Tuesday, November 13, 2007

குலக்கல்வி தொழிற்கல்வியா?

மூதறிஞர் ராஜாஜி அவர்கள் புதிய கல்விக் கொள்கையைக்(குல கல்வித் திட்டம்) கொண்டு வந்த போது, நான் பிறக்கவே இல்லை. அது பற்றி நான் அறிந்த விவரங்கள், புத்தகங்கள் மூலமாகவும், அந்தத் தலைமுறையினர் மூலமாகவும் அறிந்து கொண்டவை மட்டுமே.
இத்திட்டம் பற்றி நான் புரிந்து கொண்டது:
**தினமும் மூன்று மணி நேரம் மட்டுமே கல்வி.
**மீதி நேரம் அப்பா/குடும்பத்தினர்
செய்யும் தொழிலை கற்றுக் கொள்ளலாம், இல்லையேல் கட்டாயமில்லை, வேறு தொழிலும் பழகலாம்.

இது குறித்து வெளியாகியுள்ள பல பதிவுகளும்(இத்திட்டத்திற்கு ஆதரவானவர்கள் எழுதியதும், எதிர்ப்பவர்கள் எழுதியதும்), என் புரிதல் சரி என்பதையே உறுதி செய்கிறது.

ஆனால் திரு.ஜீவி அவர்கள் தன் மறக்கமுடியாத மதுரை நினைவுகள் -2 பதிவில்,

பள்ளிகளில் வழக்கத்தில் இருந்த கைத்தொழில்/குடியுரிமைப் பயிற்சி வகுப்புகளே, "குலக்கல்வித் திட்டம்" என்று தெரிவித்துள்ளார்.
**வாரத்தில் இரண்டு வகுப்புகள்(பீரியட்) மட்டுமே இந்த வகுப்புகள் இருக்கும்.
**இதற்கான பயிற்சி பள்ளியில் வழங்கப் படும்.
(நான் படித்த போது எங்கள்பள்ளியில் [6 முதல் 10வரை படித்த அரசு உயர்நிலைப்பள்ளியில்] விவசாய வகுப்புகளும், நீதிபோதனை வகுப்புகளும் இருந்தது. என் தம்பி படித்த நடுநிலைப் பள்ளியில் தச்சுக்கலை(க்ராப்ட்) மற்றும் நெசவு வகுப்புகள் இருந்தன. நான் 10வகுப்பு முடித்தது 1996ம் வருடம்)

ஆனால் நான் அறிந்த வரையில் ராஜாஜியின் குலக்கல்வித் திட்டத்தின் படி,
ஒரு நாளில் 3 மணி நேரம் மட்டுமே பள்ளி நடக்கும்.மீதமுள்ள நேரத்தில் தன் குடும்பத்தொழில்/ வேறு தொழில்கள் செய்துகொள்ளலாம்.
இதற்க்குப் பள்ளிகளில் எந்த வகுப்புகளும் கிடையாது. மதிப்பெண் எதுவும் கிடையாது.


திரு.ஜீவி அவர்கள் கைத்தொழில் வகுப்புகளையும், குலக்கல்வித் திட்டத்தையும் குழப்பிக்கொள்கிறாரா, அல்லது வேண்டுமென்றே தவறான ஒரு தகவலைத் தருகிறாரா என்று தெரியவில்லை.

*************************************

இனி குலக் கல்வித் திட்டம் பற்றி:
ராஜாஜி அவர்கள் முதல்வராக இருந்த போது[1952-1954] இருந்த நிதி நெருக்கடியின் காரணமாக, சுமார் 6000 பள்ளிகளை மூடிவிட்டு மீதமுள்ள பள்ளிகளில் காலை 3 மணி நேரம் ஒரு பகுதி, மாணவர்களுக்கும், மாலை 3 மணி நேரம் ஒரு பகுதி மாணவர்களுக்கும் வகுப்புகள் நடத்தத் தொடங்கப்பட்ட திட்டம் தான் இது.

மீதமுள்ள நேரம் மாணவர்கள் என்ன செய்வார்கள் என்ற கேள்வி எழுந்தபோது(மாற்றுக் கருத்து கொண்டவர்கள் எழுப்பியபோது) அவர் தெரிவித்தது தான், இந்த "குடும்பத்தினர் செய்யும் தொழிலை கற்றுக் கொள்ளலாம் இல்லையேல் கட்டாயமில்லை, வேறு தொழிலும் பழகலாம்."

இத்திட்டம் கொண்டுவரப்பட்ட நேரத்தில்:
**சில நூற்றாண்டுகளாகப் படிப்புரிமை மறுக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப் பட்ட வகுப்பினரில் 70%க்கும் மேற்பட்டோர் முதல் தலைமுறையாகப் பள்ளிக்குச் செல்லத் தொடங்கியிருந்தனர்.

**முற்படுத்தப்பட்ட வகுப்பினரில் 70%க்கும் மேற்பட்டோர் பல தலைமுறைகள் கல்வி கற்று நல்ல வேலைகளில் இருந்தனர்.(அரசுப் பணிகளில்
70%க்கும் மேல் இருந்தனர்.)


இத்திட்டம் செயல்படுத்தப் பட்டிருந்தால்

**முதல் தலைமுறையாகக் கல்வி கற்கும், பெற்றோர் குலத்தொழில் புரியும் 70% மாணவர்கள், தங்கள் தந்தை செய்யும் தொழில் மட்டுமே கற்றிருக்க முடியும். கல்வியறிவற்ற தந்தைகள் அவர்களுக்கு வேறு எந்தப் பயிற்சியும் அளிக்க முடியாது. வீட்டில் பெற்றோர் எதுவும் சொல்லித்தர முடியாத நிலையில் 3 மணி நேரக் கல்வியால் அவர்கள் என்ன கற்றுக் கொண்டிருக்க முடியும்?

**முந்தய தலைமுறைகளில் இருந்து நல்ல கல்வியறிவு பெற்ற, உயர் வகுப்பினர், தன் பிள்ளைகளுக்குத் தேவையான பயிற்சிகள் தந்திருப்பர். "வெள்ளைக் காலர் பணி"களுக்குத் தேவையான அனைத்துப் பயிற்சிகளும் இவர்களுக்கு அளிக்கப் பட்டிருக்கும். இவர்களுக்கு, அந்த 3 மணி நேரக் கல்வி தவிர பல பயிற்சிகள் இவர்கள் பெற்றோர்களிடமிருந்து கிடைத்திருக்கும்.



இவ்வாறு இருக்கும்போது எப்படி முதல் தலைமுறையாகக் கல்வி கற்றவர்கள் பலதலைமுறையாக நல்லநிலையில் இருப்பவர்களிடம் போட்டியிட்டு வேலைகள் பெற்றிருக்கமுடியும்? இத்திட்டம் செயல்பட்டிருந்தால் அரசுப்பணிகள், மருத்துவம், பொறியியல் மற்றும் அனைத்துத் துறைகளிலும் முற்படுத்தப் பட்ட மக்களின் ஆதிக்கம் இன்னும் இருந்து கொண்டுதானே இருக்கும்? விவசாயி மகன் விவசாயியாகவும், துணி துவைப்பவர் மகன் துணி
துவைப்பவருமாகத் தானே இருந்திருக்க முடியும்? இத்திட்டத்தை பெரியார், காமராசர் முதல் சாதாரண மக்கள் வரை
எதிர்த்ததில் என்ன தவறு இருக்கிறது?

----------------------
ராஜாஜி அவர்களுக்கு "அப்பன் வேலையத் தான் பிள்ளை செய்யவேண்டும்" என்ற உள்நோக்கம் இல்லை என்றே வைத்துக்கொண்டாலும்,

இத்திட்டம் நிதிப் பற்றாக்குறையை சமாளிக்கக் கொண்டுவரப்பட்டது எனில்,
ராஜாஜிக்குப் பின்வந்த கர்மவீரர் காமராசரால் எப்படி
மூடப்பட்ட 6000 பள்ளிகளையும் திறந்து அதற்கு மேலும் புதிய பள்ளிகள் திறக்க முடிந்தது?
(என் அம்மா, அப்பா 10ஆம் வகுப்பு வரை படித்ததும், அவர்கள் எங்களைப் பட்டப்படிப்புகள் வரை படிக்கவைத்ததும் காமராசரால் தான். இது எனக்கு மட்டுமில்லை, என் தலைமுறையில் இருக்கும் பெரும்பாண்மையோருக்கும் இது பொருந்தும்)


பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப மறுத்தவர்கள், மூன்று மணி நேரமாவது பள்ளிகளுக்கு அனுப்புவார்கள் என்பதற்காக கொண்டுவரப்பட்டதென்றால்
காமராசரால் மதிய உணவுத்திட்டத்தின் மூலம் அனைத்து மாணவர்களையும் முழுநேரமும் பள்ளிக்குக் கொண்டு வரமுடிந்ததே?

இதில் யார் சிறந்த நிர்வாகி?
6000 பள்ளிகளை மூடிய ராஜாஜியா?
இல்லை கல்விக்கண் திறந்த கர்மவீரரா?

*************************************
அடுத்த பதிவு: ராஜாஜி மூதறிஞரா?
(ஒன்று அல்லது இரண்டு வாரங்களில்)
இதுவும் ஜீவி அவர்களின் அதே பதிவில் கேட்டிருந்த கேள்விக்குப் பதில் தான்.
//
குலக்கல்விக்கு வித்திட்டவர் என்று கூசாமல் சொன்ன வாயால், அவரையே 'மூதறிஞர்' என்று எப்படிப்புகழ்பாட முடிகிறது என்பது புரியவில்லை. மூதறிஞர் என்று அவரை அழைக்கும் அளவுக்கு அவருக்கு என்ன நன்றிக்கடன் பட்டிருக்கிறார்களோ,அதுவும் தெரியவில்லை.
//
இந்த வரிகளை, ஜீவி அவர்கள் பெரிதும் மதிப்பதாகக் கூறும் பெரியார் மீதும், காமராசர் மீதும்,
குலக்கல்வித் திட்டத்தை எதிர்த்த மற்ற தலைவர்களின் மீதும் பரப்பப்படும் அவதூறாகவே கருதமுடிகிறது.
இதற்கு என் அடுத்த பதிவில் பதில் தருகிறேன்.



தொடர்பான சில சுட்டிகள்:
ஜீவி அவர்களின் பதிவு: http://jeeveeji.blogspot.com/2007/11/2.html
திரு அவர்களின் பதிவு: http://aalamaram.blogspot.com/2006/08/blog-post_11.html
விக்கிப்பீடியாவில்: http://en.wikipedia.org/wiki/Hereditary_Education_Policy
இதையும் பாருங்கள்: http://www.geocities.com/tamiltribune/07/1102.html

31 comments:

said...

//(என் அம்மா, அப்பா 10ஆம் வகுப்பு வரை படித்ததும், அவர்கள் எங்களைப் பட்டப்படிப்புகள் வரை படிக்கவைத்ததும் காமராசரால் தான். இது எனக்கு மட்டுமில்லை, என் தலைமுறையில் இருக்கும்
பெரும்பாண்மையோருக்கும் இது பொருந்தும்)//
பள்ளிகளை திறந்த்து மட்டும் அல்ல காமராஜரின் முயற்சி. அந்த காலத்தில் அண்ணா பல்கலை போன்ற உயர் கல்வி படிப்பிற்கு பள்ளியில் எடுத்த மதிப்பண் மட்டும் அன்றி, நேர்முக தேர்வு மூலமாகவும் தேர்ந்து எடுப்பர். அப்பொழுது எல்லாம் தேர்வு குழுவில் பிராமணர்களது ஆதிக்கம் அதிகம்(இப்போது மட்டும் என்னவாம்?). காமராஜர் முதன்முறையாக அந்த தேர்வு குழுக்களில் பிராமணர் அல்லதோரை நியமித்து அனைத்து ஜாதியினரையும் உயர் கல்வி படிக்க வகை செய்தார்.

said...

ஜெகதீசன்,

மிக நிறைவான தகவல்களுடன் நன்றாக எழுதி இருக்கிறீர்கள்,

ஜீவி ஐயா அவருக்கு தெரிந்த விபரங்களை வைத்து குலக்கல்வியும், தொழிற்கல்வியும் ஒன்றாக நினைத்து குழம்பி இருக்கிறார். நான் படித்த பள்ளிகளில் கூட கைத்தெறி நெசவு என்ற பாடத்திட்டம் இருந்து வெறும் அரட்டையுடனே முடிந்தது. ஒரு நாளும் கைத்தறி நெசவு இயந்திரத்தைக் கூட ஆசிரியர் காட்டவில்லை. கைத்தறி வகுப்பு என்றாலே அன்னிக்கு மாணவர்கள் கொட்டம் அடிக்க ஆரம்பித்துவிடுவர்.

இதெல்லாம் விட இந்த காலத்தில் கைத்தறி நெசவு படித்து பயன் என்ன என்ற கேள்வியும் தற்பொழுது வருகிறது.

குலக்கல்வி திட்டம் அமலில் இருந்திருந்தால், நம் இந்தியர்கள் இந்த அளவுக்கு கணனி துறையில் உலக நாடுகளுக்கு சவால் விட்டுக் கொண்டு இருந்திருக்க முடியாது. இன்றைக்கு நடுத்தர குடும்பங்கள் நிமிர்ந்திருப்பதற்கு காரணம் இட ஒதுக்கீடும், இலவச கல்வியும் தான்.

தரவுகளுடன் நிறைவான கட்டுரையை அளித்ததற்கு பாராட்டுக்கள் !

said...

அறிவுப்பூர்வமான வினாக்களை தொடுத்து - ஆக்கபூர்வமான பதிலகளோடு, உண்மைகளை எடுத்துரைத்த உங்களின் இந்தப்பதிவுக்கு நன்றி.

said...

இன்று அலுவலகத்தில் வேலை கொஞ்சம் அதிகம் இருப்பதால், பின்னூட்டங்களுக்கு இப்போது பதில் தர முடியவில்லை.
பதில்கள் இன்று மாலையில் தருகிறேன். பின்னூட்டங்களை மட்டும் முடிந்தவரை உடனுக்குடன் வெளியிட முயற்சிக்கிறேன்..

said...

அற்புதமான குறுக்கு விசாரணை. வாழ்த்துக்கள்.

தொழில்கல்வி இன்றைக்கும் இருக்கிறது தமிழ்நாட்டில். 10-ம் வகுப்பு வரை அடிப்படை கல்வியை முடித்த பிறகு உங்களுக்கு விருப்பமெனில் தொழில்கல்வியை தேர்ந்தெடுக்கலாம்.

வாய்ப்புகள்
1. GM எனப்படும் தொழில்பிரிவு +1ல் எடுக்கலாம் (இதை முடித்தால் பொறியியல் படிப்பில் இடஓதுக்கீடு உள்ளது)

2. 10- வகுப்பிற்க்கு பிறகு பாலிடெக்னிக் சேர்ந்து தொழில்நுட்பம் பயிலலாம்.

ஆனால் எல்லாமே அடிப்படை கல்விக்கு பிறகே அமைய வேண்டுமென்பது முக்கியம்.

said...

ஜெகதீசன்,
நானும் அந்தப்பதிவைப் படித்தேன்.
முழு பதிவையும் படித்து அதிலுள்ள மறுமொழிகளையும் படித்துப் பார்த்தால் புரியும் - அவர் குலக்கல்விக்கு ஆதரவாக எதுவும் எழுதவில்லை என்று.
அவர் படித்த சமயத்தில் தொழிற்கல்வி நிறுத்தப்பட்டது என்பதற்கு காரணம் குலக்கல்வி காரணமாக சொல்லப்பட்டதைத் தான் எடுத்து சொல்லி இருக்கிறார்.

//இந்த வரிகளை, ஜீவி அவர்கள் பெரிதும் மதிப்பதாகக் கூறும் பெரியார் மீதும், காமராசர் மீதும்,
குலக்கல்வித் திட்டத்தை எதிர்த்த மற்ற தலைவர்களின் மீதும் பரப்பப்படும் அவதூறாகவே கருதமுடிகிறது.//
அப்படி இருக்காது, ஏனெனில் இழந்த சொர்க்கம் என்றொரு பதிவையும் எழுதி
இருக்கிறார் பாருங்கள்.

//மூதறிஞர் என்று அவரை அழைக்கும் அளவுக்கு அவருக்கு என்ன நன்றிக்கடன் பட்டிருக்கிறார்களோ,அதுவும் தெரியவில்லை.//
மூதறிஞர் என்று அழைத்திடும் பெரியர் வட்டத்தினைத்தான் சுட்டிக்காட்டுகிறாரோ தவிர, எல்லோரையும் அல்ல. என்னென்ன நன்றிக்கடன்
பட்டிருக்கிறார் என்று பெரியாரைத்தான் கேட்க வேண்டும்.

அன்புடன்,
பாரதி

said...

//
நானும் அந்தப்பதிவைப் படித்தேன்.
முழு பதிவையும் படித்து அதிலுள்ள மறுமொழிகளையும் படித்துப் பார்த்தால் புரியும் - அவர் குலக்கல்விக்கு ஆதரவாக எதுவும் எழுதவில்லை என்று.
//

பாரதி அவர்களே,
நெரமிருந்தால், அந்தப் பதிவை நீங்கள் மீண்டும் ஒருமுறை நன்றாகப் படிக்க முடியுமா? முடிந்தால் தருமியின் பின்னூட்டங்களையும் அதற்கு அவரின் பதில்களையும் படியுங்கள்(குடிமைப் பயிற்சி வகுப்புகளும் குலக்கல்வியும் வெவ்வேறா என்று அவர் அப்பாவியாகக் கேட்பதைப் பார்க்கவும்.)...

said...

பாரதி அவர்களே,
உங்களுக்கு இன்று மாலையில், விரிவாக பதில் தருகிறேன். நன்றி..

said...

//குடிமைப் பயிற்சி வகுப்புகளும் குலக்கல்வியும் வெவ்வேறா என்று அவர் அப்பாவியாகக் கேட்பதைப் பார்க்கவும்//
அவர் படித்த இடத்தில் இரண்டும் ஒரே வகுப்பில் நடத்தப்பட்டு இருக்கலாம் அல்லவா, அந்த வயதில் நடந்ததை - அதில் நினைவில் இருப்பதை அப்படியே சொல்லி இருக்கிறார். எல்லாவற்றையும் பொதுமைப்படுத்த வேண்டியதில்லையே.

அடிப்படைக் கல்வியோடு சேர்ந்த தொழிற்கல்வியே சிறப்பானது என்று நான் சொல்வேன். அமெரிக்காவில் பாருங்கள் - 18 வயது முடிந்தால் அவரவர் தாமே வருவாய் ஈட்டி, அதில் சேமித்தால் மட்டுமே உயர் கலவி பெற முடியும். பெற்றோர் சேமித்த பணத்தில் உயர் கல்வி என்பது மிக மிக மேல்தட்டில் மட்டுமே.

நம் நாட்டிலோ, பெற்றோர் பணத்தில் மட்டுமே கல்வி என்கிற சோம்பேறித்தனம் மட்டுமே உருவாகியுள்ளது. (அதற்கு விதிவிலக்குகளும் உண்டு, அதை தவிர்த்து)பெற்றோரின் உதவியோ அரசாங்கத்தின் உதவியோ இல்லாமல் மாணவர்கள் தங்களுக்கென்ற வேலையை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்கிற நிலை ஏற்பட்டால், நம் நாடு எப்போதோ மேல்நிலைக்கு வந்திருக்கும். பல நோபல் பரிசுகளை வென்றிருப்போம்.
வெறும் வெள்ளைக்காலர் வேலைக்கு மட்டும் தயார் செய்து கொண்டதால் என்னவாயிற்று? இன்றைக்கு படித்த படிப்புக்கு வேலை இல்லாமல், அன்னிய நாடுகளில், நம்மை பெற்றோரையும் தாய் நாட்டையும் பிரிந்து எதோ ஒரு நாட்டுக்காக தொழில் செய்கிறோம்.

said...

ரொம்ப சூடா போயிட்டுயிருக்கு போல....

நிறைய சுட்டிகள் இருப்பதாலே படிச்சிட்டு வர்ரேன்..

நீங்க எழுதியிருக்கிறதை மட்டும் பார்த்தால்...

தொழிற்கல்வி என்பது வேறு...குலக்கல்வி என்பது வேறு...அதை குழப்பியவர் மிகவும் குழப்பமான நிலையில் இருக்க வேண்டும்..

குலக்கல்வி..வீட்டிலே நடக்கும் உ.தா. தச்சர் மகன் தச்சு பழகுவார், ஆசாரி மகன் நகை செய்து பழகுவார்.

ஆனால், பகுதி நேர தொழிற்கல்வி, +1ல் இருந்து பயிற்றுவிக்கபடுகிறது..அதில், எல்லோரும், அல்லாது ஒரு குழுவினர், தங்களுக்கு விருப்பமுள்ள தொழிற் கல்வியயை தேர்ந்தெடுத்து படிக்கலாம்.

இது பெரிய அளவில் வெற்றி பெறவில்லை..என்று நான் நினைக்கிறேன்..

இன்னமும், படிப்பு சாராத, அனுபவரீதியாக தொழில் புரிபவர்கள், நல்ல முறையிலே, தொழில் நடத்துவதாலும், இந்த படிப்புகள் குறைந்த ஊதியத் தொகை வேலைக்கு மட்டுமே வழி வகுக்கும் என்பதாலும் இருக்கும் என்று எண்ணுகிறேன்..

மூதறிஞர் என்று பட்டம் கொடுத்தவர் யார் என்று பார்த்தால் விவரம் தெரிந்துவிடப்போகிறது...

said...

//
அடிப்படைக் கல்வியோடு சேர்ந்த தொழிற்கல்வியே சிறப்பானது என்று நான் சொல்வேன். அமெரிக்காவில் பாருங்கள் - 18 வயது முடிந்தால் அவரவர் தாமே வருவாய் ஈட்டி, அதில் சேமித்தால் மட்டுமே உயர் கலவி பெற முடியும். பெற்றோர் சேமித்த பணத்தில் உயர் கல்வி என்பது மிக மிக மேல்தட்டில் மட்டுமே.

நம் நாட்டிலோ, பெற்றோர் பணத்தில் மட்டுமே கல்வி என்கிற சோம்பேறித்தனம் மட்டுமே உருவாகியுள்ளது. (அதற்கு விதிவிலக்குகளும் உண்டு, அதை தவிர்த்து)பெற்றோரின் உதவியோ அரசாங்கத்தின் உதவியோ இல்லாமல் மாணவர்கள் தங்களுக்கென்ற வேலையை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்கிற நிலை ஏற்பட்டால், நம் நாடு எப்போதோ மேல்நிலைக்கு வந்திருக்கும். பல நோபல் பரிசுகளை வென்றிருப்போம்.
வெறும் வெள்ளைக்காலர் வேலைக்கு மட்டும் தயார் செய்து கொண்டதால் என்னவாயிற்று? இன்றைக்கு படித்த படிப்புக்கு வேலை இல்லாமல், அன்னிய நாடுகளில், நம்மை பெற்றோரையும் தாய் நாட்டையும் பிரிந்து எதோ ஒரு நாட்டுக்காக தொழில் செய்கிறோம்.
//

அற்புதமான வார்த்தை விளையாட்டு விளையாடுகிறீர்கள் பாரதி!

பிள்ளைக்கு சோறு ஊட்டுவார்கள் நிலாவில் ஓளவை பாட்டி வடை சுடுவதாக பொய் சொல்லி! அதை போல அமெரிக்காவை பார்! ஐரோப்பாவை பார்!அப்படின்னு சொல்லி மறைமுகமாக நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்.

உங்கப்பன் தொழில நீங்க பார்த்தா நாங்களெல்லாம் வெயிட் காலர் ஜாப் இந்தியாவுலயே பார்த்ததிருப்பமுல்ல!

இப்ப உங்களோட போட்டி போட வேண்டி வேற நாட்டுக்கு ஓட வேண்டியிருக்கு அப்படின்னு சொல்றீகளா!

30 வயதுல்லயே வேலை கிடைக்கல, ஆனா படிக்கும் போதே வேலை கிடைத்து, அதை வைத்துக்கொண்டு படிக்க வேண்டுமா?

வேலைவாய்ப்பின்மை இந்தியாவில் எத்தனை சதவிகிதம் தெரியுமா நண்பரே?

வார்த்தை சதுரங்க விளையாட்டெல்லாம் முடிந்து ஆண்டுகள் பலவாகிவிட்டது. இன்றைக்கு உலகின் பல மூலைகளில் உட்கார்ந்திருக்கிறார்கள் தமிழர்கள். அவர்களிடம் உங்க விளக்கம் எடுபடாது.

அங்கே பார் சொர்க்கம்! இங்கே பார் சொர்க்கம் என்பதெல்லாம் பழைய கதையாகி போனது!

உள்ளதை பேசுங்கப்பா! உண்மையை பேசுகப்பா!

said...

ஜெகதீசன்,
நல்ல பதிவு. நல்ல விளக்கங்கள்.

பாரி-அரசு,
நல்ல பதில் கொடுத்துள்ளீர்கள் பாரதிக்கு. நன்று.

said...

குடியுரிமைப் பயிற்சி, கைத்தொழில் பயிற்சி, தொழிற்கல்வி மற்றும் குலக்கல்விக்கு இடையிலான குழப்பங்களுக்கு மட்டும் சிறு விளக்கம்:

குடியுரிமைப் பயிற்சி:
நாட்டு நலன், நமது கடமைகள், நடைமேடை இல்லாத சாலையில் எந்தப் பக்கம் நடக்க வேண்டும், சாலையை எப்படிக் கடக்க வேண்டும் - இவை போன்றவை ..(நன்றி: திரு.தருமி அவர்கள்)
கைத்தொழிற் பயிற்சி
இது ஜீவி அவர்கள் கூறியுள்ள,
வாரத்தில் இரண்டு வகுப்புகள்(பீரியட்) ஏதேனும் கைத்தொழில் கற்றுக்கொடுப்பது. எங்கள் பகுதியில் உள்ள பெரும்பாலான பள்ளிகளில் இன்னும் இவ்வகுப்புகள் நடக்கின்றது.(இந்த ஆசிரியர்களை தோட்ட வாத்தியார்,க்ராப்ட் வாத்தியார் என அழைப்போம்)
தொழிற்க்கல்வி:
இது மேல்நிலை வகுப்புகளில் உள்ள Vocational பாடப்பிரிவு(4th group). இவர்களுக்கு தமிழ், ஆங்கிலம், இயற்பியல் அல்லது கணிதம் மற்றும் இவர்கள் தேர்ந்தெடுத்த தொழிற்ப்பிரிவு( கணிப்பொறி அல்லது GM அல்லது மேலும் சில பிரிவுகள் இருக்கின்றன.இதில் எதை வேண்டுமானாலும் தேர்ந்தெடுக்கலாம்)ஆகிய பாடங்கள் இருக்கும். இவர்கள் +2விற்குப் பிறகு பொறியியல் பட்ட/பட்டயப் படிப்புகள் படிக்கலாம். இது தான் பாரி.அரசு அவர்கள் தெரிவித்துள்ளது.

குலக்கல்வித் திட்டம்:
ராஜாஜி கொண்டு வந்த புதிய கல்விக் கொள்கை
இவற்றில் எதுவும் எந்த வகையிலும் தொடர்புடையவை இல்லை.
எனக்குத் தெரிந்த வரையில் "கைத்தொழிற் பயிற்சி" பாடத்திட்டம் நிறுத்தப்பட்டதற்கும் குலக்கல்விக்கு எதிரான போராட்டங்களுக்கும் எந்தவித சம்மந்தமும் இல்லை.
------------------------
அனைத்துப் பின்னூட்டங்களுக்கும் இன்று மாலை விரிவாகப் பதில் தருகிறேன்..(முக்கியமாக பாரதிக்கு).

said...

பெரும்பாலும், திராவிடக் கருத்துக்கு எதிர் கருத்து சொல்லுறவங்களைப் பற்றி அறிய ஃபுரொபையல் பக்கம் சென்றால், வெறுமையோ, இல்லையென்றால், விவரங்கள் தர முடியாத ஃபுரொபையல்களாகவோ இருக்கின்றதே...

பாரதியின் கருத்தைப் பார்த்த பின்பு...அவர் என்ன இது வரை எழுதியிருக்கிறார் என்று படிக்கச் சென்றால்...வெறுமை தான்..இருக்கிறது...

said...

//
தருமி said...
ஜெகதீசன்,
நல்ல பதிவு. நல்ல விளக்கங்கள்.
//
தருமி அவர்களே,
உங்கள் பாராட்டுக்கு நன்றி.
திரு ஜீவி அவர்களின் பதிவில் நீங்கள் இட்ட பின்னூட்டங்கள் தெளிவாகப் புரிந்துகொள்ளத்தக்கதாக இருந்தது. ஜீவி அவர்கள், கு.க.திட்டமும் கைத்தொழில் பயிற்சி வகுப்பும் ஒன்றல்ல எனப் புரிந்து கொண்டிருப்பார் என நினைக்கிறேன்.

said...

//
பாரதியின் கருத்தைப் பார்த்த பின்பு...அவர் என்ன இது வரை எழுதியிருக்கிறார் என்று படிக்கச் சென்றால்...வெறுமை தான்..இருக்கிறது...
//
டிபிசிடி,
ஒருவேளை பாரதி வலையுலகிற்குப் புதியவராக இருக்கலாம்...

பாரி.அரசு, உங்கள் பாராட்டுக்கும், பாரதிக்கு அளித்த பதிலுக்கும் நன்றி.

said...

சதுக்க பூதம்,
உங்கள் கருத்துக்கு நன்றி!!

பிறைநதிபுரத்தான்,
பாராட்டுக்கு நன்றி!

said...

கோவி.கண்ணன்,
பாராட்டுக்கு நன்றி.

//
நான் படித்த பள்ளிகளில் கூட கைத்தெறி நெசவு என்ற பாடத்திட்டம் இருந்து வெறும் அரட்டையுடனே முடிந்தது
//
எங்கள் பள்ளியில் இந்த பீரியட்களை பெரும்பாலும் மற்ற ஆசிரியர்கள் இரவல் வாங்கிவிடுவார்கள்... மற்ற நேரங்களில் அரட்டை தான்.

said...

பாரதி அவர்களே,
//
நானும் அந்தப்பதிவைப் படித்தேன்.
முழு பதிவையும் படித்து அதிலுள்ள மறுமொழிகளையும் படித்துப் பார்த்தால் புரியும் - அவர் குலக்கல்விக்கு ஆதரவாக எதுவும் எழுதவில்லை என்று.
//
நானும் அவர் குலக்கல்விக்கு ஆதரவாக எழுதியுள்ளார் எனச் சொல்லவில்லை.
ஆனால் குலக்கல்வித் திட்டத்தையும், கைத்தொழிற் பயிற்சி வகுப்புகளையும் குழப்பியதும், அவ்வகுப்புகளைக் குலத்தொழில் என்று எதிர்ப்புத் தெரிவித்து நிறுத்திவிட்டார்கள் என அவர் கூறுவது சரியா? குலக்கல்விக்கு எதிரான போராட்டங்களை கைத்தொழில் வகுப்புகளுக்கு எதிரான போராட்டம் என்று திரித்துக் கூறியுள்ளது உங்களுக்குத் தெரியவில்லையா?

அவரின் இந்த வரிகளைப் படித்துப் பாருங்கள்...
//
இளமையில் கற்ற இந்த தொழிற்கல்வியை நான் இழந்ததற்குக் காரணம், இந்தக்கல்வி ஏதோ அவரவர் குலத்திற்கு சம்பந்தப்படுத்தப்பட்டு, "அப்பன் வேலையை மகன் செய்யும் கல்விமுறை" என்று இல்லாத ஒன்றை இருப்பதாகச் சொல்லி பாடத்திட்டத்திலிருந்து நீக்கி விட்டதாக பிற்காலத்தில் அறிந்தேன்.
//
கைத்தொழில் பயிற்சி வகுப்புகளை குலக்கல்வி என்று யாருமே கூறியதுமில்லை. அதற்கு எதிராகப் போராடியதும் இல்லை. அதனால் அது பாடத்திட்டத்திலிருந்து நீக்கப்படவும் இல்லை.

//
அன்று நாங்கள் இலவசமாக கற்ற தொழிற்கல்வி, குலத்தொழில் கல்வி என்று குற்றஞ்சாட்டப்பட்டு, பாடதிட்டத்தில் இருந்து நீக்கப்பட்டது என்றால் அதனால் பலனடைந்தவர்கள் யார் என்று தான் தெரியவில்லை. ஆனால், 'குல்லுக பட்டரின் குலக்கல்வித் திட்டம் ஒழிந்தது' என்று இப்பொழுதும் யாராவது சொல்லும் பொழுதுதான், புன்முறுவல் பூப்பதை மட்டும் தவிர்க்க முடியவில்லை.
//
இந்த வரிகள் உங்களுக்கு குலக்கல்வித் திட்டத்திற்கு ஆதரவானதாகத் தெரியவில்லையா?

'குல்லுக பட்டரின் குலக்கல்வித் திட்டம் ஒழிந்தது' என்று "யாராவது" சொல்லுவது ராஜாஜி கொண்டுவந்த "3 மணி நேரம் மட்டுமே பள்ளிக்கூடம், மற்ற நேரம் உங்கள் அப்பாவின் வேலையைக் கற்றுக்கொள்ளுங்கள்" என்னும் திட்டத்தை ஒழித்ததைத் தான்.இதற்கும் "கைத்தொழில் பயிற்சி" வகுப்புகளுக்கும் என்ன தொடர்பு? மொட்டைத் தலைக்கும் முலங்காலுக்கும் முடிச்சுப் போடுவது உங்களுக்குத் தெரியவில்லையா?

said...

//
அப்படி இருக்காது, ஏனெனில் இழந்த சொர்க்கம் என்றொரு பதிவையும் எழுதி
இருக்கிறார் பாருங்கள்.
//
அதேபோல் பெரியாரின் வழி தனிவழி என்றும் ஒரு பதிவு எழுதியிருக்கிறார் பாருங்கள்.

//
மூதறிஞர் என்று அழைத்திடும் பெரியர் வட்டத்தினைத்தான் சுட்டிக்காட்டுகிறாரோ தவிர, எல்லோரையும் அல்ல. என்னென்ன நன்றிக்கடன்
பட்டிருக்கிறார் என்று பெரியாரைத்தான் கேட்க வேண்டும்.
//

பெரியார் வட்டம் மட்டும் தான் அவரை மூதறிஞர் என அழைக்கிறார்களா என்ன?

குலக்கல்வித் திட்டத்தை பெரியாரை விட அதிகமாக எதிர்த்தவர் காமராசர்.

பெரியார் வட்டம் அவரை "மூதறிஞர்" என அழைத்தது என்ன தவறு?
"மாற்றான் தோட்டத்து மல்லிகையும் மணக்கும் தானே?"
மாற்றுக் கருத்து கொண்டவராக இருந்தாலும், அவரது அறிவையும் திறமையையும் பாராட்டுவதில் பெரியார் வட்டத்திற்கும், காமராசருக்கும் எந்தத் தயக்கமும் இல்லை. இதற்கு எந்த நன்றிக்கடனும் பட்டிருக்கவேண்டியதில்லை.:(
இது குறித்து விரிவாக தனி இடுகை இடுகிறேன்.......

said...

நல்ல பதிவு. நிறைய விஷயங்களின் தொகுப்பாக இருந்தது.

மொத்தத்தில் குலக்கல்வியும் விளங்கி வரவில்லை; தொழிற்கல்வியும் விளங்கி வரவில்லை பாருங்கள். ராஜாஜி அவர்கள் தன் மகன் நரசிம்மனை அரசியலில் கொண்டுவரப் பிரயத்தனப்பட்டதற்கு எவரும் ஏதும் கேட்டுவிடக் கூடாது என்பதற்காகக் கொண்டு வந்த திட்டமோ, காரணமோ, குழப்பமோ, என்ன கண்றாவியோ.

தென்கச்சி சுவாமிநாதன் ஒருமுறை ஒரு பேச்சின் போது சொன்னார்: "சொல்கிறவனுக்கு மட்டும் புரிந்தால் அது தத்துவம்; சொல்பவனுக்குக் கூடப் புரியவில்லை என்றால் அது மகாதத்துவம்" என்று. தெளிவாகப் பேசுவோர் அறிஞர். செய்ய முடிகிறதை மட்டுமே பேசுவோர் பேரறிஞர்; என்னத்தையாவது பேசுவோர் மூதறிஞரோ என்னவோ. (இந்தத் தொல்லைக்குத் தான் மேடையில் தரப்படும் பட்டங்களை மேடையிலேயே விட்டு விட்டு இறங்குங்கையா, சுமந்து திரியாதீங்கன்னு முன்ன ஒரு பதிவில் சொன்னேன்).

மற்றபடி, கோவி.கண்ணன் செய்த புண்ணியமெல்லாம் நாங்கள் செய்யவில்லை. எங்களுக்கு வாரத்தில் இரண்டு நாள் இருந்த CRAFT மற்றும் MORAL INSTRUCTION வகுப்புகளில் தான் எதாவது TESTகளே வைக்கப்படும். ஆறாம் வகுப்பின் போது மட்டும் தக்கிளி வாங்கி பஞ்சில் கட்டையும் நெட்டையுமாக நூல் நூற்றிருக்கிறேன். ராட்டை வாங்கியாகணும் என்கிற என் ஆசை வளர்ந்து விடாத படிக்கு அந்த ஆசிரியரே பார்த்துக் கொண்டார். (நல்லாப்படிக்கிற, உருப்படற வழியப் பாரு. இதை வாங்கி என்ன பண்ணப் போற?)

said...

நன்றி ரத்னேஷ் அவர்களே...
//
மொத்தத்தில் குலக்கல்வியும் விளங்கி வரவில்லை; தொழிற்கல்வியும் விளங்கி வரவில்லை பாருங்கள். ராஜாஜி அவர்கள் தன் மகன் நரசிம்மனை அரசியலில் கொண்டுவரப் பிரயத்தனப்பட்டதற்கு எவரும் ஏதும் கேட்டுவிடக் கூடாது என்பதற்காகக் கொண்டு வந்த திட்டமோ, காரணமோ, குழப்பமோ, என்ன கண்றாவியோ.
//
இருக்கலாம்....:)
//
தெளிவாகப் பேசுவோர் அறிஞர். செய்ய முடிகிறதை மட்டுமே பேசுவோர் பேரறிஞர்; என்னத்தையாவது பேசுவோர் மூதறிஞரோ என்னவோ.
//
இது ரெம்ப நல்லா இருக்கு.... :))
//
மற்றபடி, கோவி.கண்ணன் செய்த புண்ணியமெல்லாம் நாங்கள் செய்யவில்லை. எங்களுக்கு வாரத்தில் இரண்டு நாள் இருந்த CRAFT மற்றும் MORAL INSTRUCTION வகுப்புகளில் தான் எதாவது TESTகளே வைக்கப்படும். //
எங்கள் பள்ளியிலும் இதுபோல்தான்... ஒவ்வொரு வாரமும் ஏதாவது ஒரு ஆசிரியர் அந்த வகுப்புகளைக் கடன் வாங்கிக்கொள்வார்...:)))))

said...

நான் படித்த காலத்திலே என்று சொல்ல முடியாது...நான் படித்த பள்ளிகளிலே, இது போன்றவற்றையே கேள்விப் பட்டதில்லை..ஜெகதீசன் சொல்லும் முன்பு வரை..அதாவது, ஜீவா, கோவி. ஜூவி ஆகியோர் சொல்லும் போது ...ஓ இது அந்தக் காலம் போலிருக்கு என்று தான் எண்ணியிருந்தேன்..

**(--^--)**

ஜெகதீசனும், இது போன்ற வகுப்பு பற்றி பேசும் போது, இது போன்ற ஒன்று நான் படித்த காலத்திலும், இருந்திருக்கிறது என்று தெரிகிறது...
எங்கள் பள்ளியிலே, பி.டி. பீரியட் கூட அபகரித்துக் கொள்ள ஆர்வமுள்ள வாத்தியார்கள் இருந்ததாலும், நகரத்துக்குள், குடியிருப்புக்கள் அருகிலே இருந்ததாலும், பிடி வகுப்புகள் கூட மிஞ்சவில்லை...

பிடி வகுப்புக்கள் இருந்திருந்தால், நான் இன்று டென்டுல்கர்கூட மட்டையடித்துக் கொண்டிருப்பேன்...அதை செய்யாது போன என், தலைமையாசிரியருக்கும், திராவிட அரசுக்கும் என் கண்டங்கள்....

**(--^--)**

அவர் அறிஞர் தான்...அவர் புகழடையும் போது, வயசாயிடுச்சு..கிழடு தட்டினதாலே , மூத்த +அறிஞர்= மூதறிஞர்...

ஆனா, அவருடைய அறிவு எதிலே என்று விசமத்தனமாக கேட்பவர்களே...மக்களால் தேர்ந்தெடுக்கப்படாமலே, ஆட்சிக் கட்டிலிலே அமர்ந்து (இது பற்றி விரிவாக, எதையுமெ விரிவாக எழுதும் நபர்கள் எழுதினால் மகிழ்ச்சி..) அதை அசுத்தம் செய்யும் அறிவு அவருக்கு இருந்தது என்று ஆணித்தரமாக சொல்லிக் கொள்ள கடமைப்பட்டுள்ளேன்...

said...

//
ஆனா, அவருடைய அறிவு எதிலே என்று விசமத்தனமாக கேட்பவர்களே...மக்களால் தேர்ந்தெடுக்கப்படாமலே, ஆட்சிக் கட்டிலிலே அமர்ந்து (இது பற்றி விரிவாக, எதையுமெ விரிவாக எழுதும் நபர்கள் எழுதினால் மகிழ்ச்சி..) அதை அசுத்தம் செய்யும் அறிவு அவருக்கு இருந்தது என்று ஆணித்தரமாக சொல்லிக் கொள்ள கடமைப்பட்டுள்ளேன்...
//
இதைப் பற்றி நீங்களே "விரிவாக" எழுதுங்களேன்... :)

said...

As far as i have read, when Rajaji was CM in 1953, the finances of the state was more precarcious and govt revenues improved only later (when Kamaraj took over).

One important point that no one has stated is the statements and reports of C.Subramaniuam who was in the cabinet of Rajaji (and Kamaraj) : attendance and enrollment in rural schools picked up significantaly when the new system was implemented. the poor rural artisans simply did not send their chidren to school until then.
they could not afford to do it. this system was desgined to make their children attend school atleast for a few hours a day. something is better than nothing.
It is difficult to grasp the real conditions that existed in 1950s now. The nation won its independence recently (1947) and there were more pressing economic and financial problems then. and this system was tried in yaalpaanam and some other parts even before.

Rajaji was neither biased nor casteisit. he had great moral courage and stood for his ideals. he did not hestitate to part company with Gandhiji and later with Congree and Nehru over issues and idealogies. He could have easily compromised and succeeded in having a flourishing career as CM or central minister, like most Congressmen. (he refused to revoke the new education scheme and resigned instead).

He was a visonary far ahead of his peers and his lazzie fare economics (free markets) are now implemented after we learnt a terrible lesson in 1991 when the nation was almost bankrupt due to socialistic policies followed until then.

Pls also see :
http://dondu.blogspot.com/2006/08/2.html

said...

//
As far as i have read, when Rajaji was CM in 1953, the finances of the state was more precarcious and govt revenues improved only later (when Kamaraj took over).
//
அது எப்படிங்க ஒரு வருசத்துக்குள்ள நிதி நிலைமை சரியாச்சு?
அப்படியே இருந்தாலும், ஒரு வருடத்துக்குள்ள சரியாகப்போற நிதிநிலைப் பிரச்சனைக்கு 6000 பள்ளிகளை நிரந்தரமா இழுத்து மூடினாரா?

//
the poor rural artisans simply did not send their chidren to school until then.
they could not afford to do it. this system was desgined to make their children attend school atleast for a few hours a day. something is better than nothing.
//
இல்லைன்னு சொல்லலையே நான்..
ராஜாஜி, பள்ளிக்கு வரவைக்க "3மணி நேரம் மட்டும் தான், அதனால வாங்க" ன்னு திட்டம் தீட்டினார்...
ஆனா காமராசர், மதிய உணவுத் திட்டத்தின் மூலம் முழு நேரமும் வரவைத்தாரே?
"எங்களுக்கு எழுதப் படிக்கத் தெரிந்தால் மட்டும் போதும். அப்பன் வேலையப் பாத்தாப் போதும்" ன்னு ராஜாஜி திட்டம் தீட்டினார்... நாங்கள் நல்ல நிலைக்கு வரவேண்டும் என்று காமராசர் திட்டம் தீட்டினார்.

//
Rajaji was neither biased nor casteisit.
//
உங்களுக்கும் உங்க நண்பருக்கும் மட்டும் அப்படித் தெரியலாம்.

said...

அதியமான் அய்யா,

தமிழ் மணமின்னு வச்சிக்கிட்டு நீங்க போற இடத்திலே எல்லாம்..ஆங்கிலத்திலே எழுதுவதை நான் கண்டிக்கிறேன்.. :)

கணிணியிலே தமிழ் எழுதத் தெரியாதவன் சொன்னா, சரி..நீங்க தமிழ் பதிவே வச்சிருக்கீங்க..அலுவலகத்திலே தமிழ் எழுத முடியும்..எந்த புரொக்ராமும் இன்ஸ்டால் பண்ணாமலே.
http://www.jaffnalibrary.com/tools/Unicode.htm

ராஜாஜி, முதல் மந்திரியா எப்படி ஆனாருன்னு எங்கயாவது பாத்துக் கொஞ்சம் சொல்லுங்களே.

அவர் முதல் மந்திரியா ஆனதே பெரிய காம்பிரமைஸ் பண்ணி தான். காண்ஸ்டிடியுசனலை மீறி, மக்களால் தேர்ந்தெடுக்கப்படாமலே, 2 வருடங்கள் ஆட்சிக்கட்டிலிலே இருந்தார்.

அவரு வேனுமின்னா, எகானமிக்ஸுலப் புலியா இருந்திருக்கலாம், கண்டிப்பானவராக இருந்திருக்கலாம்.

பெரியார் கேட்ட வகுப்புவாரி இடஓதுக்கீட்டை, காங்கிரசில் தீர்மாணத்தில்க் கூட சேர்க்காமல் தண்ணி காட்டியவர் அவர். அந்த விதத்தில், அவர் வல்லவர், விடக்கொண்டர்.





//*K.R.அதியமான். 13230870032840655763 said...

Rajaji was neither biased nor casteisit. he had great moral courage and stood for his ideals. he did not hestitate to part company with Gandhiji and later with Congree and Nehru over issues and idealogies. He could have easily compromised and succeeded in having a flourishing career as CM or central minister, like most Congressmen. (he refused to revoke the new education scheme and resigned instead).

He was a visonary far ahead of his peers and his lazzie fare economics (free markets) are now implemented after we learnt a terrible lesson in 1991 when the nation was almost bankrupt due to socialistic policies followed until then.

Pls also see :
http://dondu.blogspot.com/2006/08/2.html *//

said...

Closing down 6000 schools overnight. i doubt the figure. is there any correct proof or info about the exact numbers and the reasons assigned for closing ?there is a comprehensive biography of Rajaji by Rajmohan Gandhi. my copy is not with me now and i will get back after verifying the facts.
Rajaji was neither narrow minded nor so malicious enought to have closed down 6000 schools within his short two year stint as CM.
His motives were always transparent and above board. his motives and actions are still misunderstood by DK and its allies till date. Kulakkavli system was not meant as kulakkalve thittam. the name stuck inspite of proof about contrary intentions.

As for his caste bias, he did more for eradicating untouchability than most of his peers. read about his actions when he was Salem Muncipal chief, about his ten year stay at Thiruchengode Gandhi ashram where daliths were admitted and treated equally; about his treatment of daliths and all other castes while he was CM, etc.

only his actions regarding reservation can be questioned. but that was in the 20s and priorites and conditions for him to manouvere his most orthodox collegues (brahmins) while at the same time retaining the unity of congress to fight against british were different and difficult. he didn't try to undo the reservation system as it existed in 1952 when he became CM ?

He was aloof from Congress activities in 1952. The Congress leaders went to him and pleaded him to become CM in 1952 when there was thin majority and unstability. Only with the approval and invitation of Nehru did he agree to become CM.

Kamaraj for all his virtues and acheivements was not so innocent. We have great respect for his honesty, patriotism and commitment to development of nation and welfare of the downtroden.

But he was a power broker esp after Nehru's death. Playing the role 'kingmaker' he made Indira as PM with not so ethical means while side lining Morarji Desai who was the natural contender for the post. KAmaraj and other Syndicate bosses of Congress wanted a puppet whom they could manipulate from behind. Unfortunately for them Indira emerged as a more unscrupulous and ambitious tyrant who kicked the ladder that she used to climb. Ultimately Kamaraj died a bitter, disillusined and unhappy man in 1975. Pls read
'Crisis of Conscience' by Rajinder Puri (About the 1969 split in COngress).
-------

TBCD,

I use that s/w and my tamil typing is torteureously slow, i am sorry to use english.

said...

//
Closing down 6000 schools overnight. i doubt the figure. is there any correct proof or info about the exact numbers and the reasons assigned for closing ?there is a comprehensive biography of Rajaji by Rajmohan Gandhi. my copy is not with me now and i will get back after verifying the facts.
//
ப்ரூப் வேணுமின்னா நெட்ல தேடிக்கோங்க....

எனக்கு ஆங்கிலம் தெரியாது.
இனிமேல் தமிழ் பின்னூட்டங்கள் மட்டும் தான் வெளியிடுவேன் & பதில் சொல்லுவேன்... :(

said...

அடடா இம்புட்டு விசயம் நடந்திருக்கா??!?
நமக்கு சேதி சொல்லலயே

ஜெகதீசன் , மற்றும் பாரி- அரசு கருத்துக்களே என் கருத்துக்கள்

said...

இராஜாஜியின் குலக்கல்வி பற்றிய இந்த இடுகையில் குலம்.. குலக்கல்வி..என்றவுடன் பழைய நினைவுகள் திரும்பின

நான் சிறுவனாய் இருந்த போது சாதி ஒழிப்பு முழு வேகத்தில் இருந்த காலம்.... ராஜாஜி ஆட்சியெல்லாம் போயி காமராசர் பட்டினி போட்டார் என்றும் மந்திரி கக்கன் எலி திங்க சொன்னார் என்றும் அவர்கள் பெயரில் வைசைப்பாட்டெழுதி முடிஞ்சு போன பகுத்தறிவுக்காலம்.

தனிமனிதன் பெயரில்...கடை பெயரில்.. அட என்னாங்க தெருப்பெயரில் என எல்லா இடத்திலும் சாதிக்கு மேல் தார் பூசப்பட்டது :-)

கேரளத்தில் இருந்து வந்த நாயர்களும், கர்நாடக பட் , ஹெக்டேக்களும் (இங்கே இருந்தவர்களுக்கு புரியாததாலோ என்னவோ) ஜாதி ஒழிப்பு தார் பூசலில் இருந்து தப்பித்துக்க்கொண்டனர் :-) ஆக மொத்தம் நாயர் டீஸ்டால் நாயர் டீ ஸ்டாலாகவே இருந்தது ... பட் ஓட்டல் பட் ஓட்டலாகவே இருந்தது. சில சையதுகளும் அன்சாரிகளும் அப்படியே தப்பித்தனர் !!

இரண்டாவது பெயர் இல்லாமல் நான் வெரும் சுப்பு என்ற ஒரு பெயருடனேயே ஹாயாக சுத்தி வந்தேன்... மிஞ்சிப்போனால் கையெழுத்துன்னு வந்தா..அப்பா பெயர் ஒற்றைஎழுத்து இனிஷியலாக வந்தது. சொந்த பெயருக்கு முன் !

கடவுச்சீட்டு ( பாஸ்போர்ட்) எடுக்கப்போய் second name .. second name ! என்று ஹிந்திக்கார பாஸ்போர்ட் ஆபீஸர் கேட்டதும் நான் முழிக்க கடைசியில் எங்கப்பா பெயரை இரண்டாவது பெயர் என கொடுத்ததும் , அதை அவர்கள் அப்படியே பதிந்ததும், ...வெளியூர் (அட அதாங்க பெங்களூர் வந்து..) என்னை மறியாதையாய் விளிப்பவர் என் இரண்டாவது பெயர் கொண்டு அழைக்க (அதாங்க எங்கப்பா பெயரில் கூப்பிட்டால்) நான் பாட்டுக்கு யாரையோ கூப்பிடுறாங்கன்னு கம்முன்னு இருந்த காலங்களும் உண்டு... :-)

நீண்ட பின்னூட்டாகிவிட்டது. மீதமுள்ளவை http://bit.ly/aMeGHn