Monday, January 17, 2011

ஆண்ட்ராய்டு தமிழ் விசைப்பலகை

ஆண்ட்ராய்டு இயங்குதளத்திற்கான தமிழ் விசைப் பலகை "தமிழ்விசை", ஆண்ட்ராய்டு சந்தையில் தமிழ்ப்புத்தாண்டு மற்றும் பொங்கல் நாள் (தை முதல் நாள்) அன்று தமிழா! குழுவினரால் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த விசைப்பலகையை ஆண்ட்ராய்டு 1.6 மற்றும் அதற்கு மேற்பட்ட இயங்குதளங்கள் உள்ள செல்பேசிகளில் பயன்படுத்த முடியும்.

ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் இன்னும் இயங்குதள அளவிலான தமிழ் ஆதரவு இல்லை. எனவே
தமிழ்விசை விசைப்பலகையுடன் ஒரு "preview view" வருகிறது. நீங்கள் தட்டச்சும் போது "preview view" வில் நீங்கள் தட்டச்சுவது தமிழில் தெரியும்.

ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் தமிழ் படிக்க தற்போதைக்கு ஓப்ரா மினி அல்லது செட்(sett) உலாவிகளைப் பயன்படுத்தலாம்.

தமிழ்விசையை ஆண்ட்ராய்டு சந்தையில் தரவிறக்க உங்கள் செல்பேசியில் ஆண்ட்ராய்டு சந்தைக்குச் சென்று "tamilvisai அல்லது tamil visai அல்லது tamil keyboard" எனத் தேடவும்.

இந்த மென்பொருள் திறவுமூல மென்பொருள். இதன் மூலத்தை
https://code.google.com/p/android-tamilkey/
இங்கிருந்து தரவிறக்கிக் கொள்ளலாம்.

வழுக்கள் அல்லது ஆலோசனைகள் இருந்தால் இங்கு தெரிவிக்கவும்
https://code.google.com/p/android-tamilkey/
அல்லது
http://www.thamizha.com/project/android-tamilkey

ஆலோசனைகள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன.

Sunday, September 12, 2010

அடிங்... எத்தன பேரு கிளம்பீருக்கீங்க இது மாதிரி?

Hindi இந்தியாவின் national language
Sanskrit is divine language
Gods எல்லாம் Sanskrit ல தான் பேசிக்குவாங்க.
Tamil, Telugu எல்லாம் Sanskrit ல இருந்து தான் வந்தது.

Wednesday, July 21, 2010

ப்ருக்கோலி-உருளைக்கிழங்கு காரக்குழம்பு/சாம்பார்/குருமா

ப்ருக்கோலி-உருளைக்கிழங்கு காரக்குழம்பு

தேவையானவை:
1) உருளைக்கிழங்கு -3
2) ப்ருக்கோலி - 168கி
3) தக்காளி -2
4)மாங்காய்
5) பெரிய வெங்காயம்(சின்னது) - 1
6)மிளகாய் - 3
7) கடுகு, உளுந்து, வெந்தயம், சீரகம்,கரிவேப்பிலை இன்ன பிற பொருட்கள்
8) வீட்டிலுள்ள எல்லா மசாலாக்களும் (அந்த ஓரத்தில் இருக்கும் பாபாஸ் மசாலா தவிர)
9)இஞ்சி-பூண்டு விழுது மற்றும் fridge ல இருக்கும் மற்ற எல்லா விழுதுகளும்
10)மேலே சொல்லாமல் விடுபட்ட இன்ன பிற பொருட்களும்

செய்முறை:
1)அலுவலகத்திலிருந்து சரியாக 6மணிக்கு வெளியேறி நேராக காமன்வெல்த் சென்-சியாங் பேரங்காடிக்குச் செல்லவும். அங்கு மாங்காய், உருளைக்கிழங்கு(baby potato - காய்கறிப் பகுதியில் 3 அல்லது 4வது வரிசையில் அல்லது வேறெங்காவது இருக்கும்..), தக்காளி வாங்கிக்கொள்ளவும்.

2)வீட்டுக்கு வந்து லுங்கிக்கு மாறிக்கொள்ளவும் (சமைப்பதற்கு ட்ரவுசரைவிட லுங்கி வசதியாக இருக்கும்)

3)உருளைக்கிழங்கு, தக்காளி, மாங்காய் ப்ருக்கோலி, மிளகாய், காய்கறி வெட்டும் தட்டு, கத்தி ஆகியவற்றை நன்கு கழுவிக்கொள்ளவும்.

4)மேலே குறிப்பிட்ட காய்கறிகளையும், வெங்காயத்தையும் நறுக்கவும்.

5) உருளைக்கிழங்கை தனியாக ஒரு 1/3 வேக்காடு வேகவைத்து எடுத்துவைத்துக்கொள்ளவும்.

6)வானலியில் சிறிது எண்ணை ஊற்றி காயவைக்கவும். எண்ணை காய்ந்ததும் கடுகு, உளுந்து இன்ன பிற பொருட்கள் போட்டு தாளித்து கரிவேப்பிலை போடவும்.

67வெட்டிவைத்துள்ள வெங்காயம், மிளகாய் ஆகியவற்றை நன்கு பொன்னிறமாக வரும் வரை வதக்கவும்.

7) 1/3வேக்காடு வெந்த உ.கிழங்கு, ப்ருக்கோலி, மாங்காய் ஆகியவற்றை சேர்த்து வதக்கவும்.

8) பாபா மசாலா தவிர்த்த எல்லா மசாலாக்களும் சேர்த்து உப்பு சேர்த்து வதக்கவும். மசாலா வாசம் அல்லது பச்சை வாசம் அல்லது வேறு எதாவது வாசம் போகும் வரை வதக்கவேண்டும்.

9)வெட்டிவைத்த தக்காளியை சேர்க்கவும்.(பொதுவாக தக்காளி 6வது பாயிண்ட் இருக்குமிடத்தில் சேர்ப்பார்கள். ஆனால் விஜய் டீவி சமயல் சமயல் நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற ஒருத்தர் இந்த இடத்தில் சேர்த்தால் நன்றாக இருக்கும் அப்படின்னு சொன்னார்....)

10) தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு கலகவும்.

11) கரண்டியில் கொஞ்சம் குழம்பு எடுத்து கையில் ஊற்றி உப்பு காரம் சரியாக இருக்கிறதா என நக்கி சரிபார்த்துக்கொள்ளவும்.

12)அடுப்பைக் குறைத்து வைத்து, வானலியை மூடி குழம்பு கொதிக்கும் வரை/காய்கறிகள் வேகும் வரை காத்திருக்கவும்

13) காய்கறி வெட்டும் தட்டு, வெட்டிய காய்கறிகளை வைத்திருந்த தட்டுகள், கத்தி, நேற்றிரவு ஜூஸ் குடித்த டம்ளர் ஆகியவற்றைக் கழுவிக் கவிழ்த்து வைக்கவும். இடையில் இரண்டு முறை கொஞ்சம் குழம்பைக் கையில் ஊற்றி நக்கிப் பார்த்து உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளவும்.

14) குழம்பு தயார். இறக்கும் போது கொஞ்சம் மல்லி இலை கிள்ளிப் போட்டு இறக்கவும்.

15) குழம்பை fridge இல் வைக்கத்தக்க பாத்திரத்திற்கு மாற்றி வைத்துவிட்டு வானலியைக் கழுவவும்.

16) fridgeஇல் இருந்து எடுத்த மசாலா, இஞ்சி பூண்டு விழுது, கறிவேப்பிலை, இன்ன பிறவற்றை மறக்காமல் திரும்ப வைக்கவும்.

பில்ஸ்பெர்ரி ரெடிமேட் ரொட்டியுடன் சேர்த்து சாப்பிட இந்தக் குழம்பு மிகவும் ஏற்றது.
(பில்ஸ்பெர்ரி ரெடிமேட் ரொட்டிசெய்வது குறித்த குறிப்பு இங்கே: http://jegadeesangurusamy.blogspot.com/2008/09/3.html
)




ப்ருக்கோலி-உருளைக்கிழங்கு சாம்பார்
மேலே குறிப்பிட்டுள்ள சமையல் குறிப்பில், காய்கறிகளை வேகவைக்கும் போது வேகவைத்த பாசிப்பருப்பு அல்லது துவரம்பருப்பு சேர்த்து வேகவைத்தால் அது சாம்பார்.

ப்ருக்கோலி-உருளைக்கிழங்கு குருமா
எந்தக் குழம்பு வைத்தாலும் குழம்பை இறக்குவதற்கு 5 நிமிடம் முன் அரை கப் தயிர் சேர்த்து வேகவைத்து இறக்கினால் அதற்குப் பெயர் குருமா என என் அறை நண்பர்(ஆந்திராக்காரர்) சொன்னார். அவரின் கூற்றுப்படி, மேலே குறிப்பிட்ட குழம்பை இறக்குவதற்கு 5.35 நிமிடங்களுக்கு முன் தயிர் சேர்த்து இறக்கினால் அது குருமா.

உரிமைத் துறப்பு:
1) இந்தக் செய்முறை வாசிக்க அல்லது வாசிக்காமலிருக்க மட்டுமே
2) இதை யாராவது செய்து சாப்பிட முயற்சித்தால் அது சொந்த செலவில் சூனியம் மட்டுமே
3) இதை சாப்பிட்டு எதாவது நேர்ந்தால் அதற்கு நானோ அல்லது கூகுளோ எந்த விதத்திலும் பொறுப்பல்ல. வேண்டுமெனில் ஏன் எழுதல... எதாவது எழுது என்று நச்சரித்தவர்கள் பொறுப்பேற்கலாம்.


நன்றி.. வேறொரு சமையல் குறிப்புடன் அடுத்த ஆண்டு மீண்டும் சந்திக்கிறேன்.

Thursday, December 24, 2009

நான் இருக்கிறேன்!!

நான் இருக்கிறேன்!!
நானும் இருக்கிறேன்!!!
நான் இன்னும் இருக்கிறேன்!!!!

Wednesday, October 14, 2009

யார் சொன்னது அங்கு அவலம் என்று?

ஆம்! அங்கு அவலம் ஏதும் இல்லை. பாலாறும், தேனாறும் பாய்ந்து ஓடுகிறது. இப்போது அங்கிருக்கும் ஒரே பிரச்சனை இந்த ஆறுகளில் இருந்து மொண்டு குடிக்கப் போதுமான அளவு சொம்புகள் இல்லை என்பதே!
வெளியிலிருப்பவர்கள் இந்த ஆறுகளில் இருந்து பாலும், தேனும் திருடிவிடக்கூடாது என்பதற்காகவும், இந்த ஆறுகள் வெளியே சென்றுவிடாமல் இருப்பதற்காகவும் பாதுகாப்புக்காக மட்டுமே முள்வேலி!

இந்தத் தமிழக இதழ்களுக்கு வேறு வேலையே இல்லை.
நல்ல வேளை நமது குழுவினர் அங்கு சென்று உண்மைகளை அறிந்து நமக்குத் தெரிவித்துள்ளனர். இல்லையெனில் இன்னும் இந்த இதழ்கள் சொல்வதையே நாம் நம்பிக்கொண்டிருந்திருப்போம். அவர்களுக்குக் கோடி நன்றிகள்!

சொம்பு பற்றாக்குறையை நீக்க தியாகத் திருவிளக்கும், இனத்தலைவரும் விரைவில் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பார்கள்.

மக்கள் எவ்வளவு மகிழ்வாய் இருக்கிறார்கள் தெரியுமா? பொழுது போவதற்காக, பாதுகாப்பிற்காக இருக்கும் ராணுவத்தினருடன் கபடியும் கில்லியும் விளையாடி மகிழ்கிறார்கள். இதிலிருந்தே தெரிந்துகொள்ளலாம் ராணுவத்தினர் பழக எவ்வளவு இனிமையானவர்கள் என்று.

"************** *********************** ************************** *************************** *************************** ***** *****************************************
************** *********************** ************************** *************************** *************************** ***** *****************************************
************** *********************** ************************** *************************** *************************** ***** *****************************************
************** *********************** ************************** *************************** *************************** ***** *****************************************
************** *********************** ************************** *************************** *************************** ***** *****************************************
************** *********************** ************************** *************************** *************************** ***** *****************************************
************** *********************** ************************** *************************** *************************** ***** *****************************************
************** *********************** ************************** *************************** *************************** ***** *****************************************
************** *********************** ************************** *************************** *************************** ***** *****************************************
************** *********************** ************************** *************************** *************************** ***** *****************************************
************** *********************** ************************** *************************** *************************** ***** *****************************************
************** *********************** ************************** *************************** *************************** ***** *****************************************
************** *********************** ************************** *************************** *************************** ***** *****************************************"

"*******" இருக்கும் இடங்களில் உங்களுக்குப் பிடித்த சொற்களை நிரப்பி இந்தக் குழுவினரையும் அவர்களை அங்கு அனுப்பியவர்களையும் பாராட்டுங்கள்! (உங்களது பாராட்டுக்கள் 2000 சொற்களுக்கு மிகுந்து இருக்க வேண்டும். எவ்வளவு பாராட்டினாலும் உக்காந்து கேட்டுக்கிட்டே இருப்போம் நாங்க..)

இதற்கும் மேலும் அங்கு அவலம் என்று யாரேனும் சொன்னால், இந்தக் குழுவினரும், அவர்களை அங்கு அனுப்பிய தியாகத் திருவிளக்கும், இனத்தலைவரும் தங்கள் குடும்பங்களுடன் சென்று முகாம்களில் மக்களுடன் சேர்ந்து வாழ்வார்கள் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்!

Wednesday, August 5, 2009

ஆமத்தூர்

நம்ம இப்ப இருக்குறது விருதுநகர் பேருந்து நிலையம். இதோ வருது பாருங்க சிவகாசி போற 3ம் எண் பேருந்து... வாங்க ஏறலாம்.. ஏறியாச்சா.. ஜன்னல் சீட்டுல உக்காந்துக்கோங்க.... இன்னும் 15 நிமிசப் பயணத்துல ஊருக்குப் போய்ச் சேந்துரலாம்..

இதோ இது தான் குமாரலிங்கபுரம்.. இதைத் தாண்டினா 2 நிமிசத்துல கவலூர் வந்துரும்.
இதோ கவலூரைத் தாண்டீட்டோம். சாலையின் இரு புறத்திலும் ஒரு திடீர் மாற்றம் தெரியுதா... ஆமாம்... நம்ம இப்ப ஆமத்தூர் எல்லைக்கு வந்துட்டோம்...

சாலையின் இரு புறத்திலும் பச்சைப் பசேல் என்ற வயல் வெளிகள். பெரும்பாலும் நெற்பயிர்கள்.. இடையிடையே சில வயல்களில் பாசிப்பயறு, உளுந்து போன்ற தானியங்கள். சில வயல்களில் பருத்தி போன்ற பணப் பயிர்கள்.. சிலவற்றில் பூத்துக் குலுங்கும் சூரிய காந்தி. வயல்களில் பாடிக்கொண்டும் பேசிக்கொண்டும் வேலை பார்த்துக்கொண்டிருக்கும் இளம் பெண்டிரும் இளையரும்.

சாலையின் இடதுபுறத்தில் ஊரைஒட்டி ஒரு பெரிய குளம். குளக்கரையில் மிகப் பெரிய ஆலமரம் ஒன்று. குளத்தைச் சுற்றிலும் வேம்பு, புளி எனப் பலதரப்பட்ட மரங்கள். போனவாரம் பெய்த மழையில் குளம் நிரம்பி வழிகிறது. குளத்தில் பூத்துக் குலுங்கும் தாமரை மற்றும் அல்லி மலர்கள்.

குளத்தின் அருகே ஒரு நந்தவனம். நந்தவனத்தில் பூத்துக் குலுங்கும் மலர்கள்.. முல்லை, மல்லி, நந்தியாவட்டை, பிச்சி, ரோஜா, கேந்தி, செவ்வந்தி, வாடாமல்லி எனப் பலதரப்பட்ட மலர்கள். நந்தவனத்தின் நடுவே ஒரு முருகன் கோயில்.

குளத்தில் நீந்தி விளையாடிக் கொண்டிருக்கும் சிறுவர்கள். குளக்கரையில் அமர்ந்து அறுவடை பற்றிப் பேசிக்கொண்டிருக்கும் பெரியவர்கள். அரசியல் அரட்டை அடித்துக்கொண்டிருக்கும் இளைஞர்கள்.

அந்த இளைஞர்களைக் கிண்டல் அடித்துக்கொண்டே குளக்கரையில் இருக்கும் அடி குழாயில் நீர் எடுக்க வந்து கொண்டிருக்கும் இளம் பெண்கள். இதைத் தெரிந்தும் தெரியாதது போல் ரசித்துக்கொண்டே தம் பேச்சுக்களைத் தொடரும் இளையர்கள்.

குளத்தை தாண்டியதும் சிறிது தூரத்தில் பேருந்து நிறுத்தம். பேருந்து நிறுத்தத்தை ஒட்டி ஒரு பெரிய கடைவீதி. கடை வீதியைத் தாண்டியதும் அகலமான தெருக்கள். வீடுகளின் முற்றத்தில் தானியங்களை உலர வைத்துக் கொண்டிருக்கும் பெண்டிர். தானியங்களைக் கொத்த வரும் பறவைகளை, பாவம் சாப்பிட்டுப் போகட்டும் என்று துரத்தாமல் விடும் பெண்டிர்."

ம்ம்ம்ம்ம்...... இப்படியெல்லாம் சொல்லனுமின்னு எனக்கும் ஆசைதான். ஆனா எங்க ஊரு ஒன்னும் தஞ்சாவூர் பக்கத்துல இல்லையே... பழைய ராமநாதபுரம் மாவட்டத்தில இல்ல இருக்கு. இருந்தாலும் "காக்கைக்கும் தன்குஞ்சு பொன்குஞ்சு" ஆச்சே... அதனால எங்க ஊரைப் பத்தி சொல்லப் போறேன் இந்தத் தொடரில்.

அடுத்த பகுதி விரைவில்...

***********************************************************************************
ஒரு விளம்பரம்..

சிங்கை பதிவர்கள் அனைவரும் சேர்ந்து "பதிவர்களை டரியலாக்கும்" தலைப்புகளுடன் ஒரு கட்டுரைப் போட்டி நடத்துவது அனைவரும் அறிந்ததே... போட்டிக்கான உங்கள் ஆக்கங்களை அனுப்ப இறுதி நாள் ஆகஸ்டு-15. அதற்கு இன்னும் 10 நாட்கள் மட்டுமே உள்ளது.. எனவே உங்கள் ஆக்கங்களை விரைவில் அனுப்பவும்.

நானும் ஒரு பரிசு அறிவிக்கலாமின்னு இருக்கேன்.. மணற்கேணி-2009 போட்டியில் வெல்லும் முதல் 3 நபர்களுக்கு, நான் ஒரு கிழமை(வாரம்) காலம் ஆமத்தூரைச் சுற்றிக் காட்டுகிறேன். பயணம், உணவு & உறைவிடச் செலவுகள் அனைத்தும் நான் ஏற்றுக் கொள்கிறேன்..

மணற்கேணி போட்டியில் வெற்றி பெறுவோர், தங்களது கடவுச்சீட்டு விவரங்களை எனக்கு அனுப்பினால் ஆமத்தூர் செல்ல விசா ஏற்பாடு செய்யப்படும்...

ஆமத்தூர் வர நீங்க செய்யவேண்டியதெல்லாம்....
"மணற்கேணி போட்டியில் கலந்துகொள்ளுங்கள் & வெல்லுங்கள்... போனசாக உங்களுக்கு ஒரு கிழமை சிங்கை பயணமும் கிடைக்குதே.... "

Friday, July 24, 2009

பதிவுலக விருது அங்கீகர ஆணையம்!

பிரபல தமிழ்ப் பத்திரிக்கைகளே பதிவர்களின் பதிவுகளை திருடி செய்தியாக வெளியிடுளியிடும் அளவுக்கு பதிவுலகம் அசுர வளர்ச்சியடைந்துள்ளது.சிறிது காலம் முன் வரை பதிவுலகை அவர்களின் கட்டுப்பாட்டில் வைத்திருந்த மூத்த பதிவர்கள், இப்போது அவர்களின் இருப்பைக் காத்துக்கொள்வதற்காக ஆளுக்கொரு விருது வழங்கி தங்களை பல்கலைகழகத்தின் துணை வேந்தர்போல காட்டிக்கொள்கிறார்கள்.

கரப்பான்பூச்சி விருது, மூட்டைப்பூச்சி விருது எனப் பெயரிட்டு இவர்களே விருதுகளை வழங்குகின்றனர். இந்தப் போக்கை இப்படியே விடுவது ஆரோக்கியமானதல்ல. எனவே விருது வழங்குதலைக் ஒழுங்குபடுத்த ஒரு அமைப்பு ஏற்படுத்த வேண்டியது இன்றியமையாததாகின்றது.

இதற்காக அமைக்கப்பட்டது தான் "பதிவுலக விருது அங்கீகர ஆணையம்". இனி இந்த ஆணையத்தின் அங்கீகரம் பெற்ற அமைப்புகள் / பதிவர்கள் மட்டுமே இனி விருதுகள் வழங்க வேண்டும்! அங்கீகரம் பெறாதவர்கள் விருதுகள் வழங்குவது சட்ட விரோதமானது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

இதில் பதிவர்களும் கொஞ்சம் பொறுப்புடன் நடந்துகொள்ளவேண்டும். விருது பெறும் முன் அந்த விருது ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டவரால் தரப்படும் விருதா என்பதை உறுதி செய்துகொள்ளவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம். அங்கீகரம் பெறாத விருதுகளைத் தங்கள் பதிவுகளில் இணைப்பதைத் தவிர்க்கவும்.


விரைவில்
1. தொடர் பதிவு அங்கீகர ஆணையம்
2. வலைப் போட்டிகள் அங்கீகர ஆணையம்
3. வலைத் திரட்டிகள் அங்கீகர ஆணையம்
எனப் பதிவுலகம் சார்ந்த அனைத்து செயல்களுக்கும் ஆணையங்கள் அமைக்கப்படும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்!

இப்படிக்கு
பதிவுலக விருது அங்கீகர ஆணையம்

Monday, June 29, 2009

தோண்டலாம் வாங்க!

Feel Good

கிணறு வேண்டும் என எண்ணிய பிறகு வெறும் மணல் தான், ஆழமாக தோண்ட தோண்ட அதனுள் நீர் இருப்பது, சுரப்பதும் நமக்கு தெரியவருகிறது. நம் எழுத்துக்கள் வெறும் எண்ணங்களாலும், நடப்புகளாலும் எழுதப்படுவதைவிட ஒரு குறிக்கோள் அதாவது ஒரு தலைப்பின் கீழ் எண்ணங்களைக் குவித்து தகவல்களைத் திரட்டி சிறப்பான ஆக்கமாக மாற்றும் போது அது ஒரு படைப்பாகப் போற்றப்படும். பதிவர்களை ஊக்குவித்து, பரிசளித்து, பதிவர்களை மற்றும் ஒரு பரிணாம வளர்ச்சிக்கு இட்டுச் செல்ல, சிங்கைப் பதிவர்கள் எடுக்கும் சிறு முயற்சியின் முதல் வித்து மணற்கேணி - 2009.

மணற்கேணி- 2009 குறித்த முழு விவரங்களுக்கு இங்கே செல்லவும் : http://www.sgtamilbloggers.com

Wednesday, April 8, 2009

இந்தியா என் தாய்நாடு

குறிப்பு : இளகிய மனம் கொண்டவர்கள் பார்க்கவேண்டாம்.


இந்தியா என் தாய்நாடு. இந்தியர் அனைவரும் என் உடன்பிறந்தவர்கள்.என் தாய்த்திருநாட்டை நான் உளமாற நேசிக்கிறேன்.



வளமும் வேறுபாடும் நிறைந்த அதன் மரபினை எண்ணி இறுப்பூதடைகிறேன். அன்னதன் புகழுக்கேற்ப தகுதியுடைய நன்மகனாய் விளங்க நான் என்றும் முயல்வேன்.

என்நாட்டிற்கும் என் நாட்டு மக்களுக்கும் என் வந்தனை என்றும் உரியது. என் நாட்டவர் வாழ்வின் நலமும் வளமுமே என் போற்றரும் இன்பம் என்று உளமாற உறுதி கூறுகிறேன்.

Sunday, February 15, 2009

புன்னகை மன்னன் கமல்& ரேகாவுக்குப் போட்டியோ?


அதுக்கெல்லாம் மலை மேலருந்து குதிக்கனும் பாரதி & ராம்.....


அந்தரத்தில், வெறும்கையில வயலின் வாசிக்குறாரு......


யாருக்காகக் காத்துக்கொண்டிருக்கிறார் டொன் லீ... ஒரு குறிப்பு: காத்துக்கொண்டிருந்தது பிப்ரவரி-14 அன்று


Mr.டொன் லீ... ராம் மேல உங்களுக்கு அப்படியென்ன கோவம்?

Friday, February 6, 2009

ஆகா! ஓகோ!! -2

தமிழக அரசின் வேண்டுகோளின்படி மத்தியஅரசு எடுத்த முயற்சிகளினால் ஐ.நா. மன்றம் அமெரிக்கா, பிரிட்டன், டோக்கியோ கூட்டமைப்பு நாடுகள் வெளியிட்டுள்ள கருத்துக்களுக்கு வரவேற்கிறேன்.
அதேநேரத்தில் வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி, உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோரின் அறிவிப்புகளும் வெளிவந்துள்ளன. அவற்றையும் வரவேற்கிறேன்.
சூப்பரோ சூப்பர்!!!!
இலங்கை பிரச்சனையில் ஒற்றுமையாக இருப்போம்: கலைஞர்


இந்தப் பதிவுக்கும் இதே லேபிள்களை வைத்துக்கொள்ளவும்:
கலைஞர், கருணாநிதி, தமிழினத் தலைவர், அரசியல், சிங்கள ரத்னா, செயல்படாதகுழு, வெக்கங்கெட்ட அரசியல், மானங்கெட்ட அரசியல், பதவி வெறி, இன்னும் பல அன்பார்லிமெண்ட்டரி சொற்கள்

Tuesday, February 3, 2009

ஆகா! ஓகோ!

லேபிள்கள் : கலைஞர், கருணாநிதி, தமிழினத் தலைவர், அரசியல், சிங்கள ரத்னா, செயல்படாதகுழு, வெக்கங்கெட்ட அரசியல், மானங்கெட்ட அரசியல், பதவி வெறி, இன்னும் பல அன்பார்லிமெண்ட்டரி சொற்கள்

பேரணிகள், கூட்டங்கள், மாநாடுகள் நடத்த திமுக முடிவு

திமுக ஆட்சியைக் கவிழ்க்க சதி

இலங்கை பிரச்சனையில் நேரடியாக தலையிடும் உரிமை மாநில அரசுக்கு இல்லை

திமுக செயற்குழு முடிவு:இலங்கை தமிழர் நல உரிமை பேரவை’ உதயம்

Friday, January 30, 2009

நகலாயுதம்



தீக்குளிப்பதற்கு முன் விநியோகித்த முத்துகுமரனின் இறுதி அறிக்கை

அன்பார்ந்த உழைக்கும் தமிழ்மக்களே...

வணக்கம். வேலைக்குப் போகும் அவசரத்திலிருக்கும் உங்களை இப்படி சந்திக்க நேர்ந்ததற்கு நான் வருந்துகிறேன். ஆனால் வேறு வழியில்லை. என் பெயர் முத்துக்குமார். பத்திரிகையாளர் மற்றும் உதவி இயக்குநர். தற்சமயம் சென்னையில் உள்ள பத்திரிகை ஒன்றில் வேலை செய்து வருகிறேன். உங்களைப்போல் தான் நானும். தினமும் செய்தித்தாளையும், இணையத்தையும் பார்த்து பார்த்து, தினம் தினம் கொல்லப்பட்டு வரும் எம் சக தமிழர்களைக் கண்டு சாப்பிட முடியாமல், தூங்க முடியாமல், யோசிக்க முடியாமல் தவிக்கும் எத்தனையோ பேரில் ஒரு சாமானியன். வந்தாரை வாழ வைக்கும் செந்தமிழ் நாட்டில் சேட்டு என்றும், சேட்டனென்றும் வந்தவனெல்லாம் வாழ, சொந்த ரத்தம் ஈழத்தில் சாகிறது. அதைத் தடுத்து நிறுத்துங்கள் என்று குரல் கொடுத்தால், ஆம் என்றோ இல்லை என்றோ எந்த பதிலும் சொல்லாமல் கள்ள மௌனம் சாதிக்கிறது இந்திய ஏகாதிபத்தியம். இந்தியாவின் போர் ஞாயமானதென்றால் அதை வெளிப்படையாகச் செய்ய வேண்டியதுதானே.. ஏன் திருட்டுத்தனமாக செய்ய வேண்டும்?
ராஜீவ்காந்தியைக் கொன்றார்கள் என்ற சொத்தை வாதத்தை வைத்துக்கொண்டு, சில தனிநபர்களின் பலிவாங்கல் சுயநல நோக்கங்களுக்காக ஒரு பெரும் மக்கள் சமூகத்தையே கொன்று குவிக்கத் துடிக்கிறது இந்திய அதிகார வர்க்கம். ராஜீவ் காந்தி கொலையில் விடுதலைப்புலிகள் மட்டும் குற்றம்சாட்டப்படவில்லை. தமிழக மக்களையும் குற்றவாளிகள் என்று குற்றம்சாட்டியது ஜெயின் கமிஷன் அறிக்கை. அப்படியானால் நீங்களும் ராஜீவ்காந்தியைக் கொலை செய்த கொலைகாரர்கள்தானா?

ஜாலியன் வாலாபாக்கில் வெள்ளையன் கொன்றான் என்றார்களே, இவர்கள் முல்லைத் தீவிலும் வன்னியிலும் செய்வதென்ன? அங்கு கொல்லப்படும் குழந்தைகளைப் பாருங்கள். உங்கள் குழந்தைகள் நினைவு வரவில்லையா? கற்பழிக்கப்படும் பெண்களைப் பாருங்கள். உங்களுக்கு அதுபோன்ற வயதில் ஒரு தங்கையோ, அக்காவோ இல்லையா? ராஜீவ் கொல்லப்பட்டபோது காங்கிரசின் முக்கிய தலைவர்கள் ஏன் அவருடன் இல்லை, கூட்டணிக் கட்சித் தலைவியான ஜெயலலிதா, தமிழ்நாட்டில் ராஜீவ் கலந்துகொள்ளும் ஆகப்பெரிய பொதுக்கூட்டத்தில் ஏன் பங்கெடுக்கபோகவில்லை என்பதுபோன்ற கேள்விகள் கேட்கப்படாமலும், இவர்களால் பதில் சொல்லப்படாமலும் கிடக்கின்றன. மக்களே யோசியுங்கள். இவர்கள்தான் உங்கள் தலைவர்களா? பணம், அடியாள் பலம் ஆகியவற்றைக் கொண்டு மிரட்டல் அரசியல் நடத்தி வரும் இவர்கள் நாளை நம்மீதே பாய மாட்டார்கள் என்பதற்கு என்ன நிச்சயம்? அப்படி பாய்ந்தால் யார் நம் பக்கம் இருக்கிறார்கள்?

கலைஞரா? நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்வார்கள் என்று அப்பொழுதும் அவர் அறிவிப்பார். பிறகு, மத்திய அரசைப் புரிந்துகொள்வார்(?!). பிறகு மறுபடி சரியான முடிவை எடுக்க வேண்டி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுவார் - இந்த மாசம், இந்த வாரம், இதுவரைக்கும் என்ன எவனும் தொட்டதில்ல என்கிற வின்னர் பட வடிவேல் காமெடியைப் போல. காகிதம் எதையும் சாதிக்காது மக்களே! இப்பொழுது, உலகத் தமிழினத் தலைவர் என்ற பட்டப்பெயரைச் சூடிக்கொள்ளவும், தமிழ்நாட்டில் இருக்கும் பணத்தையெல்லாம் தன் குடும்பத்திற்கே உரித்தாக்கவும் விரும்புகிற தேர்தல் காலத் தமிழர் கலைஞர் மக்களின் கோபத்தை எதிர்கொள்ள பயந்து மருத்துவமனையில் போய் ஒளிந்துகொண்டுள்ளார். தனது மந்திரிகளுக்கு அவசியப்பட்ட துறைகளுக்காக சண்டப்பிரசண்டம் செய்து சதிராடிய இந்த சூரப்புலி உண்மையில் தமிழுக்காகவோ, தமிழருக்காகவோ செய்ததென்ன? ஒருமுறை அவரே சொன்னார், ''தேனெடுத்தவன் புறங்கையை நக்காமலா இருப்பா"னென்று. இவருடைய பம்மலாட்டத்தையெல்லாம் பார்த்தால் ரொம்பவே நக்கியிருப்பார் போலிருக்கிறேதே...

பட்டினிப் போராட்டத்தின் மூலம் களம் இறங்கியிருக்கும் சட்டக்கல்லூரி மாணவர்களே... உங்கள் போராட்டம் வெற்றிபெற சகதமிழனாக நின்று வாழ்த்துகிறேன். உங்களோடு களம் இறங்க முடியாமைக்கும் வருந்துகிறேன். ஈழத் தமிழர் பிரச்னை என்றில்லை, காவிரியில் தண்ணீர் விடச்சொல்லும் போராட்டமென்றாலும் சரி, தமிழ்நாட்டிற்காதவரான போராட்டம் எதுவாக இருந்தாலும் சரி, முதலில் களம் காண்பவர்கள் நீங்கள், வழக்கறிஞர்களும்தான். இந்த முறையும் நான்கு மாதங்களுக்கு முன்பாகவே களத்தில் இறங்கியவர்கள் இந்த இரண்டு தரப்பும்தான். உங்களுடைய இந்த உணர்வை மழுங்கடிக்கவே திட்டமிட்டு இந்திய உளவுத்துறை ஜாதிய உணர்வைத் தூண்டிவிட்டு, அம்பேத்கர் சட்டக்கல்லூரி அனர்த்தத்திற்கு வழிவகுத்திருக்கலாம் என்பது என் சந்தேகம். உலகம் முழுக்க மக்களுக்கான புரட்சிகரப் போராட்டங்களில் முன்கையெடுப்பவர்களாக இருந்தது மாணவர்கள் என்கிற ஜாதிதான். அதேபோல், தமிழ்நாட்டிலும் உங்களுக்கு முந்திய தலைமுறையொன்று இதுபோன்ற ஒரு சூழலில், இதுபோல் குடியரசு தினத்திற்கு முன்பு களம் கண்டுதான் காங்கிரஸ் உள்ளிட்ட தேசியக் கட்சிகளைத் தமிழ் மண்ணிலிருந்து விரட்டியடித்தது.

ஆக, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தருணம் உங்கள் கைகளுக்கு மறுபடியும் வந்து சேர்ந்திருக்கிறது. பொதுவாக உலக சரித்திரத்தில் இப்படியெல்லாம் நடப்பதில்லை. கடந்த முறை நடந்ததுபோல், உங்கள் போராட்டத்தின் பலன்களை சுயநலமிகள் திருடிக்கொள்ள விட்டுவிடாதீர்கள். போராட்டத்தின் பலன்களை அபகரித்து ஆட்சிக்கு வந்த தி.மு.க. முதலில் செய்த விசயம் மாணவர்கள் அரசியல் ஈடுபாடு கொள்ளக்கூடாது என சட்டம் போட்டதுதான். ஆட்சிக்கு வந்த அது, தமிழின உணர்வுகளை மழுங்கடித்து, ஒட்டுமொத்த தமிழினத்தையும் மகஜர் கொடுக்கும் ஜாதியாக மாற்றியது. அந்த மரபை அடித்து உடையுங்கள். மனு கொடுக்கச் சொல்பவன் எவனாக இருந்தாலும், அவனை நம்பாதீர்கள். நமக்குள்ளிருக்கும் ஜாதி, மதம் போன்ற வேறுபாடுகளை எரித்துக்கொள்ள இதுதான் தருணம்.

உண்ணாவிரதத்தையெல்லாம் தூக்கியெறிந்துவிட்டு களம் காணுங்கள். உண்மையில், இலங்கையில் இந்திய ராணுவ நடவடிக்கை என்பது தமிழர்களுக்கெதிரானது மட்டுமல்ல. ஒட்டுமொத்த இந்தியர்களுக்குமே எதிரானது. சிங்களச் சிப்பாய்களிடம் கற்றுக்கொள்கிற பாலியல் நுணுக்கங்களைத்தானே அவர்கள் அசாமில் அப்பாவிப் பெண்களிடம் பரிசோதித்துப் பார்த்தார்கள்! விடுதலைப்புலிகளை ஒடுக்குவதற்கான சிங்கள வன்முறை நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டு வடகிழக்கு மாநிலப் போராளிகளிடம் பயன்படுத்திக் கூர் பார்த்தார்கள்! போதாதற்கு, ஹைட்டியில் சமாதானப் பணிக்காக அனுப்பப்பட்ட ஐ.நா.வின் ராணுவத்திலிருந்து இந்திய மற்றும் இலங்கை ராணுவம் அவரவர்களுடைய பாலியல் நடவடிக்கைகளுக்காக அடித்துத் துரத்தப்பட்டிருப்பதிலிருந்து என்ன தெரிகிறது - இந்தக் கூட்டணி கொள்கைக்க்கூட்டணியல்ல, பாலியல் கூட்டணி என்றல்லவா!, ஆக இந்திய - இலங்கை இராணுவக் கூட்டு என்பது இந்தியர்களின் அடிப்படை மனித உரிமைகளுக்கும் கூட எதிரானதாக இருப்பதால், அகில இந்திய அளவில் மாணவர்கள், ஜனநாயக அமைப்புகளையும் உங்கள் பின்னால் திரட்டுங்கள்.
இதையெல்லாம் மக்களே செய்ய முடியும். ஆனால், அவர்கள் சரியான தலைமை இல்லாமல் இருக்கிறார்கள். உங்கள் மத்தியிலிருந்து தலைவர்களை உருவாக்குகள். உங்கள் போராட்டத்தை சட்டக்கல்லூரி மாணவர்கல் என்ற இடத்திலிருந்து அனைத்து மாணவர்கள் என்று மாற்றுங்கள். உங்களிடமிருக்கும் வேகமும், மக்களிடமிருக்கும் கோபமும் இணைந்து தமிழக வரலாற்றை அடியோடு மாற்றட்டும். ஆன்பலம், பணபலம், அதிகார வெற்றியை உடைத்து எறியுங்கள். உங்களால் மட்டுமே இது முடியும். ‘நாங்கள் தமிழ் மாணவர்கள், தமிழ்நாட்டின் உயிரானவர்கள், இங்கு தமிழினம் அமைதிகொண்டிருந்தால் ஏடுகள் தூக்கி படிப்போம். எங்கள் தமிழர்க்கின்னல் விளைந்தால் எரிமலையாகி வெடிப்போம்‘ என்ற காசி அனந்தனின் பாடலை ஓர் அறிவாயுதமாக ஏந்துங்கள்.. என் உடலை காவல்துறை அடக்கம் செய்துவிட முயலும். விடாதீர்கள். என் பிணத்தைக் கைப்பற்றி, அதை புதைக்காமல் ஒரு துருப்புச் சீட்டாக வைத்திருந்து போராட்டத்தைக் கூர்மைப்படுத்துங்கள். எனக்கு சிகிச்சையோ, போஸ்ட்மார்டமோ செய்யப்போகும் தமிழ்நாடு மருத்துவக் கல்லூரி மாணவர்களே.. உங்கள் கையால் அறுபட நான் புண்ணியம் செய்திருக்க வேண்டும். காரணம், அகில இந்திய அளவில், மருத்துவக் கல்வியில் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக உயர்சாதி மாணவர்கள் போராடிக்கொண்டிருக்க, தன்னந்தனியாக நின்று, மருத்துவக் கல்வியில் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவாகப் போராடியர்களல்லவா நீங்கள்? எனக்கு செய்வதெல்லாம் இருக்கட்டும். நம் சகோதரர்களான ஈழத்தமிழர்களுக்கு உங்கள் பங்குக்கு என்ன செய்யப் போகிறீர்கள்?
தமிழீழம் என்பது தமீழத்தின் தேவை மட்டுமே அல்ல, அது தமிழகத்தின் தேவையும் கூட காரணம், இராமேஸ்வரம் மீனவர்கள், உலகில் ஆடு, மாடுகளைப் பாதுகாப்பதற்குக் கூட சட்டமும், அமைப்புகளும் இருக்கின்றன. இராமேஸ்வரம் தமிழனும், ஈழத்தமிழனும் மாட்டைவிட, ஆட்டைவிடக் கேவலமானவர்கள்? எல்லை தாண்டி போகும் மீனவர்கள், புலிகள் என்ற சந்தேகத்தின் பேரில் தாக்கப்பட்டு வருவதாக இந்திய மீடியா திட்டமிட்டு பிரச்சாரம் செய்து வருகிறது. இவர்களெல்லாம் செய்தித்தாளே படிப்பதில்லையா? சென்னையின் கடற்கரைகளில் அடிக்கடி தைவான் நாட்டை சேர்ந்த மீனவர்கள் வழிதெரியாமல் வந்த்வர்கள் என்று கைது செய்யப்படுகிறார்கள். பல ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் தூரத்திலிருக்கும் தைவான் மீனவன் வழிதவற முடியுமென்றா, வெறும் பன்னிரெண்டு மைல் தூரத்திற்குள் இராமேஸ்வரம் தமிழன் வழிதவறுவது நம்புவது மாதிரியில்லையாமா?

தமிழ்நாட்டில் வாழ்ந்து வரும் வெளிமாநிலங்களைச் சேர்ந்த சகோதர்களே...
உங்கள் சொந்த மாநிலத்தில் கூட இல்லாத நிம்மதியோடும், பாதுகாப்போடும் வாழக்கூடிய மாநிலம் தமிழ்நாடு தான் என்பது உங்களுக்கு அனுபவத்தால் தெரிந்திருக்கும். நாங்கள் இன்று பெரும் இக்கட்டை எதிர்நோக்கியிருக்கிறோம். ஈழத்திலிருந்துக்கும் எங்கள் சகோதரர்கள் இந்தியர் என்னும் நம் பெயரைப் பயன்படுத்திதான் நம் அரசால் கொலை செய்யப்படுகிறார்கள். இந்தப் போராட்டத்தில் நாங்கள் தனித்துவிடப்படுவதை இந்திய அரசு விரும்புகிறது. அப்படி ஆக்கக்கூடாதென நாங்கள் விரும்புகிறோம். ஆகவே, போராடிக்கொண்டிருக்கும் எங்கள் சகோதரர்களுக்கு உங்கள் ஆதரவும் உள்ளதென மத்திய அரசுக்குத் தெரியப்படுத்துங்கள். அரசுகளில் அங்கம் வகிக்கக்கூடிய உங்கள் தேசிய இனங்களைச் சேர்ந்தவர்களை எம் கரத்தை பலப்படுத்துவதோடு, எதிர்காலத்தில், ஒரு நவநிர்மாண் சேனாவோ, ஸ்ரீராம் சேனாவோ தமிழ்நாட்டில் உருவகவிருக்கும் ஆபத்தைத் தவிர்க்கும் என்பது என் கருத்து.

தமிழ்நாடு காவல்துறையிலிருக்கும் இளைஞர்களே...

உங்கள் மீது எனக்கு இருக்கும் மதிப்பு கொஞ்சம் நஞ்சமல்ல, காரணம், தமிழுக்காக மற்றவர்கள் என்ன செய்தார்களோ, அலுவலர்களை ஐயா என அழைப்பது போன்ற நடைமுறை ரீதியில் தமிழை வாழ வைத்துக்கொண்டிருப்பவர்கள் நீங்கள்தான். மக்களுக்காகப் பாடுபடவேண்டும், சமூக விரோதிகளை ஒழுத்துக்கட்ட வேண்டும் என்பதுபோன்ற உன்னத நோக்கங்களுக்காகத்தான் நீங்கள் காவல்துறையில் இணைந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். ஆனால், அதை செய்ய விடுகிறதா ஆளும் வர்க்கம்? உங்களை சிறுசிறு தவறுகள் செய்ய விடுவதன் மூலம் தன்னுடைய பெருந்தவறுகளை மறைத்துக்கொள்ளும் அதிகார வர்க்கம், உங்களை, எந்த மக்களுக்காகப் பாடுபட நீங்கள் விரும்பினீர்களோ, எந்த மக்களுக்காக உயிரையும் கொடுக்கலாம் என்று தீர்மானித்தீர்களோ, அந்த மக்களுக்கெதிராகவே, பயிற்றுவிக்கப்பட்ட அடியாள்களாக மாற்றுகிறது. டெல்லி திகார் ஜெயிலைப் பாதுகாப்பது தமிழக போலீஸ்தான். இந்தியாவில் பழமையான காவல்துறையான தமிழக காவல்துறை சிறப்பாக செயல்பட்டு வரும் காவல்துறைகளில் ஒன்று. ஆனால் அந்த மதிப்பை உங்களுக்குக் கொடுக்கிறதா இந்திய அரசாங்கம்! மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தமிழகம் வந்து திரும்பிப்போகையில், சென்னை விமான நிலையத்தில், அவருக்கான பாதுகாப்பை வழங்க அனுமதிக்க மறுத்திருக்கிறார்கள் மத்திய காவல் அதிகாரிகள். ஏனென்று கேட்டதற்கு, ராஜீவ் காந்தியை நீங்கள் பாதுகாத்த லட்சணம் தான் தெரியுமே என்று கிண்டல் செய்திருக்கிறார்கள். ராஜீவ்காந்தியைத் தமிழக காவல்துறையால் காப்பாற்ற முடியவில்லை என்பது எவ்வளவு உண்மையோ, அதே அளவுக்கு உண்மை, ராஜீவோடு இறந்தவர்களில் பலர் அப்பாவி போலீஸ்காரர்கள் என்பது. உங்கள் அர்ப்பணிப்புணர்வு கேள்விக்காப்பாற்பட்டது. ஆனால் மேற்படி வெண்ணெய் வெட்டி வீரரர்கள் - அதுதான், இந்திய உளவுத்துறை - ராஜீவின் உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்ற தகவலை அறிந்தபோதும் மெத்தனமாக இருந்தது என்பது பின்னர் அம்பலமானதல்லவா... இதுவரை காலமும் நீங்கள் அப்பாவி மக்களுக்கெதிராக இருந்தாலும் தமிழகத்தின் பெருமைகளில் ஒன்றாகத்தான் இருக்கிறீர்கள். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தஇந்த தருணத்தில், நீங்கள் மக்கள் பக்கம் இருந்தால் மட்டுமே மக்களிடம் இழந்திருக்கிற பெருமையை மீட்டெடுக்க முடியும். ஒருமுறை சக தமிழர்களுக்காக அர்ப்பணித்துப்பாருங்கள். மக்கள் உங்களை தங்கத்தட்டில் வைத்து தாங்குவார்கள். தமிழனின் நன்றி உணர்ச்சி அளவிடற்கரியது. தன்னுடைய சொந்தக்காசை வைத்து அணை கட்டிக்கொடுத்தான் என்பதற்காகவே அவனுக்கு கோயில் கட்டி. தன் பிள்ளைகளுக்கு அவன் பெயரை வத்துக் கொண்டாடிக்கொண்டிருக்கிறான் முல்லையாற்றின் மதுரை மாவட்டத்தமிழன். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், கொந்தளிக்கப் போகும் தமிழகத்தில், மத்திய அரசு அதிகரிகளுக்கு ஒத்துழைக்க மறுப்பது, ரா, சி.பி.ஐ போன்ற அமைப்புகளைச் சேர்ந்தவர்களை உள்ளூர் மக்களுக்கு அடையாளம் காட்டுவதும்தான். இதை மட்டுமாவது செய்யுங்கள். மற்றதை மக்கள் பார்த்துக்கொள்வார்கள்.

களத்தில் நிற்கும் தமிழீழ மக்களே, விடுதைலைப்புலிகளே...

அனைத்துக்கண்களும் இப்போது முல்லைத்தீவை நோக்கி. தாய்த்தமிழகம் உணர்வுபூர்வமாக உங்கள் பக்கம்தான் நிற்கிறது. வேறு ஏதாவது செய்ய வேண்டும் எனவும் விரும்புகிறது. ஆனால் என்ன செய்வது உங்களுக்கு அமைந்தது போன்ற உன்னத தலைவன் எங்களுக்கில்லையே... ஆனால், நம்பிக்கையை மட்டும் கைவிடாதீர்கள். இதுபோன்ற கையறுகாலங்கள்தான். தமிழகத்திலிருந்து அப்படி ஒருவர் இந்தக் காலத்தில் உருவாகலாம் அதுவரை, புலிகளின் கரங்களை பலப்படுத்துங்கள். 1965ல் நடந்த இந்தி எதிர்ப்புப் போரை சில சுயநலமிகளின் கையில் ஒப்படைத்ததால்தான் தமிழக வரலாறு கற்காலத்திற்கு இழுபட்டுள்ளது. அந்தத் தவறை நீங்கள் செய்து விடாதீர்கள்.

அன்பிற்குரிய சர்வதேச சமூகமே, நம்பிக்கைகுரிய ஒபாமாவே,

உங்கள் மீது எங்களுக்கு இன்னும் நம்பிக்கை இருக்கிறது. ஆனால், இறையான்மை கொண்ட ஒரு குடியரசு தம் குடிமகனை இனஒதுக்கல் மூலமாக கொடுமைப்படுத்தாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. வசதிக்காக அமெரிக்காவின் கடந்த காலத்தையே எடுத்துக்காட்டாக சொல்லலாம். உலகப்புகழ் பெற்ற குத்துச்சண்டை மாவீரன் முகமதலி சொன்னானே, என் சருமத்திலிருக்கும் கொஞ்ச வெண்மையும் கற்பழிப்பின் மூலமாகவே வந்திருக்குமென்று... நீங்கள் அமைதியாக இருக்கும் வரை இந்தியா வாயே திறக்காது. ஒட்டுமொத்த தமிழர்களும் அழிக்கப்பட்ட பிறகு வேண்டுமானால் அது நடக்கும். அதுவரை, இந்தியாவின் வாயைப் பார்த்துக்கொண்டிருக்கப் போகிறீர்களா? வன்னியில், விடுதலைப்புலிகளூக்கு எதிரான போர்தான் நடக்கிறது என்கிறார்கள். புலிகள் மக்களைக் கேடயமாகப் பயன்படுத்துகிறார்காள் என்கிறார்கள். அப்படியானால் அரசு சொன்ன பகுதிக்கு வந்த மக்களை ஏன் கொலை செய்தார்கள்? இது ஒன்று போதுமே, தமிழ்மக்கள் விடுதலைப்புலிகளைச் சார்ந்து நின்றாலும் சரி, இலங்கை அரசைச் சார்ந்து நின்றாலும் சரி, தமிழர்கள் என்ற காரணத்திற்காகவே அவர்கள் கொல்லப்படுகிறார்கள் என்பதற்கு. இது இனப்படுகொலை இல்லையா? இந்தியா, பாகிஸ்தான், சீனா ஆயுதம் கொடுத்தும், ஜப்பான் பணம் கொடுத்தும், கூடுதலாக, இந்தியா நாட்டாமை செய்தும் தமிழர்களைக் கொள்கின்றனரென்றால். நீங்கள் உங்கள் மெளனத்தின் மூலமாகவும், பாராமுகத்தின் மூலமாகவும் அதே கொலையைத்தான் செய்துகொண்டிருக்கிறீர்கள் என்பதை ஏன் உணரவில்லை? ஆயுதம் தாங்கி போராடுவதால் மட்டுமே யாரும் தீவிரவாதியாகிட மாட்டார்கள். அறத்திற்கே அன்பு சார்பென்ப அறியார். மறத்திற்கும் அஃதே துணை என்று பாடியுள்ளான் எங்கள் திருவள்ளூவர்.

புலிகள் ஆயுதங்களைக் கீழே போட வேண்டும் என்கிறார் ஜெயலலிதா - என்னவோ பிரச்சினையே புலிகள் ஆயுதம் அடுத்ததால்தான் வந்தது என்பதைப் போலெ.. உணமையில், புலிகள் தமிழீழ இன அழிப்பிலிருந்து உருவாகி வந்தவர்களே தவிர, காரணகர்த்தாக்கள் அல்லர்(they are not the reason: just an outcome)

இந்திய அரசு இந்தப் பிரச்சினையில் ஈடுபட்டிருப்பது வெளிப்படையாகாத வரை, இலங்கைப் பிரச்சினை உள்நாட்டுப் பிரச்சினை. அதில் தலையிட முடியாது என்றது. சீனா, பாகிஸ்தான் அமெரிக்கா போன்ற நாடுகள் இலங்கையில் ஆதிக்கம் பெறுவதைத் தடுப்பதற்காக செய்வதாகச் சொன்னது. நாடாளுமன்றத்தில் தாக்குதல் நடத்திய, மும்பை தொடர்வெடிகுண்டுகள், பிறகு அண்மையில் நடந்த தாக்குதல் எனப் பலவாறாக இந்திய மக்களைக்கொண்று குவித்த பாகிஸ்தானோடு இணைந்து கொண்டு தமிழர்களைக் கொண்று குவிக்கிறது. அப்படியானால், பாகிஸ்தானின் இந்திய மீதான பயங்கரவாதமென்பது இந்தியா-பாகிஸ்தான் இருதரப்பு அதிகார வர்க்கங்களும் தங்கள் மக்களைச் சுரண்ட பரஸ்பர புரிதலுடன் உருவாக்கிக் கொண்ட ஒன்று என்ற எம் சந்தேகம் ஒருபக்கம் இருக்க, இப்போது, விடுதலைப்புலிகள் தீவிரவாதிகள் அதனால்தான் சண்டை என்கிறது. ராஜீவ் காந்தியைக் கொன்றார்கள் என்கிறது. ராஜீவ்காந்தி ஒரு கவுன்சிலரோ, மாவட்டச் செயலாளரோ அல்ல. அவ்ரை ஏற்கனவே ஒருமுறை கொலை செய்யும் முயற்சி இலங்கையில் நடைபெற்றிருந்த போதும் அந்தக் கொலைகாரன் விசாரிக்கப்படவில்லை. ராஜீவ்காந்தியைக் கொல்ல முயன்ற அந்த சிங்கள வீரன் ஆகியோரையும் குற்றம் சாட்டப்பட்டவர்களாக இணைத்துக்கொண்டு மறுபடியும் விசாரிக்கப்பட வேண்டும் என்பது என் கோரிக்கைகளில் ஒன்று. ராஜீவ் மீது புலிகளுக்கு வருத்தம் இருந்திருக்கலாமே தவிர, கோபம் இருந்திருக்க வாய்ப்பில்லை. காரணம், ராஜீவ் இந்திராவின் புதல்வர். இந்திரா, தமிழீழத்தின் சிறுதெய்வங்களில் எம்.ஜி.ஆருக்குப் பக்கத்திலிருப்பவர்.
இந்தியா சொல்லும் காரணங்கள் அடிக்கடி மாறுவதிலிருந்தே இந்தியா நியாயத்திற்குப் புறம்பாகத்தான் இந்தப்போரில் ஈடுபட்டிருப்பது அம்பலமாகி இருக்கிறது. இப்படிப்பட்ட ஒரு சூழலில் நீங்கள் ஏன் நேரடியாகத் தலையிடக்கூடாது? புலிகள் போர்நிறுத்தத்தைப் பயன்படுத்தி ஆயுதம் குவிக்கிறார்கள் என்றது இலங்கை. சந்திரிகாவோ, ரணிலோ, மகிந்தாவோ கடந்த காலங்களில் ஒரு கடவுளாக அல்ல, மனிதர்களாகக்கூட நடந்துகொண்டதில்லை. இவர்கள் ஒரு நிர்பந்தத்தின் பெயரில் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டுவிட்டார்கள். என்பதால் மட்டுமே போராளிகள் ஆயுதங்களை ஒப்படைத்துவிட வேண்டும். புனரமைப்புப் பணிகளில் ஈடுபடக்கூடாது என்று எதிர்பார்ப்பது என்னவகை நியாயம்? தாங்கள் நேர்மையாக நடந்துகொள்வோம் என்ற நம்பிக்கையை உண்டாக்குவது மூலமாக மட்டுமே போராளிகளை-ஆயுதத்தைக் கீழே வைக்கச்செய்ய முடியும். கடந்த கால அரசுகள் எவையும் அப்படி செயல்படவில்லை. உதாரணம் ரணில்- கருணா. ஆனால், புலிகள் போர்நிறுத்தத்தைப் பயன்படுத்திக்கொண்டு செய்தது ஆயுதம் வாங்கியது மட்டுமல்ல, அது காலாகாலமாக நடப்பதுதானே- ஓர் அரசு நிர்வாகத்தையே உருவாக்கியுருக்கிறார்கள். சர்வதேசத்தின் கண்களில் இது தீவிரவாதமா? அப்பாவித்தமிழர்களைக் காப்பதற்காகத்தான் போரிடுவதாக பசப்புகிறது இந்தியா. ஆயுத தளபாடங்களும், உளவு விமானங்களும்தான் இலங்கை போகின்றனவே தவிர, இந்தியாவால் அனுப்பப்பட்ட ஒரு பாராசெட்டமால் மாத்திரையைக் காட்டச் சொல்லுங்கள் பார்க்கலாம். இந்த லட்சணத்தில், தமிழீழ மக்களுக்கான வசதிகளை இலங்கை அரசு செய்யுமாம். அதற்கு இந்தியா உதவுமாம்... வேலிக்கு ஓணான் சாட்சி! இப்போது சர்வதேச செஞ்சுலுவைச் சங்கத்தின் ஆம்புலன்ஸ்களைத் தாக்கினார்களே, அவர்களும் விடுதலைப்புலிகளா? ப்ரான்சின் 17 மனித உரிமையாளர்களைக் கொலை செய்தார்களே, அவர்களும் விடுதலைப்புலிகளா? சீனாவின் டாங்கிகள், இந்தியாவின் உளவு விமானங்கள், பாகிஸ்தானின் ஆர்டிலரிகள் மட்டுமல்ல... இப்போது எம்மக்களைக் கொலைசெய்து வருவது சர்வதேச சமூகத்தின் மெளனமும்தான் என்பதை எப்போது உணர்வீர்கள்-நியாயத்தின்பால் பெருவிருப்பு கொண்ட ஒரு மக்கள் சமூகம் பூமியிலிருந்து முற்றாகத் துடைத்தழிக்கப்பட்ட பிறகா? அபாரிஜின்கள், மாயா, இன்கா வரிசையில் நாங்களும் சேர்க்கப்படுவது உங்கள் நோக்கமென்றால், எங்கள் பழங்கதைகள் ஒன்றின்படி ஒவ்வொருநாளும் ஏதேனும் ஒரு வீட்டிலிருந்து ஒருவர் வந்து உங்கள் முன்னால் தற்கொலை செய்து கொள்கிறோம்... எங்கள் சகோதரிகளையும், குழந்தைகளையும் விட்டுவிட்டுச் சொல்லுங்கள். தாங்க முடியவில்லை. அவர்களெல்லாம் மனமார சிரிப்பதை ஒருநாள் பார்ப்போம் என்ற நம்பிக்கையில்தான் நாங்கள் போராடிக் கொண்டிருப்பதே. ஒரு பேச்சுக்கு ஒத்துக்கொள்வதென்றாலும்கூட, விடுதலைப்புலிகள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்றாலும் அப்படி ஒரு தண்டனையை வழங்கும் யோக்கியதை இந்தியாவுக்கோ, இலங்கைக்கோ கிடையாது.

காலம் கடந்து வழங்கப்படும் நீதி அநீதியைவிடக் கொடுமையானது.

1. இந்தியா உடனடியாக தமிழீழத்தின் பகுதிகளிலிருந்து தன் துருப்புகளைத் திரும்பப் பெற்றுக்கொள்வதோடு, மேற்கொண்டு செயற்கைக்கோள் உதவிகள், ராடார் போன்ற உதவிகளைச் செய்யக்கூடாதென்று சர்வதேச சமூகத்தால் கண்டிக்கப்பட வேண்டும். இலங்கையோடு இந்தியா அரசு நடந்தும் முக்கியத்துவமற்ற பேச்சுப்பரிமாற்றங்கள்கூட சர்வதேச சமூகம் மூலமாகவே நடக்க வேண்டும். தமிழக மக்களிடமும், உலகெங்கும் பரந்து வாழும் தமிழீழத்தாரிடமும் இந்தியா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்.

2. ஐநா பொதுச்செயலாளரான பான் கி மூன், தொடர்ந்து தன் தாயகமான சீனாவிற்கு ஆதரவான நிலைப்பாட்டிலிருந்து, ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு வருவதால், ஈழம் தொடர்பான முடிவெடுக்கும் அதிகாரம் அவருக்கு வழங்கப்படக்கூடாது.

3. இலங்கை அரசு எந்தெந்த நாடுகளிடமெல்லாம் கோரப்பட்டு புலிகள்மீது தடை விதிக்கப்பட்டதோ அந்தந்த நாடுகளில் புலிகள் மீதான தடை நீக்கப்பட்டு, தடை செய்யப்பட்ட அமைப்பின் உறுப்பினர் என்ற குற்றத்திற்காக சிறையிலிருக்கும் அதன் உறுப்பினர்கள் எதுவித நிபந்தனையுமற்று உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்.

4. புலிகளின் உறுப்பினர்கள் மீதான பாஸ்போர்ட் தொடர்பான குற்றங்கள் மன்னிக்கப்பட்டு, அவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும்.

5. புலிகளோடு தொடர்புடையது என்னும் குற்றச்சாட்டின் பேரில் தடை செய்யப்பட தொழில் நிறுவனங்களின் உரிமம் மீண்டும் அளிக்கப்படுவதோடு, தக்க நட்ட ஈடும் வழங்கப்பட வேண்டும்.

6. ராஜீவ்காந்தி கொலை வழக்கு இண்டர்போலால் விசாரிக்கப்பட்டு, உண்மையான குற்றவாளிகள் இனம்காணப்பட வேண்டும்.

7. பிரணாப் முகர்ஜி, கோத்தபாய ராஜபக்க்ஷே, சந்திரிகா, உதயணகார, கேகலிய ரம்புக்வெல, பசில்ராஜப்க்ஷ மகிந்த, பொன்சேகா போன்றோர் நார்கோ அனிலிசிஸ் சோதனைக்குப்பட வேண்டும்.

8.அமைக்கப்படபோகிற தமிழீழத்தை அங்கீகரிக்கிற உரிமையை மட்டுகே சர்வதேசம் மேற்கொள்ளலாமே தவிர, அது யாரின் தலைமையில் அமையவேண்டும என்பதை தமிழீன மக்கள் தான் முடிவுசெய்வார்கள்

9. புலிகள் கை பலவீனமான நேரத்தில், மலையக மக்கள் மீது நடந்த வந்தாக்குதல், எதிர்காலத்தில் அப்பகுதிகளில் மீண்டும் ஒரு பாரிய இன அழிவு ஏற்படுத்தப்படுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியிருப்பதால், மலையக மக்கள் தமிழீழத்தோடு இணைய விரும்புகிறார்களா என்பதை வாக்கெடுப்பு மூலம் அறிந்து அதன்படி செயல்பட வேண்டும் இந்த விசயத்தில் மலையக மக்களின் முடிவே இறுதியானது.

10. சென்னையில், குடிபோதையில் அப்பாவித் தமிழர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்து, நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட டக்ளஸ் தேவானந்தாவின் தண்டணைக்காலம் பூர்த்தியாகும் காலத்திற்கும் இலங்கைக்குத் தப்பிச்சென்று விட்டதால், அவர் கைது செய்யப்பட்டு, தமிழக போலிசார் வசம் ஒப்படைக்கப்பட வேண்டும்.

11. பத்திரிகையாளரான லசந்தவின் கொலைக்குக் காரணமான அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும்.

12. தமிழ்நாட்டிற்கு தஞ்சம் புகுந்திருக்கும் சிங்கள பத்திரிகையாளர்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்.

13.தமிழ்நாட்டிற்கு அகதிகளோடு அகதியாக வந்த சிங்களத்தம்பதியர் மீதான பாஸ்போர்ட் குற்றச்சாட்டு நீக்கப்பட்டு, அவர்களும் அகதிகளாக அங்கீகரிக்கப்பட வேண்டும்.

14. சுட்டுக் கொலை செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் குடும்பங்களுக்கான வாழ்வாதரங்கள் உறுதி செய்யப்பட வேண்டும்.

என்றும் அன்புடன்,

அநீதிகளுக்கெதிரான உங்கள் சகோதரன்,கு.முத்துக்குமார், கொளத்தூர், சென்னை-99

அருமைத்தமிழ் மக்களே, அநீதிகளுக்கெதிரான போராட்டத்தில் நம் சகோதர்களும், பிள்ளைகளும் அறிவாயுதம் ஏந்தியிருக்கிறார்கள். நான் உயிராயுதம் ஏந்தியிருக்கிறேன். நீங்கள் நகலாயுதம் ஏந்துங்கள். ஆம், உங்கள் கையில் கிடைத்திருக்கும் இந்தத் துண்டறிக்கையை நகலெடுத்து, உங்கள் நண்பர்கள், உறவினர்கள், மாணவர்கள் வசம் கொடுத்து, போராட்டத்திற்கான ஆதரவைப் பெருகப் பண்ணுங்கள் நன்றி.


*********************


பதிவுலக நண்பர்களுக்கு ,

இந்த அறிக்கையை உங்கள் வலைப்பூவிலும் ஒரு தனிப்பதிவாய் போடலாமே. முத்துக்குமரனின் இறுதி அறிக்கை அனைவரையும் சென்றடைய உதவுவோம்.

வாசக நண்பர்கள் மின்னஞ்சலில் இந்த அறிக்கையை உங்களுக்கு தெரியந்த நண்பர்களுக்கு அனுப்புங்கள். சென்றடயட்டும் எட்டுத்திக்கும் எம் சகோதரனின் குரல்.

*********************

Sunday, January 18, 2009

இந்தியத் துடுப்பாட்ட அணிக்கு எச்சரிக்கை!

இலங்கை நமது முக்கிய நட்பு நாடு என்பது தாங்கள் அறிந்ததே...
இலங்கைத் துடுப்பாட்ட அணி வெற்றி பெற நாம் உதவாவிட்டால், பாகிஸ்தான், சீனா உட்பட்ட நமது எதிரி நாடுகளின் உதவியை இலங்கை அணுகக்கூடும். எனவே இலங்கை அணி வெற்றிபெற நாம் கட்டாயம் உதவியாகவேண்டும் என்பதை நினைவில் கொண்டு துடுப்பாட்டம் ஆடவும்...

இலங்கை நமது நட்பு நாடு என்பதால், இலங்கை அணி அடையும் தோல்விகள் நமது தோல்வியாகவே நாம் கருத வேண்டும். அதே போல் இலங்கை அணியின் வெற்றி நமக்கும் வெற்றியே. எனவே, நீங்கள் இலங்கையில் விளையாடப் போகும் அனைத்து ஆட்டங்களிலும் தோல்வியடையவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். இலங்கை அணியின் தோல்வி நமது தோல்வி என்பதை நினைவில் கொண்டு ஆடவேண்டும் என எச்சரிக்கிறேன்!

பதிவுக்கான லேபிள்கள் : அரசியல், துடுப்பாட்டம், இதுக்குமேல லேபிள் போடச் சொன்னா எதாவது திட்டிருவேன்..

Wednesday, December 31, 2008

2008 ஐப் பின்னோக்கி

இன்று 2008 இன் இறுதி நாள்... பதிவர்களில் பலர் 2008 ஆம் ஆண்டைப் பின்னோக்கிப் பார்த்து இடுகைகளை எழுதியுள்ளனர்....

என் பங்குக்கு நானும் 2008 ஐப் பின்னோக்கிப் பார்த்தேன்... அது தான் இந்த இடுகை...
நான் பார்த்ததை நீங்களும் பாருங்களேன்...

Monday, December 8, 2008

ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகள் - ஒரு அலசல்

டெல்லி:

நமது தேர்தல் முறை சரியில்லை என்பது மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப் பட்டுள்ளது. 40% ஓட்டுக்கள் பெற்ற கட்சி இருக்கும் போது 39% ஓட்டுக்கள் மட்டுமே பெற்ற காங்கிரஸ் ஆட்சிக்கு வருவது கேலிக்கூத்தானது. நமது தேர்தல் முறையை உடனே மாற்றியாகவேண்டும்!

(ஓட்டு சதவீதம் உலகின் ஒரே நடுநிலைத் தொலைக்காட்சியான சன் தொலைக்காட்சியின் செய்திகளில் சொல்லப்பட்டது. சரியா என நான் வேறு எங்கும் பார்த்து உறுதிப்படுத்த வில்லை)

மத்தியப் பிரதேசம்:

தேர்தல் முழுக்க முழுக்க நியாயமாக நடந்துள்ளது!
ஜெய் ஸ்ரீராம்!!!

ராஜஸ்தான்:

இங்கு தேர்தல் நியாகயமாக நடக்கவில்லை. மத்தியில் ஆட்சியில் இருக்கும் காங்கிரஸ், இங்கு வெற்றிபெற அரசு அதிகாரத்தை முழுமையாகப் பயன்படுத்தியும் மிகவும் சிரமப்பட்டே வெற்றி பெற முடிந்திருக்கிறது.

சட்டீஸ்கர்:

காங்கிரஸ் தனது ஆட்சி அதிகாரத்தை முழுமையாகப் பயன்படுத்தியும், அதையெல்லாம் தாண்டி பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது!

மிசோரம்:

No Comments!

ஜெய் ஸ்ரீராம்!
இலைக்காரன் வாழ்க!
மோடிஜீ வாழ்க!
விரைவில் ராமராஜியம் அமையும்!!!!!!!

Wednesday, December 3, 2008

விஜயகாந்த்திடம் ஆட்சியைக் கொடுப்போம்!

அசாதாரண தருணங்களில் அசாதாரண நடவடிக்கைகள் தேவைப்படுகிறது. அதுவும் அசாதாரண தலைமையின் கீழ் அது நடந்தால்தான் அவை சாத்தியமாகும்.

மீண்டும் ஒருமுறை இந்திய அரசியல் தலைமை நமக்கு தோல்வியைக் கொடுத்துள்ளது. இரு முனைகளில் நாம் இப்போது நெருக்கடிகளை சந்தித்துக் கொண்டிருக்கிறோரம். ஒன்று தீவிரவாதம், இன்னொன்று பொருளாதாரம்.

பெருகி வரும் தீவிரவாதத் தாக்குதல்களால் இந்தியாவின் உலகளாவிய பொருளாதார வாய்ப்புகள் சிதறிப் போகும் வாய்ப்புள்ளது. இந்தியாவின் வளர்ச்சி தடைபட்டால், லட்சக்கணக்கான இந்தியர்களின் கனவுகள் தவிடுபொடியாகும் அபாயம் உள்ளது.

இந்த நிலையை நாம் தாண்டி வர வேண்டும் என்றால், மிகப் பெரிய மாற்றம் தேவைப்படுகிறது.

மேல் மட்டத்திலிருந்து இந்த மாற்றம் நிகழ வேண்டும். புதிய அரசியல் சக்தியை உருவாக்கும் வல்லமை நம்மிடம் இல்லை. அதற்கான வசதியும் இல்லை. அதற்கு பல ஆண்டுகளாகும்.

நமக்கு இப்போது என்ன தேவையென்றால், என்.எஸ்.ஜி. வீரர்களைப் போல அதிரடியான ஒரு நடவடிக்கை. மும்பை தாக்குதலில் போலீஸார் லத்தியுடன் தடுமாறிக் கொண்டிருந்தபோது மின்னலென வந்து, தீவிரவாதிகளுடன் கடுமையாக சண்டையிட்டு அனைத்தையும் காலி செய்து விட்டு ஹோட்டல்களை திருப்பிக் கொடுத்து விட்டுப் போனார்களே, அதுபோல, ஒரு விரைவான அதிரடியான மாற்றம் தேவை.

அதைச் செய்ய சரியான நபர் விஜயகாந்த் மட்டுமே. விஜயகாந்த் இங்கேயே இருக்கிறார், உடனடியாகவும் கிடைப்பார். இந்த மாற்றத்திற்காக நாம் பல ஆண்டுகள் காத்திருக்கத் தேவையில்லை.

இந்தியாவின் ஜனநாயகத்தில் 3 முக்கிய குழப்பங்கள் அல்லது பிரச்சினைகள் உள்ளன. ஒன்று அரசியல்வாதிகள். அரசியல் துறையை முற்றிலும் தூய்மைப்படுத்த வேண்டியுள்ளது.

2வது அதிகாரவர்க்கம். பிரிட்டிஷ் காலத்து ரூல்ஸ் அன்ட் ரெகுலேஷன்களுடன் உலவிக் கொண்டிருக்கும் அதிகாரவர்க்கத்துப் போக்கை மூட்டை கட்டி வைக்க வேண்டும் அல்லது கலைத்துப் போட வேண்டும்.

3வது கல்விக்கு அதிக முதலீடு. இது நடந்தால் நிச்சயம் நல்லவர்களை அரசியலுக்குத் தேர்ந்தெடுக்கும் பக்குவம் கொண்ட பலரை நம்மால் உருவாக்க முடியும்.

இந்த இடத்தில்தான் விஜயகாந்த்தை நாம் நினைத்துப் பார்க்க வேண்டும். அவரிடம் ஐந்து ஆண்டுகள் நாட்டை ஒப்படைக்கலாம். அந்தக் காலத்தை அவரும், அவரது டீமும் திறமையாக பயன்படுத்தி, சிறந்த கொள்கைகள், சிறந்த நிறுவனங்கள், சிறந்த அடிப்படைக் கட்டமைப்பு, சிறந்த ஆட்சி ஆகியவற்றைத் தருவார்கள். நிச்சயம் இது ஒரு நல்ல மாற்றமாக இருக்கும்.

விஜயகாந்த் தலைமையிலான அரசு வந்தால் ..

- தேசிய பாதுகாப்பு சிறப்பாக இருக்கும்.

- அடிப்படைக் கட்டமைப்பு உலகத் தரத்திற்கு மாறும். நல்ல சாலைகள், அதி வேக ரயில்கள், மின் உற்பத்தி ஆலைகள் எல்லாமே சிறப்பாக மாறும்.

- தரமான கல்விக்கு வழி பிறக்கும்.

- கல்வி நிறுவனங்கள் நேர்மையாகவும், சிறந்த தரத்துடனும் விளங்கும்.

- 6000 புதிய நகரங்கள் உருவாகும்.

வித்தியாசமான சிந்தனைகளும், விவேகமான தீர்மானங்களும்தான் இப்போதைய முக்கிய தேவை.

பாஜகவும், காங்கிரஸும் தங்களது மோதல்களை மறந்து, விஜயகாந்த்தயும், 300 தரமான எம்.பிக்களையும் நாடாளுமன்றத்திற்கு அனுப்ப முன்வர வேண்டும்.

ராகுல் காந்தியும், நரேந்திர மோடியும், மாயாவதியும் 2014ம் ஆண்டு வரை காத்திருக்கட்டும், பரவாயில்லை. அதற்குள் விஜயகாந்த் தலைமையில் நாடு விஸ்வரூப வளர்ச்சியைக் கண்டிருக்கும். அவர்களுக்கு அது வசதியான இந்தியாவாகவும் இருக்கும். எனவே அவர்கள் காத்திருக்கலாம்.

இது நிச்சயம் சாத்தியமானதல்ல என்பது எனக்கு நன்றாகவே தெரியும். ஆனால் மும்பையில் நடந்து என்ன. யாரும் எதிர்பாராத புதிய வகை தீவிரவாதத் தாக்குதல். எனவே விஜயகாந்த் பிரதமர் என்பதும் சாத்தியமாகக் கூடியதுதான்.

பிரச்சினைகளைத் தீர்க்கக் கூடிய, தீர்வுகளுடன் இருக்கக் கூடிய ஒரு தலைமையிடம் நமது நாட்டை சில காலம் ஒப்படைப்போம். நமக்காக பாடுபடக் கூடிய ஒருவரிடம் ஒப்படைப்போம்.

இந்தியாவை கடந்த 60 ஆண்டுகளாக அரசியல்வாதிகளிடம் கொடுத்து விட்டோம். அடுத்த 5 ஆண்டுக்கு விஜயகாந்திடம் கொடுக்கலாமே.

முன்பு வெள்ளையர்களின் ஆட்சியிலிருந்து இந்தியா விடுபட வேண்டும் என்பதற்காக ஒரு தனி மனிதரின் பின்னால் நமது நாட்டு மக்கள் அணி திரண்டார்கள். ஒற்றுமையுடன், ஒரே குரலில் உரத்து முழக்கமிட்டார்கள். அதேபோன்ற தருணம் இப்போதும் வந்துள்ளது.

சாதனைகளை மட்டுமே சொந்தமாக வைத்திருக்கும் விஜயகாந்த் நம்மிடம் உள்ளார் என்பதே பலமான விஷயம். எனவே அவரிடம் ஆட்சியைக் கொடுப்போம். புதிய இந்தியாவை சேர்ந்து உருவாக்குவோம்!!

குறிப்புகள்:
இந்தப் பதிவுக்கும், ராஜேஷ் ஜெயின் எழுதி தட்ஸ்தமிழ் மொழிபெயர்த்துள்ள அதிமுக்கியமான இந்தக் கட்டுரைக்கும் எந்த சம்மந்தமும் இல்லை!
http://thatstamil.oneindia.in/news/2008/12/02/india-needs-ratan-tata-as-prime-minister-for-5-yea.html


2. அப்படி என்ன சாதித்தார் கேப்டன் என்று கேட்போர், தலைவரின் படங்களை இதுவரை பார்க்காதவர்களாகவே இருக்கமுடியும்..
இருப்பினும் அவர்களுக்காக , கேப்டனின் சாதனைகள் லக்கிலுக்கின் பதிவிலிருந்து:

>>>>>இடி விழுந்தவன் கூட பிழைத்துக் கொண்டதுண்டு. கேப்டனின் அடிவாங்கியவன் பிழைத்ததில்லை.

>>>>>தாயகம் படத்தில் கூட பாகிஸ்தான் தீவிரவாதிகளை அடக்க கடலூர் மாவட்டத்தில் மீனவராக வாழ்ந்துகொண்டிருந்த கேப்டனை தான் கூப்பிட்டார்கள்.நாட்டைக் காக்க மஞ்சப்பையோடு கிளம்பிய கேப்டன் பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஏகே47 போன்ற நவீன ஆயுதங்களோடு போரிட்டபோதும் தன்னுடைய இரு கால்களாலேயே எட்டி உதைத்து அவர்களை துரத்தியடித்தார்.

>>>>>நரசிம்மா படத்திலும் கூட நாடெங்கும் நாசவேலை நடத்த திட்டமிட்டிருந்த தீவிரவாதிகளை தன்னுடைய அக்னிப் பார்வையாலேயே அழித்தார். பல படங்களிலும் பாகிஸ்தான் தீவிரவாதிகளை அடக்கிய அனுபவம் கேப்டனுக்கு உண்டு.

.......
...
முழுப் பதிவு இங்கே: http://www.luckylookonline.com/2008/12/blog-post.html

Friday, November 28, 2008

நிசா புயல் - புரட்சித்தலைவியின் அறிக்கையும் கலைஞரின் கேள்வி பதிலும்..

புரட்சித் தலைவியின் போராட்ட அறிக்கை:

புயலை திசை திருப்பவும் மழையை நிறுத்தவும் எந்த நடவடிக்கையும் எடுக்காத மைனாரிட்டி திமுக ஆட்சிக்கு எதிராக தமிழகமெங்கும் அதிமுகவினர் போராட வேண்டும் என புரட்சித் தலைவி ஜெ.ஜெயலலிதா கட்டளையிட்டுள்ளார். சென்னையில் இன்று நடக்கும் போராட்டத்துக்கு புரட்சித் தலைவி ஜெ.ஜெயலலிதா தலைமை தாங்குகிறார்.

கலைஞரின் கேள்வி பதில் அறிக்கை:

புயலை திசைதிருப்பவும் மழையை நிறுத்தவும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என அம்மையார் குறை கூறியுள்ளாரே?

அம்மையாரின் ஆட்சிகாலத்தில் வந்த புயல்களுடன் நிசாவை ஒப்பிட்டுப் பார்த்தால் உண்மை தெரியும்.
நாங்கள் எடுத்த நடவடிக்கைகள் காரணமாகவே இந்தப் புயல் ஒரு வாரத்திற்குள் கரையைக் கடந்துள்ளது..

1993 ஆம் ஆண்டு அம்மையார் ஆட்சியில் இருந்த போது வந்த புயல் 9 நாட்களும், 2003 ல் வந்த புயல் 8 நாட்களும் நீடித்தது.

ஆனால் கழக ஆட்சியில் 1972 ஆம் ஆண்டில் வந்த புயலை 3 நாட்களிலும், 1989 ஆம் ஆண்டு வந்த புயலை 2 நாட்களிலும் கட்டுப் படுத்தினோம் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்

இதிலிருந்தே தெரிகிறது நாங்கள் எவ்வளவு சிறப்பாக நடவடிக்கைகள் எடுத்திருக்கிறோம் என்பது.

இதையெல்லாம், புரட்சிப்"புயலை" தனது கூட்டணியிலேயே வைத்துக்கொண்டு அம்மையார் பேசுவது தான் வேடிக்கையிலும் வேடிக்கை!

அத்துடன், அம்மையாரின் ஆட்சியில் எதிர்காலத்தில் புயலை நிறுத்த எந்தவிதத் தொலைநோக்கு முயற்சிகளும் செய்யவில்லை என்பதே தற்போதைய புயலுக்கு முக்கியக் காரணம்!

Monday, September 29, 2008

நுண்ணரசியல் -3 பில்ஸ்பெரி ரொட்டி

பில்ஸ்பெரி ரொட்டி - செய்முறை



தேவையான பொருட்கள்:
பில்ஸ்பெரி ரெடிமேட் ரொட்டி - 3


வடு மாங்காய் ஊறுகாய் - தேவையான அளவு

செய்முறை:

ப்ரீஸரில் இருந்து 3 ரொட்டிகளை எடுத்து ஒரு 30 நொடிகள் வெளியே வைக்கவும்.

மைக்ரவேவ் அவனை ஆன் செய்து
ஒரு ரொட்டி எனில் 20 நொடி
2 ரொட்டி எனில் 30 நொடி
3 ரொட்டி எனில் 45 நொடி
4 ரொட்டி எனில் 60 நொடி
செட் செய்து ரொட்டிகளை உள்ளே வைக்கவும்.


மைக்ரவேவ் அவனில் கீகீ என்று சத்தம் வந்ததும் அவனை ஆப் செய்துவிட்டு ரொட்டியை வெளியே எடுக்கவும்.

தேவையான அளவு வடுமாங்காய் ஊறுகாயை பாட்டிலில் இருந்து எடுத்து தட்டில் போட்டுக்கொள்ளவும்.


வேற என்ன... டீவி ல சூப்பர் சிங்கர் வைச்சிப் பாத்துக்கிட்டே சாப்பிடுங்க!

குறிப்புகள் சில:

இந்த இடுகையை யார் வேண்டுமானாலும் மீள் பதிவு செய்து கொள்ளலாம். மீள் பதிவு செய்வோர் தயவு செய்து எங்கும் என் பெயரையோ அல்லது இந்த இடுகைக்கான தொடுப்பையோ சேர்த்துவிட வேண்டாம்..

இந்தக் ரொட்டியை யார் வேண்டுமானாலும் செய்து பார்க்கலாம். ஆனால் செய்யத் தொடங்கும் முன் இங்கு வந்து நன்றி சொல்லிப் பின்னூட்டமிட்டுச் செல்லவேண்டும்

நீங்கள் சமைத்த ரொட்டி நன்றாக இருந்தால் அதற்குறிய பாராட்டுக்கள் அனைத்தும் எனக்கே. ஆனால் நன்றாக இல்லையெனில், அதற்கு நான் பொறுப்பல்ல. அதற்கான பொறுப்பை நீங்கள் அல்லது பில்ஸ்பெரி நிறுவனம் ஏற்றுக்கொள்ளவேண்டும்!

இந்த இடுகையில் இருக்கும் நுண்ணரசியல் என்ன என்பதைக் கண்டுபிடிப்போருக்கு ஒரு மாதத்திற்குத் தேவையான பில்ஸ்பெரி ரொட்டி வித் வடுமாங்காய் ஊறுகாய் பரிசாக வழங்கப் படும்.

Sunday, September 28, 2008

காளான் குழம்பு! - செய்முறை

காளான் குழம்பு! - செய்முறை

தேவையான பொருட்கள்:

சிறிது சிறிதாக அல்லது நடுத்தரமாக அல்லது பெரிதாக வெட்டிய காளான் - 1பாக்கட்.


பொடிப் பொடியாக நறுக்கிய தக்காளி - 2


பொடிப் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் - 1


நறுக்கிய வெள்ளைப்பூண்டு -1


மிளகாய்ப் பொடி அல்லது மீன் மசாலா அல்லது கோழி மசாலா - தேவையான அளவு


மக்காச்சோள எண்ணை - தேவையான அளவு


உப்பு, கறிவேப்பிலை, மஞ்சள்பொடி - தேவையான அளவு

செய்முறை
குக்கரில்(ப்ரஸ்ஸர் பேனின் விசில் தேடி எடுக்கமுடிந்தால் ப்ரஸ்ஸர் பேன் பயன்படுத்தலாம்) கொஞ்சம் எண்ணை விட்டு ஸ்டவ்வில் வைக்கவும்.

எண்ணெய் சூடானதும், கடுகு தாளிக்கவும். கடுகு வெடித்து முடிந்ததும் கறிவேப்பிலை போடவும்.

கறிவேப்பிலை வெடித்து முடித்ததும் வெங்காயம் போட்டு வதக்கவும்.


வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும், தக்காளி சேர்த்து வதக்கவும்.


தக்காளி வதங்கியதும் காளான் சேர்த்து ஒரு 2 நிமிடம் வதக்கவும்.
பின் மிளகாய்ப்பொடி, மஞ்சள், உப்பு சேர்த்து மசால் வாசம் போகும்வரை வதக்கவும்.

மசால் வாசம் போகும்வரை வதக்கியதும், 1/2 டம்ளர் நீர் சேர்த்து குக்கரை மூடி, 3 விசில் வரும் வரை வைக்கவும்.


இடைப்பட்ட நேரத்தில் எலக்ட்ரிக் குக்கரில் 1 டம்ளர் அரிசி வைக்கவும்.

3 விசில் வந்ததும் ஸ்ட்டவ்வை அனைத்துவிட்டு, ஆவி முழுதும் வெளியேறும் வரை காத்திருந்து குக்கரைத் திறந்தால் காளான் குழம்பு தயார்.



சோறு தயாராக எப்படியும் ஒரு 15 நிமிடம் ஆகும்.. அதற்குள் குளித்து முடித்துவிட்டு வந்துவிடவும்.

இன்று மாலை முஸ்தபாவில் வாங்கப் போகும் பில்ஸ்பெரி ரெடிமேட் சப்பாத்திக்கும் இந்தக் குழம்பு நன்றாக இருக்கும்!

குறிப்புகள் சில:

குழம்பு நன்றாக இருந்தால் 2 நாட்கள் வைத்திருந்து சாப்பிடவும். நன்றாக இல்லையெனில், கோவியார், பாரி.அரசு போன்ற நல்லவர்களைக் கூப்பிட்டு சாப்பாடு போட்டு உடனே குழம்பைக் காலி செய்துவிடவும்.

இந்த இடுகையை யார் வேண்டுமானாலும் மீள் பதிவு செய்து கொள்ளலாம். மீள் பதிவு செய்வோர் தயவு செய்து எங்கும் என் பெயரையோ அல்லது இந்த இடுகைக்கான தொடுப்பையோ சேர்த்துவிட வேண்டாம்..

இந்தக் குழம்பை யார் வேண்டுமானாலும் செய்து பார்க்கலாம். ஆனால் செய்யத் தொடங்கும் முன் இங்கு வந்து நன்றி சொல்லிப் பின்னூட்டமிட்டுச் செல்லவேண்டும்

நீங்கள் சமைத்த குழம்பு நன்றாக இருந்தால் அதற்குறிய பாராட்டுக்கள் அனைத்தும் எனக்கே. ஆனால் நன்றாக இல்லையெனில், அது உங்களின் கவனக்குறைவால் மட்டுமே இருக்கும். எனவே விழும் திட்டுக்கள் அனைத்தும் உங்களுக்கே!

இந்த இடுகையில் இருக்கும் நுண்ணரசியல் என்ன என்பதைக் கண்டுபிடிப்போருக்கு ஒரு மாதத்திற்குத் தேவையான காளான் குழம்பு பரிசாக வழங்கப் படும்.