Monday, August 27, 2007

சாதீயமும் சகோதர மனப்பான்மையும்.

ஆயிரக்கணக்கான ஜாதிகளால் நாடே பிளவுப்பட்டு இருக்கும் போது இந்தியாவை ஒரு நாடு என்று அழைக்க முடியாது. ஜாதியும், சகோதர மனப்பான்மையும் ஒன்றுடன் ஒன்று ஒத்து போகாது. எனவே இரண்டும் நிலைத்து இருக்க வேண்டும் என்பது முடியாத காரியம். ஜாதியத்தால் இந்துக்கள் அழிந்து விடுவர். கல்வி மற்றும் வேலை வாய்ப்பால், இட ஒதுக்கீட்டால் வாய்ப்பு கிடைக்காத இளைஞர்கள் வெறுத்து போய் உள்ளனர். அவர்களை இனம் கண்டு நக்சலைட்டுகள் தங்கள் வசம் மாற்றி வருகின்றனர். இதனால், நக்சலைட் அமைப்பு வளர்ந்து வருகிறது. சமூக ஒருமைப்பாடு மற்றும் சமூக, ஜனநாயக கட்டமைப்புக்கு ஜாதி அடிப்படையிலான இட ஒதுக்கீடு மிகப்பெரிய அபாயத்தை ஏற்படுத்தி வருகிறது. ஜாதி, மதம், பாலினம் ஆகியவற்றின் அடிப்படையில் குடிமக்களை வேற்றுமைபடுத்த கூடாது என்று அரசியல் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. எனவே ஜாதி அடிப்படையிலான இட ஒதுக்கீடு அரசியல் சட்டத்துக்கு முரணானது. இதர பிற்படுத்தப்பட்ட மக்களில் மேல் மட்டத்தில் உள்ளவர்களே ஜாதி அடிப்படையிலான இட ஒதுக்கீட்டினால் பலன் பெறுகின்றனர். கீழ்மட்ட மக்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர். இட ஒதுக்கீட்டில் இருந்து கிரீமி லேயரை நீக்காதவரை ஜாதி ரீதியான இட ஒதுக்கீடு பலன் தராது."


-மூத்த வழக்கறிஞர் பி.பி.ராவ், 27 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு எதிரான வழக்கில்.

******************************

இதைப் பார்த்ததும் என் மனதில் எழுந்த சில கேள்விகள்...

இட ஒதுக்கீடு விடயத்தில் மட்டும் தேவைப்படும் சகோதர மனப்பான்மை அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் விடயத்தில் தேவை இல்லையா?

இதே சகோதர மனப்பான்மையுடன் அனைவரையும் கருவறைக்குள் அனுமதிப்பார்களா?

சிதம்பரம் நடராசர் கோயிலில் தமிழில் தேவாரம் திருவாசகம் பாடச் சென்ற சிவனடியார் ஆறுமுகசாமியைத் தாக்கியும் தடுத்தும் வெறியாட்டம் போட்ட போது சகோதர மனப்பான்மை எங்கே சென்றது?

இதே சகோதர மனப்பான்மையுடன் காஞ்சி சங்கர மடத்தின் அடுத்த சங்கராச்சாரியாராக வேறு சாதியைச் சார்ந்த ஒருவரை ஏற்றுக்கொள்வார்களா?(கொலைகாரர் ஒருவர் இருக்கும் இடத்திற்கு வர வேறு யாரும் விரும்ப மாட்டார்கள் என்பது வேறு விடயம்...)

இந்தக் கேள்விகளுக்கு யாரிடமாவது பதில் இருந்தால் தெரிவியுங்களேன்..
***************************

-ஜெகதீசன்

Sunday, August 19, 2007

சிங்கப்பூரில் தமிழ் இல்லாத இடம்...

சிங்கப்பூரில் எல்லா இடங்களிலும் தமிழ் இருக்கும். இதைப் பார்க்கும்போது எனக்கு மிகவும் பெருமையாக இருந்தது.

"தளமேடை இடைவெளியை கவனத்தில் கொள்ளுங்கள்", "விளக்கு மின்னும் போது உள்ளே நுழையாதீர்கள்" என்பது போன்ற வாக்கியங்களைப் பார்க்கும்போதும் கேட்கும்போதும் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். இது போல அனைத்து இடங்களிலும் தமிழ் இருக்கும்.

ஒரு வேலையாக இந்தியத் தூதரகத்திற்கு சென்றேன். அங்கு தமிழ் இல்லை. ஆங்கிலமும், இந்தியும் மட்டுமே உள்ளது. சிங்கப்பூரின் எல்லா இடங்களிலும் தமிழ் இருக்கும் போது இந்தியத் தூதரகத்தில் மட்டும் இல்லாமல் இருப்பது நெருடலாக இருக்கிறது.

தமிழர்கள் அதிகம் வாழும் சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் இந்திய அரசு ஏன் தமிழுக்கும் ஆதரவு தரக்கூடாது? இத் தூதரகங்களில் தமிழிலும் அலுவல்களை நடத்தலாமே?

சும்மா!!!!!


இது தாங்க நான்.....


Monday, August 13, 2007

எங்கள் குட்டி தேவதை !!!!!!!!!


டேய் சித்தப்பா..... தூங்குறப்ப தொந்தரவு பண்ணாதே....ஆஹா!!! எந்திரிச்சிட்டோமே! இனி பால் குடிக்கச் சொல்லுவாங்களே.. எப்படித் தப்பிக்குறது??...

Sunday, August 12, 2007

இனிவரும் தமிழினம்

இனிவரும் தமிழினம் - உயர்ந்து ஓங்க வேண்டும்.

உலகத் தமிழ் அறக்கட்டளையின் வெளியீடான, "திருக்குறள், தமிழ்ப் பண்பாட்டுக் கையேடு, தமிழின எதிர்கால வழிகாட்டி" ஆகிய மூன்றும் கொண்ட நூலில், "தமிழின எதிர்கால வழிகாட்டி" பகுதியில் திரு. தன்னம்பிக்கை பாலசுப்பிரமணியம் அவர்கள் எழுதிய "இனிவரும் தமிழினம் - உயர்ந்து ஓங்க வேண்டும்" என்ற கட்டுரையை உங்களுடன் பகிர்ந்து கொள்ளவே இந்த இடுகை. (பக்கம் - 1765)

அந்தக் கட்டுரையின் சில பகுதிகள்:

கி.பி 1200 இறுதியில் அந்நியர் ஆட்சிக்கு உட்பட்ட தமிழகம் இறுதியாக ஆண்ட ஆங்கிலேயர் ஆட்சியில் ஒரு மாநிலமாக சிறுத்துப் போனது போன்று தமிழினத்தின் மாண்பும் சிதைந்து போனது. பல நூற்றாண்டுகளாகத் தமிழினத்தின் மீட்சிக்கு பல்வேறு முயற்சிகள் நடைபெற்று வந்த போதிலும் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் தான் இம்முயற்சிகள் பன்மடங்காக மேலோங்கிற்று. ஆங்கிலேயர் வழங்கிய கல்வியும் - பிற மதங்களின் மனித நேயமும் தமிழினத்தின் விடியலுக்கு வித்தாக அமைந்தது என்பதை மறுக்கவியலாது.

வள்ளலார், மறைமலையடிகளார், திரு.வி.க போன்ற தமிழ் அறிஞர்களின் அயராத முயற்சியும் - தந்தை பெரியாரின் சுயமரியாதைப் போராட்டமும் அறிஞர் அண்ணா அவர்களின் அரசியல் போராட்டமும், மொழிப்போராட்டங்களும், தமிழர் வாழ்வில் திருப்புமுனை ஏற்பட வழி வகுத்தது என்பது மறுக்கவியலாத உண்மையாகும். ......................
........................................................................
........................................................................


நாடு

பிறரின் நாடுகளைப் பிடிப்பதல்ல தமிழினத்தின் நோக்கம். தனக்குரியதை மீட்டெடுக்க வேண்டும். ஆண்ட பரம்பரை மீண்டும் ஒரு முறை ஆள நினைப்பதில் என்ன குறை எனும் கவிஞர் காசி ஆனந்தனின் வைர வரிகள் ஒவ்வொரு தமிழரின் நெஞ்சங்களிலே ஒலித்துக் கொண்டே இருக்க வேண்டும்.
எந்த இனம் அரசாளும் உரிமையை இழந்து விடுகிறதோ, அந்த இனம் பிற இனத்தவரின் தயவில் தான் வாழ வேண்டும். கல்வி, வேலை வாய்ப்பு, பொருளாதாரம், அரசியல் உரிமை போன்றவற்றில் தலைதூக்கினால் அடக்கு முறைக்கு உள்ளாக்கப்படும். இத்தகய அடக்கு முறையை முறியடிக்க எழுந்ததுதான் தமிழீழ விடுதலைப் போராட்டம்.

மொழி
...............................................................
தமிழ்ர்கள் கட்டிய கோயிலில் தமிழ் மொழிக்கு இடமில்லை என்று கூறும் மதத்தை தமிழர்கள் புறக்கணிக்க வேண்டும். தமிழில் அர்ச்சனை செய்யாத அர்ச்சகர்களையும், கோயில்களையும் தமிழர்கள் புறக்கணிக்க வேண்டும்.
.........................................

இனம்

சாதிப் பெயர்களைத் தவிர்க்க வேண்டும். சாதிவாரியான அமைப்புகள் கலைக்கப்பட வேண்டும். சாதிப் பெருமையை விட்டொழித்துத் தமிழினப் பெருமையை நிலைநாட்டச் செய்ய வேண்டும். ஒரே இனமாக சேர்ந்து வாழ வேண்டும்.
..........................................................................

சமயம் - மதம்

திருக்குறள் தமிழ் இனத்தின் பொது மறை எனவும், ஏனய சமய மறைகள் அனைத்தும் தனி மறைகள் எனவும் தமிழினம் பின்பற்ற வேண்டும்.
.......................................

கல்வி

தமிழ் சமுதாயத்திற்கு முறையான வாய்ப்பு வழங்கப்பட்டால் கல்வித்துறையில் உலகை ஆளும் என்பதற்கு சான்றுகள் கட்டியம் கூறுகின்றன.
....................................................................................

ஏறத்தாழ நூறு ஆண்டுகளுக்குள் தமிழினம் கல்வித் துறையில் கணிசமான அளவில் விரைந்து முன்னேற்றம் கண்டுள்ளது.
......................................
.....................................

சிறுபான்மை இனம்

தமிழர்கள் வாழுகின்ற அனைத்து நாடுகளிலும் சிறுபான்மை இனமாக வாழுகின்றார்கள். தமிழகத் தமிழர்கள் இந்தியாவில் சிறுபான்மை, மற்ற நாடுகளில் வாழும் தமிழர்கள் ஆங்காங்கே சிறுபான்மை.

சிறுபான்மையினர் எக்காலத்திலும் அரசாளும் உரிமையைப் பெறுவதில்லை. அரசு சட்டங்கள் இயற்றுவதில்லை. அரசு தரப்பில் பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களை வரையறுப்பதில்லை. பெரும்பான்மையர் சிறுபான்மையினர் குரிது எப்போதுமே கவலைப்படுவதில்லை.
.....................................................
.....................................................

தமிழினத்திற்கும், தமிழுக்கும் அரசியல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் உலகளாவிய அளவில் தமிழீழ விடுதலைப் பேராளிகளே வருங்காலத்தில் சிறுபான்மை இனம் என்ற நிலையில் இருந்து தமிழினத்தை மீட்டு, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சிகளைத் தோற்றுவிக்கப் போகிறார்கள். அவர்களை உற்சாகப் படுத்த வேண்டிய உதவிகளை தமிழினத்தவர் ஒவ்வொருவரும் விரைந்தும் ஈடுபாட்டுடனும் செய்ய வேண்டும்.
......................................................
......................................................

கல்வியும் பொருளாதார மேம்பாடும் இனி வரும் தமிழினத்தை உயர்த்தும். தமிழீழம் தமிழர் தன்மானம் காக்கும். வெற்றி நிச்சியம்.

Saturday, August 11, 2007

வழிகாட்டும் வள்ளுவர்-2

ராஜன், என்னுடன் பணிபுரிந்த நண்பன். அவனும் எங்கள் திட்டப்பணித் தலைவர்(P.L) இளங்கோவும் மிகவும் நெருக்கம். பல விசயங்களில்(ஆன்மீகம்,...) அவர்கள் ஒரே கருத்து கொண்டவர்கள் என்பதால் எப்பொழுதும் ஒன்றாகவே இருப்பார்கள்(தேனீர் இடைவேளையின் போது இருவரும் எங்களால் ஒன்றாகவே கலாய்க்கப் படுவ்ர்...).

ஒரு புதிய திட்டப்பணி(project), நல்ல சவாலானது(web services ,swt,....). அந்தப் பணிக்கான ஆட்களைத் தேர்வு செய்யும் போது இளங்கோ, ராஜனைத் தேர்ந்தெடுக்க வில்லை. இது ஏன் என்பது அனைவருக்கும் மிகவும் குழப்பமாக இருந்தது.

ஒரு நாள் தனியாக இருந்தபோது அவரிடம் இது பற்றி நான் கேட்டேன். அதற்கு அவர் சொன்ன பதில்:

ராஜனுக்கும் எனக்கும் உள்ள நட்பு வேறு, வேலை வேறு. ஒரு வேலைக்குத் தேர்ந்தெடுக்கும் போது அவரால் முடியுமா என்பதை மட்டுமே பார்க்க வேண்டும்.

காதன்மை கந்தா வறிவறியார்த் தேறுதல்
பேதமை யெல்லாந் தரும்.

-திருக்குறள்(அதிகாரம்- 51(தெரிந்து தெளிதல்) ; குறள்-507)

(அமர்த்தும் பணியில் அறியவேண்டுவன எதனையும் அறியாத ஒருவரை அவர்மீது நாம் வைத்திருக்கும் பாசத்தையே அடிப்படையாகக்கொண்டு அமர்த்துதல், நம்மை உலகம் அறிவில்லாதவர் எனத் தூற்றும் படியான எல்லாத் தீமைகளையும் கொடுக்கும்)

Wednesday, August 8, 2007

வழிகாட்டும் வள்ளுவர்-1

இளங்கோ, நான் இதற்கு முன் பணி புரிந்த நிறுவனத்தில் என் திட்டப்பணித் தலைவர்(Project Leader). அவர் ரெம்ப நல்லர். நாங்கள் என்ன செய்தாலும் ஒன்றும் சொல்லமாட்டார். அவர் கோவப்பட்டு நாங்கள் பாத்ததே இல்லை.(ஆனால் ஐஸ் வைத்தே எல்லா வேலையும் வாங்கிடுவார்).

ஒரு நாள் திட்டப்பணி மேலாளரிடமிருந்து(Project manager) தொலைபேசி. வழக்கம் போல ஏதோ ஒரு பிரச்சனைய சரியாகப் புரிந்துகொள்ளாமல் இளங்கோவக் காய்ச்சி எடுத்துக் கொண்டு இருந்தார். இளங்கோவும் வழக்கம் போல பொறுமையா விளக்கி அவருக்குப் புரிய வைத்தார். அதுக்குப் பின் எங்களிடம் வந்து வாங்க டீ குடிக்கப் போகலாம்ன்னு கூப்பிட்டார். ("தேனீர் இடைவேளை" என்ற பெயரில் 1/2 மணி நேரம் தினமும் மொக்கை போடுவோம். அந்த மொக்கையில் இளங்கோவும் கலந்து கொள்வார். நான் தான் சொன்னேனே, "அவரு ரெம்ப நல்லவருன்னு")

அன்று பேசும்பொழுது அவரிடம் நான் கேட்டேன், "திட்டப்பணி மேலாளர்(Project manager) படுத்துற பாட்டை எல்லாம் கோவப்படாமல்இருப்பதை ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் எங்களுடட கிறுக்குத்தனங்களுக்குக் கூட கோவப் படமாமல் இருக்கிறீர்களே. அது ஏன்?" .

அதற்கு அவர் சொன்ன பதில்:

செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பா னல்லிடத்துக்
காக்கினென் காவாக்கா லென்.

-திருக்குறள்(அதிகாரம்- 31(வெகுளாமை) ; குறள்-301)

(எங்கு தன் சினம் செல்லுமோ, அங்கு சினங்கொள்ளாதிருப்பவனே சினத்தைக் காப்பவனாவான். சினங்கொள்ள முடியாத இடத்தில் காத்தால்தான் என்ன; காவாக்கால் என்ன
?)

ரெம்ப நாள் கழித்து தமிழ் எழுதத் தொடங்கியுள்ளேன். பிழைகள் இருந்தால் சுட்டிக் காட்டுங்கள். திருத்திக் கொள்கிறேன்.