Friday, November 28, 2008

நிசா புயல் - புரட்சித்தலைவியின் அறிக்கையும் கலைஞரின் கேள்வி பதிலும்..

புரட்சித் தலைவியின் போராட்ட அறிக்கை:

புயலை திசை திருப்பவும் மழையை நிறுத்தவும் எந்த நடவடிக்கையும் எடுக்காத மைனாரிட்டி திமுக ஆட்சிக்கு எதிராக தமிழகமெங்கும் அதிமுகவினர் போராட வேண்டும் என புரட்சித் தலைவி ஜெ.ஜெயலலிதா கட்டளையிட்டுள்ளார். சென்னையில் இன்று நடக்கும் போராட்டத்துக்கு புரட்சித் தலைவி ஜெ.ஜெயலலிதா தலைமை தாங்குகிறார்.

கலைஞரின் கேள்வி பதில் அறிக்கை:

புயலை திசைதிருப்பவும் மழையை நிறுத்தவும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என அம்மையார் குறை கூறியுள்ளாரே?

அம்மையாரின் ஆட்சிகாலத்தில் வந்த புயல்களுடன் நிசாவை ஒப்பிட்டுப் பார்த்தால் உண்மை தெரியும்.
நாங்கள் எடுத்த நடவடிக்கைகள் காரணமாகவே இந்தப் புயல் ஒரு வாரத்திற்குள் கரையைக் கடந்துள்ளது..

1993 ஆம் ஆண்டு அம்மையார் ஆட்சியில் இருந்த போது வந்த புயல் 9 நாட்களும், 2003 ல் வந்த புயல் 8 நாட்களும் நீடித்தது.

ஆனால் கழக ஆட்சியில் 1972 ஆம் ஆண்டில் வந்த புயலை 3 நாட்களிலும், 1989 ஆம் ஆண்டு வந்த புயலை 2 நாட்களிலும் கட்டுப் படுத்தினோம் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்

இதிலிருந்தே தெரிகிறது நாங்கள் எவ்வளவு சிறப்பாக நடவடிக்கைகள் எடுத்திருக்கிறோம் என்பது.

இதையெல்லாம், புரட்சிப்"புயலை" தனது கூட்டணியிலேயே வைத்துக்கொண்டு அம்மையார் பேசுவது தான் வேடிக்கையிலும் வேடிக்கை!

அத்துடன், அம்மையாரின் ஆட்சியில் எதிர்காலத்தில் புயலை நிறுத்த எந்தவிதத் தொலைநோக்கு முயற்சிகளும் செய்யவில்லை என்பதே தற்போதைய புயலுக்கு முக்கியக் காரணம்!