Monday, August 27, 2007

சாதீயமும் சகோதர மனப்பான்மையும்.

ஆயிரக்கணக்கான ஜாதிகளால் நாடே பிளவுப்பட்டு இருக்கும் போது இந்தியாவை ஒரு நாடு என்று அழைக்க முடியாது. ஜாதியும், சகோதர மனப்பான்மையும் ஒன்றுடன் ஒன்று ஒத்து போகாது. எனவே இரண்டும் நிலைத்து இருக்க வேண்டும் என்பது முடியாத காரியம். ஜாதியத்தால் இந்துக்கள் அழிந்து விடுவர். கல்வி மற்றும் வேலை வாய்ப்பால், இட ஒதுக்கீட்டால் வாய்ப்பு கிடைக்காத இளைஞர்கள் வெறுத்து போய் உள்ளனர். அவர்களை இனம் கண்டு நக்சலைட்டுகள் தங்கள் வசம் மாற்றி வருகின்றனர். இதனால், நக்சலைட் அமைப்பு வளர்ந்து வருகிறது. சமூக ஒருமைப்பாடு மற்றும் சமூக, ஜனநாயக கட்டமைப்புக்கு ஜாதி அடிப்படையிலான இட ஒதுக்கீடு மிகப்பெரிய அபாயத்தை ஏற்படுத்தி வருகிறது. ஜாதி, மதம், பாலினம் ஆகியவற்றின் அடிப்படையில் குடிமக்களை வேற்றுமைபடுத்த கூடாது என்று அரசியல் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. எனவே ஜாதி அடிப்படையிலான இட ஒதுக்கீடு அரசியல் சட்டத்துக்கு முரணானது. இதர பிற்படுத்தப்பட்ட மக்களில் மேல் மட்டத்தில் உள்ளவர்களே ஜாதி அடிப்படையிலான இட ஒதுக்கீட்டினால் பலன் பெறுகின்றனர். கீழ்மட்ட மக்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர். இட ஒதுக்கீட்டில் இருந்து கிரீமி லேயரை நீக்காதவரை ஜாதி ரீதியான இட ஒதுக்கீடு பலன் தராது."


-மூத்த வழக்கறிஞர் பி.பி.ராவ், 27 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு எதிரான வழக்கில்.

******************************

இதைப் பார்த்ததும் என் மனதில் எழுந்த சில கேள்விகள்...

இட ஒதுக்கீடு விடயத்தில் மட்டும் தேவைப்படும் சகோதர மனப்பான்மை அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் விடயத்தில் தேவை இல்லையா?

இதே சகோதர மனப்பான்மையுடன் அனைவரையும் கருவறைக்குள் அனுமதிப்பார்களா?

சிதம்பரம் நடராசர் கோயிலில் தமிழில் தேவாரம் திருவாசகம் பாடச் சென்ற சிவனடியார் ஆறுமுகசாமியைத் தாக்கியும் தடுத்தும் வெறியாட்டம் போட்ட போது சகோதர மனப்பான்மை எங்கே சென்றது?

இதே சகோதர மனப்பான்மையுடன் காஞ்சி சங்கர மடத்தின் அடுத்த சங்கராச்சாரியாராக வேறு சாதியைச் சார்ந்த ஒருவரை ஏற்றுக்கொள்வார்களா?(கொலைகாரர் ஒருவர் இருக்கும் இடத்திற்கு வர வேறு யாரும் விரும்ப மாட்டார்கள் என்பது வேறு விடயம்...)

இந்தக் கேள்விகளுக்கு யாரிடமாவது பதில் இருந்தால் தெரிவியுங்களேன்..
***************************

-ஜெகதீசன்

2 comments:

said...

ஜெகதீசன் முழு அறிக்கையையும் நீங்க படிக்கலை.

"எனவே ஜாதி அடிப்படையிலான இட ஒதுக்கீடு அரசியல் சட்டத்துக்கு முரணானது"

என்று மிக நுட்பமாக இருக்கும்,
அதாவது சாதியை ஒழிக்க வேண்டும் என்றெல்லாம் நல்லெண்ணத்தில் சொல்லவில்லை. பாகுபாடு பார்க்கக் கூடாதாம்.

சாதி அப்படியே இருக்கனுமாம், பாகுபாடு மட்டும் பார்க்கக் கூடாதாம்.

:)

இதற்கு மேல் விளக்க விரும்பல.

said...

கோவியாரே,
உங்கள் விளக்கத்திற்கு நன்றி,

//
ஜெகதீசன் முழு அறிக்கையையும் நீங்க படிக்கலை.
//
நான் முழு அறிக்கையையும் படித்துவிட்டுத்தான் பதிவிட்டேன். நீண்ட அறிக்கையாக இருந்ததால் ஒரு பகுதியை மட்டும் இங்கு வெளியிட்டேன். இப்போது மற்ற பகுதிகளையும் சேர்த்துவிட்டேன்.

//சாதி அப்படியே இருக்கனுமாம், பாகுபாடு மட்டும் பார்க்கக் கூடாதாம்.
:)
//

"இட ஒதுக்கீட்டு விடயத்தில் மட்டும் சாதிப் பாகுபாடு பார்க்கக் கூடாது. ஆனால் அர்ச்சகர் ஆவது, கருவறைக்குள் செல்வது, சிதம்பரத்தில் தேவாரம் பாடுவது போன்ற விடயங்களில் மட்டும் பாகுபாடு பார்க்கலாமா?" என்பது தான் என் கேள்வி.

பி.பி.ராவ் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆவதற்க்கு எதிராகத் தொடுக்கப் பட்ட வழக்கில் நமக்கு ஆதரவாக ஆஜராகி,"சாதிப் பாகுபாடு பார்க்கக் கூடாது. அதனால் அனைவரும் அர்ச்சகர் ஆகலாம்" என்று வாதாடுவாரா?