Showing posts with label சமையல்குறிப்பு. Show all posts
Showing posts with label சமையல்குறிப்பு. Show all posts

Sunday, September 28, 2008

காளான் குழம்பு! - செய்முறை

காளான் குழம்பு! - செய்முறை

தேவையான பொருட்கள்:

சிறிது சிறிதாக அல்லது நடுத்தரமாக அல்லது பெரிதாக வெட்டிய காளான் - 1பாக்கட்.


பொடிப் பொடியாக நறுக்கிய தக்காளி - 2


பொடிப் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் - 1


நறுக்கிய வெள்ளைப்பூண்டு -1


மிளகாய்ப் பொடி அல்லது மீன் மசாலா அல்லது கோழி மசாலா - தேவையான அளவு


மக்காச்சோள எண்ணை - தேவையான அளவு


உப்பு, கறிவேப்பிலை, மஞ்சள்பொடி - தேவையான அளவு

செய்முறை
குக்கரில்(ப்ரஸ்ஸர் பேனின் விசில் தேடி எடுக்கமுடிந்தால் ப்ரஸ்ஸர் பேன் பயன்படுத்தலாம்) கொஞ்சம் எண்ணை விட்டு ஸ்டவ்வில் வைக்கவும்.

எண்ணெய் சூடானதும், கடுகு தாளிக்கவும். கடுகு வெடித்து முடிந்ததும் கறிவேப்பிலை போடவும்.

கறிவேப்பிலை வெடித்து முடித்ததும் வெங்காயம் போட்டு வதக்கவும்.


வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும், தக்காளி சேர்த்து வதக்கவும்.


தக்காளி வதங்கியதும் காளான் சேர்த்து ஒரு 2 நிமிடம் வதக்கவும்.
பின் மிளகாய்ப்பொடி, மஞ்சள், உப்பு சேர்த்து மசால் வாசம் போகும்வரை வதக்கவும்.

மசால் வாசம் போகும்வரை வதக்கியதும், 1/2 டம்ளர் நீர் சேர்த்து குக்கரை மூடி, 3 விசில் வரும் வரை வைக்கவும்.


இடைப்பட்ட நேரத்தில் எலக்ட்ரிக் குக்கரில் 1 டம்ளர் அரிசி வைக்கவும்.

3 விசில் வந்ததும் ஸ்ட்டவ்வை அனைத்துவிட்டு, ஆவி முழுதும் வெளியேறும் வரை காத்திருந்து குக்கரைத் திறந்தால் காளான் குழம்பு தயார்.



சோறு தயாராக எப்படியும் ஒரு 15 நிமிடம் ஆகும்.. அதற்குள் குளித்து முடித்துவிட்டு வந்துவிடவும்.

இன்று மாலை முஸ்தபாவில் வாங்கப் போகும் பில்ஸ்பெரி ரெடிமேட் சப்பாத்திக்கும் இந்தக் குழம்பு நன்றாக இருக்கும்!

குறிப்புகள் சில:

குழம்பு நன்றாக இருந்தால் 2 நாட்கள் வைத்திருந்து சாப்பிடவும். நன்றாக இல்லையெனில், கோவியார், பாரி.அரசு போன்ற நல்லவர்களைக் கூப்பிட்டு சாப்பாடு போட்டு உடனே குழம்பைக் காலி செய்துவிடவும்.

இந்த இடுகையை யார் வேண்டுமானாலும் மீள் பதிவு செய்து கொள்ளலாம். மீள் பதிவு செய்வோர் தயவு செய்து எங்கும் என் பெயரையோ அல்லது இந்த இடுகைக்கான தொடுப்பையோ சேர்த்துவிட வேண்டாம்..

இந்தக் குழம்பை யார் வேண்டுமானாலும் செய்து பார்க்கலாம். ஆனால் செய்யத் தொடங்கும் முன் இங்கு வந்து நன்றி சொல்லிப் பின்னூட்டமிட்டுச் செல்லவேண்டும்

நீங்கள் சமைத்த குழம்பு நன்றாக இருந்தால் அதற்குறிய பாராட்டுக்கள் அனைத்தும் எனக்கே. ஆனால் நன்றாக இல்லையெனில், அது உங்களின் கவனக்குறைவால் மட்டுமே இருக்கும். எனவே விழும் திட்டுக்கள் அனைத்தும் உங்களுக்கே!

இந்த இடுகையில் இருக்கும் நுண்ணரசியல் என்ன என்பதைக் கண்டுபிடிப்போருக்கு ஒரு மாதத்திற்குத் தேவையான காளான் குழம்பு பரிசாக வழங்கப் படும்.