டுக்குக் கிளம்பினேன். இனிமேல் தினமும் அவளுடன் ஜாகிங் செல்வேன்....

இந்தக் கதையை இங்கும் படிக்கலாம்.....

Tuesday, December 4, 2007

நச்சுனு ஒரு கதை - தப்பா நினைக்க மாட்டயே?

அந்தச் சீனப் பெண், என் பக்கத்து வீடு தான் என்றாலும் இது வரை அவளுடன் பேசியதில்லை. எப்போதாவது லிப்ட்டில் இருவரும் சந்திக்கும் போது ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக்கொள்வோம். அவ்வளவுதான்.

எப்படியாவது அவளிடம் அந்த விசயத்தைப் பேசிவிடவேண்டும் என நினைத்தேன். எப்படித் தொடங்குவது என்று தெரியவில்லை. அவளுடன் அதிகப் பழக்கமும் இல்லை. அதனால் மெதுவாக அவளுடன் பழக ஆரம்பித்து நன்றாகப் பழகியபின் மெதுவாக விசயத்தை சொல்லலாம் என முடிவு செய்தேன்.

வேறு யாராவது முந்திவிடுவார்களோ பயமாக இருக்கிறது. எதிர் ப்ளாக்கில் இருக்கும் ஆனந்த் வேறு அடிக்கடி அவள் வீட்டு பால்கனியை நோட்டமிட்டுக் கொண்டே இருக்கிறான். ..


இப்பொழுதெல்லாம் அவள் இரவு வீட்டுக்குத் தாமதமாக வருகிறாள். அதனால் அவளை லிப்ட்டில் கூட சந்திக்க முடிவதில்லை. எப்படி அவளை சந்திப்பது என்றே தெரியவில்லை.

வேறு வழியே இல்லை, தினமும் 6 மணிக்கு எழுந்து அவள் ஜாகிங் போகும் போது பின்னாலே செல்ல வேண்டியது தான் என முடிவு செய்தேன்.

முதல் நாளில் அவள் வீட்டை விட்டு வெளியே வந்ததும் நானும் வெளியே வந்தேன். மெதுவாக அவளிடம் "hi" சொன்னேன். அவளும் பதிலுக்கு "hi" சொன்னாள். அதற்கு மேல் அவளிடம் பேசமுடிய வில்லை. இதேபோல் 3 நாட்கள் தொடர்ந்தது.

தினமும் ஜாகிங் செல்வதைப் பார்த்து அண்ணிக்கு, என்மேல் சந்தேகம் வந்துவிட்டது. என்னால் அவரிடம் விசயத்தை மறைக்க முடியவில்லை. முழுவதும் சொல்லிவிட்டேன். நான் வேண்டுமானால் பேசிப் பார்க்கட்டுமா என்று அண்ணி கேட்டார். இல்லை நானே பார்த்துக் கொள்கிறேன் என்று சொல்லிவிட்டேன்.

இப்பொழுதெல்லாம் தினமும் அவளுடன் ஜாகிங் செல்கிறேன்...

இப்படியே நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாய் எங்கள் நட்பு வளர்ந்து வந்தது.. ஆனால் அந்த விசயத்தைப் பேச மட்டும் எனக்கு தைரியம் வரவில்லை..

அண்ணி வேறு அடிக்கடி பயமுறுத்துகிறார்.. "உடனே பேசிவிடு. இல்லைன்னா வேறு யாராவது முந்திவிடுவார்கள்" என்று.

எப்படியும் இன்று பேசிவிடவேண்டும் என முடிவு செய்துவிட்டேன். மெதூவாகப் பேசத் தொடங்கினேன்...

hi,

அவளும் பதிலுக்கு hi சொன்னாள்.

நான் உன்னிடம் ஒரு முக்கியமான விசயம் பேசனும்.

சொல்லு என்ன விசயம்..

ஒன்னும் தப்பா நினைக்க மாட்டயே?
இல்லை தப்பா நினைக்க மாட்டேன்.. சொல்லு.

இல்ல... அது வந்து...தப்பா நினைக்கக் கூடாது... உனக்குப் பிடிக்கலைன்னா விட்டுறுவோம்... ஒகேவா?

சரி......... சொல்லித் தொலை...
அது வந்து ... வந்து
................................
.....................................
..........................................
................................................
.....................................................
"PIT" போட்டில இந்த மாதம் தலைப்பு மலர்கள். அதுக்கு உன் வீட்டு பால்கனில இருக்குற பூக்களை போட்டோ எடுத்துக்கலாமா?'நச்சுனு ஒரு கதை' - போட்டியும், இதுவரை ஆட்டையில் உள்ள பதிவர்களும

பின்குறிப்பு:
இந்தக் கதையில் வரும் சம்பவங்களும் பாத்திரங்களும் முற்றிலும் கற்பனை... கற்பனை.... கற்பனையே!!!!(நேத்து நான் பக்கத்து வீட்டுப் பொண்ணு கிட்ட அவங்க வீட்டுல இருக்குற ரோஜாப்பூவை கிளிக்கிக்கிறலாமா என்று கேட்டதற்கும் அவள் கூடாது என்று சொல்லி என் மூக்கை உடைத்ததற்கும், இந்தக் கதைக்கும் எந்த சம்மந்தமும் இல்லை)